Header Ads



அதுரலிய ரதன தேரருக்கும், ரோசி சேனாநாயக்கவுக்கும் வேறுவேறு சட்டங்களா..?

பெண்களுக்கு கூடுதல் இட ஒதுக்கீட்டை வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. 

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் போது பெண்களுக்கு 30 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென ரோசி சேனாநாயக்க கோரியிருந்தார். இது தொடர்பிலான தனிநபர் பிரேரணை ஒன்றையும் பாராளுமன்றில் சமர்ப்பிக்க முயற்சித்தார்.

எனினும் சட்ட மா அதிபரின் பரிந்துரைகள் இன்றி பிரேரணையை சமர்ப்பிக்க முடியாது என ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். 

அத்துடன் பாராளுமன்றில் பிரேரணை ஒன்றை சமர்ப்பிப்பது தொடர்பில் பின்பற்றப்பட வேண்டிய நியதிகள் பின்பற்றப்படவில்லை எனவும் இதனால் இந்த பிரேரணையை சமர்ப்பிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அண்மையில் ஜே.வி.பி.யின் அனுர குமார திஸாநாயக்க மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் அதுரலிய ரதன தேரர் ஆகியோர் சட்ட மா அதிபரின் பரிந்துரைகள் இன்றி தனிப்பட்ட நபர் பிரேரணைகளை சமர்ப்பித்திருந்தனர். 

தமது உத்தேச பிரேரணைக்கு மட்டும் இவ்வாறு தடைகள் ஏற்படுத்தப்படுகின்றனவா என ரோசி சேனாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். எனினும் பாராளுமன்ற நியதிகளின் அடிப்படையிலேயே கருத்து வெளியிட்டதாக தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. ஆமாம் பயங்கரவாதிகளான அரசாங்கத்தின் சகாக்களுக்கு ஒரு சட்டமும் நியாயமும் அவர்களை எதிர்க்கும் தரப்பினர்க்கு அவர்கள் நினைப்பதுதான் சட்டம்.

    ReplyDelete

Powered by Blogger.