Header Ads



இலங்கை கொடியுடன் சர்வதேச கடற்பரப்பில் சீன கப்பல்கள்

சிறிலங்கா  கொடியுடன், அனைத்துலக கடற்பரப்பில் மீன்பிடிக்க சீன மீன்பிடிக் கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  சீன நிறுவனம் ஒன்று சிறிலங்கா முதலீட்டுச் சபையுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள உடன்பாட்டை அடுத்தே, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

சீன நிறுவனத்தின் மீன்பிடிப் படகுகள், சிறிலங்காவின் பொருளாதார கடல் எல்லைக்கு அப்பால், அனைத்துலக கடற்பரப்பில், சிறிலங்கா கொடியுடன் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

இந்த உடன்பாட்டுக்கு அமைய, பிடிக்கப்படும் மீன்களில் 90 சதவீதம் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.  எஞ்சிய 10 சதவீத மீன்கள், கிலோ ஒன்று ஒரு டொலர் வீதம், சிறிலங்கா கடற்றொழில் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்படும். 

சீன மீன்பிடிக் கப்பல்கள், அண்மையில் திறக்கப்பட்ட டிகோவிற்ற மீன்பிடித் துறைமுகத்தில் தரித்து நின்று செயற்படும்.  சுமார் 150 அடி நீளம் கொண்ட நான்கு மீன்பிடிக் கப்பல்களை முதலில் பயன்படுத்த சீன நிறுவனம் திட்டமிட்டுள்ளது.  பின்னர், மேலும் 16 மீன்பிடிக் கப்பல்கள் பயன்படுத்தப்படும். 

தற்போது, முதற்கட்டமாக, கொண்டு வரப்பட்டுள்ள நான்கு கப்பல்கள், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அனுமதிக்காக, தெற்கு கடற்பகுதியில் தரித்து நிற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.