13 குறித்து சிவ்சங்கர் மேனனுடன் முஸ்லிம் காங்கிரஸ் கலந்துரையாடல்
இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான கட்சியின் உயர்மட்டக்குழுவுடன் செவ்வாய்க்கிழமை (09) நண்பகல் 12 மணிக்கு கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடாத்திய கலந்துரையாடலின் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இக் கலந்துரையாடலில் அமைச்சர் ஹக்கீமுடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி. ஹஸன் அலி, கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான முத்தலீப் பாவா பாரூக், பைசல் காசீம் ஆகியோரும் பங்குபற்றினர்.
இதன்போது, தற்போதைய அரசியல் சூழ்நிலை சம்பந்தமாகவும், சமகால அரசியலில் சர்ச்சைக்குரிய பிரச்சினையாக உருவாகியுள்ள 13 ஆவது திருத்தம் தொடர்பாகவும், அது குறித்து அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள விடயங்கள் தொடர்பாகவும் ஏறத்தாழ 45 நிமிடங்கள் விரிவாக ஆராயப்பட்டது. இந்த கலந்துரையாடலின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் அங்கு வந்திருந்த ஊடகவியலாளரிடம் கருத்து தெரிவிக்கும் போது கூறியதாவது,
13 ஆவது திருத்தத்தில் எந்த மாற்றமும் செய்யப்படுவதற்கு இடமளிப்பதில்லை என்ற எங்களது நிலைப்பாட்டை நாம் அவருக்கு விளக்கிக் கூறினோம்.
இதனை ஓர் இனத்திற்கோ, ஒரு சமூகத்திற்கோ, ஒரு பிராந்தியத்திற்கோ மட்டும் உரிய பிரச்சினையாக நோக்கக் கூடாது என்றும் இலங்கையில் வாழும் அனைத்துச் சமூகங்களுக்கும், முழு நாட்டுக்கும் பொதுவான முக்கியமான அம்சமாக இந்திய அரசாங்கம் இதனைக் கருதுவதாகவும், இதில் மாற்றங்களைச் செய்யத் துணிவது நாட்டு மக்களின் சகஜ வாழ்க்கையில் பாதிப்புகள் ஏற்படுத்தக் கூடியதென்றும், இதில் குறிப்பாக அதிகாரப் பகிர்வில் எத்தகைய மாற்றத்தையும் செய்வதானால் அதனை பற்றி தீர கலந்தாலோசிக்கப்பட வேண்டும் என்றும், அவசரப்பட்டு எந்தவிதமான முடிவுக்கும் இலங்கை அரசாங்கம் வந்துவிடக் கூடாது என்பதில் இந்தியா கடும் நிலைப்பாட்டில் இருப்பதாகவும், அதனை இலங்கை அரசுக்கு தெரிவித்திருப்பதாகவும் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மேனன் எங்களிடம் திட்டவட்டமாக தெரிவித்தார். அதில் எந்தக் குறைப்பையும் செய்வதற்கு தமது அரசாங்கத்தின் பலமான அதிருப்தியையும் அவர் எங்களிடம் வெளியிட்டார்.
வடக்கிலும், கிழக்கிலும் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் தற்போதைய நிலை பற்றியும் எங்களது அபிப்பிராயங்களையும் நாங்கள் அவருடன் பறிமாறிக்கொண்டோம். அவை செயல்படுத்தப்படும் விதம் குறித்தும் நாங்கள் கருத்துத் தெரிவித்தோம். இங்குள்ள இந்திய தூதரகத்துடனும் நாம் இது தொடர்பில் கருத்துப் பரிமாறல் செய்ய எண்ணியுள்ளோம்.
பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கும், நடைமுறைகளுக்கும் முற்றிலும் மாற்றமாக தெரிவுக்குழுவில் பிரதான அரசியல் கட்சியொன்றான முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதியொருவர் இடம்பெறச் செய்யப்படாதது பற்றியும் பேசப்பட்டது. இதனால் ஒரு பாரதூரமான தவறு இழைக்கப்பட்டிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.


Post a Comment