Header Ads



'அமெரிக்க, நேச நாடுகளும் மனித உயிர்களோடு விளையாடும் திடலாக முஸ்லிம் நாடுகள்'

(தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அஸாத் சாலி)

முஸ்லிம் நாடுகள் அனைத்திலும் இன்று அரசியல் கொந்தளிப்பான நிலை திட்டமிட்ட மேற்கத்திய சக்திகளால் தூண்டி விடப்பட்டுள்ளமை அம்பலமாகி வருகின்றது.முஸ்லிம் மக்களின் நிம்மதியான வாழ்வை சீர்குலைக்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கமாக இருந்து வருகின்றமையும் தெளிவாகியுள்ளது. இல்லாத குற்றச்சாட்டை முன் வைத்து ஈராக் மீது பாரிய படைபலத்துடன் பிரவேசித்து அந்த நாட்டை ஆக்கிரமித்தார்கள்.பாரிய அழிவை ஏற்படுத்தும் இரசாயன ஆயுதங்கள் அங்கிருப்பதாகக் கூறிதான் ஈராக் மீது படைபலம் பிரயோகிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை அங்கு அணு அளவு கூட இரசாயன ஆயுதம் கண்டுபிடிக்கப் படவில்லை. மாறாக அங்கு ஓடவிடப்பட்ட இரத்த ஆற்றை இன்னும் நிறுத்திக் கொள்ள முடியாமல் உலகம் தவிக்கின்றது.ஈராக்கிய மக்கள் இன்று நிம்மதி,பாதுகாப்பு,அமைதி,என எல்லாவற்றையும் இழந்து பொருளாதார ரீதியாகவும் சீரழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஈராக்கிய நிலைக்கு தீர்வு காணப்படாத நிலையில் தான் அமெரிக்கா தலைமையிலான மேலைநாட்டு நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானுக்குள் தலிபான்களைத் தேடி புறப்பட்டனர்.இதனால் ஆப்கானிஸ்தான் மக்கள் மட்டுமன்றி பாகிஸ்தான் மக்களில் ஒரு பகுதியினரும் கூட தமது அன்றாட வாழ்வாதாரங்களை இழந்து வறுமையில் வாடும் நிகை;குத் தள்ளப்பட்டுள்ளனர்.இதற்கப்பால் இந்தப் பிரதேசத்தில் மனித உயிர்கள் துச்சமென மதிக்கப்பட்டு அவை அன்றாடம் ஆளில்லா வேவு விமானங்களுக்கு பலி கொடுக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் மனித உயிர்களோடு விளையாடும் விளையாட்டுத் திடலாக ஆப்கானிஸ்தான், யெமன் ஆகிய நாடுகளும் பாகிஸ்தானின் ஒரு பகுதியும் மாறிவிட்டன.

இத்தோடு இந்த விளையாட்டு நிற்கவில்லை டுனீஷியாவில் தொடங்கி லிபியா, எகிப்து, ஆகிய நாடுகளில் மக்களை ஆட்சியாளர்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டு அதற்கு அரபு உலக வசந்தம் என்று அழகான பெயரும் இட்டார்கள். சிரியாவிலும் பஹ்ரேனிலும், சவூதி அரேபியாவின் ஒரு பகுதியிலும் இந்த அரபு உலக வசந்தம் வெற்றியளிக்காத நிலையில் இன்னமும் மக்கள் எழுச்சிப் போராட்டம் என்ற பெயரில் மக்களின் நிம்மதிக்கும் அமைதிக்கும் ஆப்பு வைக்கப்பட்டுள்ளது.இதில் சிரியாவிலும், எகிப்திலும் நிலைமை மிகவும் மேசமடைந்துள்ளது.

அரபு உலக மக்களின் அமைதி குலைக்கப்பட்டதன் பின்னணியில் மேற்குலக நாடுகளின் சதி இருந்துள்ளமை இப்போது மெல்ல மெல்ல கசியத் தொடங்கியுள்ளது. லிபியாவின் தலைவர் கடாபியைக் சுட்டுக் கொன்றவர் அப்போது பிரன்ஸின் ஜனாதிபதியாக இருந்த நிக்கலஸ் சர்க்கோஸியால் அனுப்பப்பட்ட அவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான உளவாலி என்பது தெரியவந்துள்ளது. ஆனால் இந்த விடயத்தை லிபியாவின் தற்போதுள்ள அடிவருடி ஆட்சியாளர்களும் மேற்குலகமும் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டன.

எகிப்தில் இஸ்லாமிய முறையிலான ஆட்சியமைப்பு ஒன்றுக்காக மிக நீண்டகாலம் போராடிவந்த சகோதரத்துவ அமைப்பு (இஃவானுல் முஸ்லிமீன்) மக்களின் அமோக ஆதரவுடன் ஆட்சிபீடம் ஏறியும் கூட ஒரு வருடத்தில் அந்த ஆட்சிக்கும் சாவு மணி அடிக்கப்பட்டுவிட்டது. எகிப்திய வரலாற்றில் முதற்தடவையாக தேர்தல் ஒன்றின் மூலம் மக்கள் ஆதரவுடன் ஆட்சிபீடம் ஏறிய ஜனாதிபதி இன்று கைதியாக காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கும் பின்னணியில் செயற்பட்டுள்ளவர் கெய்ரோவில் நிலைகொண்டுள்ள அமெரிக்கத் தூதுவர்தான் என்ற உண்மை தற்போது புலப்படத் தொடங்கியுள்ளது.

அரபு நாடுகளின் இன்றைய நிலை வினோதமாக உள்ளது. ஒருபுறம் ஆட்சி கவிழ்ப்புக்காக மக்கள் உயிரைப் பலிகொடுத்து போராடிக் கொண்டுள்ளனர். மறுபுறம் தாங்கள் போராடி உருவாக்கிய ஆட்சியை தக்க வைப்பதற்காகவும் மக்கள் போராட வேண்டியுள்ளது. இந்த இரண்டாவது போராட்டத்தில் மக்களை இராணுவம் வேட்டையாடுகின்றது. தமது சொந்த மக்களையே ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லும் அளவுக்கு எகிப்திய இராணுவத்தை தூண்டிவிடுபவர்கள் யார்? அவர்களது பின்னணி சக்தி என்ன என்பது பற்றி முஸ்லிம் நாடுகள் சிந்திக்க வேண்டும்.அரபு உலக மக்கள் மத்தியில் ஊடுறுவியுள்ள இந்த சக்தியை அந்த மக்கள் இனம் காண வேண்டும். 

இஸ்லாமிய மாநாட்டுத் தாபனம் போன்ற பிராந்திய ரீதியான சக்தி வாய்ந்த அமைப்புக்கள் ஒன்றுபட்டு ஒட்டு மொத்த அரபு உலகையும் பீடித்துள்ள இந்த அமைதியீனத்துக்கும் கொந்தளிப்புக்குமான காரணத்தைக் கண்டறிய வேண்டும்.அரபு உலகில் அமைதி நிலவ வேண்டும் அதுதான் உலகின் ஏனைய நாடுகளில் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்களுக்கு கௌரவமாகவும் பாதுகாப்பாகவும் அமையும். எனவே அரபு உலகின் அமைதிக்காக,அரபு உலக மக்கள் மத்தியில் கருத்தொற்றுமைக்காக சில நாடுகளில் அவர்கள் ஏற்படுத்தியுள்ள ஆட்சிமாற்றத்திலாவது அவர்களுக்கு பூரண அiதியும் நிம்மதியும் கிடைக்க இந்தப் புனித றமழானில் நாம் பிரார்த்திப்போமாக.

No comments

Powered by Blogger.