Header Ads



கல்முனை தனியார் பஸ் நிலையக் கட்டடம் - யார் பயன்பெறுகிறார்கள்..?


(ஏ.எல்.ஜுனைதீன்)

    கல்முனை நகரில் புதிதாகத் திறந்து வைக்கப்பட்டுள்ள (PRIVATE BUS STAND BUILDING)  தனியார் பஸ் நிலையக் கட்டடத்திற்குள் பயணிகள் அமரக்கூடியவாறு கதிரை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை என விசனம் தெரிவிக்கப்படுவதுடன் இக்கட்டடம் அழகாகக் கட்டப்பட்டு பிச்சைக்காரர்கள் படுத்து உறங்கும் இடமாக வழங்கப்பட்டிருக்கிறதா? எனவும் கேள்வி எழுப்பப்படுகின்றது.

    கல்முனை மாநகர சபையின் பராமரிப்பில் இருக்கும் இக்கட்டடம் கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் திகதி கல்முனை மாநகர மேயர் கலாநிதி சிராஸ் மீராசாகிபின் அழைப்பின் பேரில் முஸ்லிம் கங்கிரஸ் தேசியத் தலைவரும் நீதி அமைச்சருமான அல்-ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இவ்வைபவத்தில் பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைப் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

    இக்கட்டடத்தில் அலுவலக அறை ஒன்றும் மலசல கூடம் ஒன்றும் பயணிகளின் நன்மை கருதி அமைக்கப்பட்டுள்ளது. அவைகள் கூட தொடர்ந்து பூட்டப்பட்ட நிலையிலேயே காணப்படுவதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

    மாபிள் கற்கள் கொண்டு தரை அமைக்கப்பட்டுள்ள இக்கட்டடத்தில் பிச்சைகாரர்கள் உறங்கிக் கொண்டிருப்பதையும் தனியார் பஸ் சாரதிகளும் நடத்துனர்களும் கால்களை நீட்டியவாறு படுத்துக் கொண்டிருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது.

    இப் பஸ் நிலையக் கட்டடம் திறக்கப்பட்டு சுமார் 13 மாதங்களைக் கடந்துவிட்ட போதிலும் ஏன் இதுவரையும் பயணிகளின் பாவனைக்கு ஏற்றவாறு பூரணப்படுத்தப்பட்டு இக் கட்டடம் வழங்கப்படவில்லை? என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது.

No comments

Powered by Blogger.