Header Ads



இப்தார் என்ற போர்வையில்...!

(எம்.ஸித்தீக் ஹனீபா)

மீண்டும் மற்றொரு ரமழான் மாதத்தை எதிர்கொள்கின்றோம். இப்புனித மாதத்தை அலங்கரிக்க பலர் தயாராகின்றனர். இந்நிலையில் இக்கட்டுரை எழுதப்படுகின்றது.

இப்புனித மாதத்தை வழமை போன்று வரவேற்று அதனை ஏதோ ஒரு வகையில் கழித்து விடுவோம் என்ற சிந்தனையில் இருந்து நாம் செயற்படாமல் இதனை உரிய முறையில் வரவேற்று, அதன் ஊடாக பயன்பெறுவோம் என்ற நோக்கத்தில் இந்த மாதத்தை வரவேற்போம்.

யாசகர்களின் மாதம், கஞ்சி வழங்கும் மாதம், இரவு நேரங்களில் வீதி விளையாட்டுக்களில் ஈடுபடும் மாதம், அரட்டை அடிக்கும் மாதம், பகல் காலங்களில் தூங்கும் மாதம், வீண் விரயம் செய்யும் மாதம் என்று நம் சமூகத்தைக் குறைத்து மதிப்பிடும் மாதமாக பிற சமூகத்தவர்கள் எடை போடும் அளவுக்கு நாம் செயற்படுவதிலிருந்து தவிர்ந்து கொள்வது காலத்தின் தேவையாகும்.

இம்மாதத்தை அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலுக்கு வாக்குகளை அதிகரித்துக் கொள்வதற்காக எவ்வாறு பயன்படுத்துவோம் என்று திட்;டம் தீட்டுகின்றார்கள். கடந்த முறை ஆயிரம் பேருக்கு ஒரு பொது இடத்தில் இப்தாருக்கான ஏற்பாடுகளை செய்த அரசியல்வாதிகள், இம்முறை ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் இதனை ஏற்பாடு செய்வோம் என சிந்திக்கின்றார்கள்.

அரச சார்பற்ற அமைப்புக்கள், சமூக சேவை இயக்கங்கள் கடந்த முறையிலும் பார்க்க பாரிய அளவில் இப்தாரை ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதற்காக பதாதைகளை தயாரிக்கின்றார்கள். பொதுமண்டபங்களில் கடந்த காலங்களில் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வை, இம்முறை சொகுசு விடுதியொன்றில் நடத்துவதற்காக ஏற்கனவே பணத்தை ஒதுக்கி விட்டார்கள்.

சர்வமதம் என்ற போர்iவில் பிற மதஸ்தலங்களைத் தேடியும், மதகுருமார்களை இணைத்தும் இப்தார் வைபவங்களை ஏற்பாடு செய்ய தயாராகின்றனர். இவ்வாறு பல்வேறு விதமாக பலரும் இப்தார் பற்றி சிந்திப்பதை தற்போது அவதானிக்க முடிகிறது.

இவ்வாறான இப்தார் வைபவங்களுக்கு யாரை அழைப்பது? இந்த நட்சத்திர ஹோட்டல்களில் நோன்பு திறப்பவர்கள் யார்? அதில் அரைவாசிப் பேர் நோன்பு நோற்காதவர்கள் என்பதை நாம் மறந்து விடலாகாது. நோன்பு திறப்பதற்கான ஏற்பாடுகள் என்ற போர்வையில் பல்லாயிரம் அல்லது பல இட்சம் ரூபாக்களை இவர்கள் ஒதுக்குகின்றார்கள். அங்கு எந்தளவு வீண் விரயம் இடம்பெறுகின்றது என்பதை கடந்த கால இப்தார் நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களுக்குத் தெரியும்.

இஸ்லாம் காட்டிய இப்தார் இதுதானா என, மாற்று மதத்தவர்கள் குறைத்து மதிப்பிடும் அளவுக்கு நம்மவர்கள் நடந்து கொள்வது வேதனையைத் தருகின்றது. நபியவர்கள் தனது வாழ்க்கையில் வழங்கிய வழிகாட்டல்கள் இதுதானா என பிற மதத்தவர்கள் சிந்திக்கும் அளவுக்கு நமது செயற்பாடுகள் அமைந்து விடலாகாது. நாம் அறிந்தோ அறியாமலோ விதவிதமான உணவு வகைகளையும் பழங்களையும் குளிர்பானங்களையும்  இரவுச் சாப்பாட்டையும் தயாரித்து, அதனை வழங்குவதோடு நின்று விடாமல் மிகுதியை குப்பை தொட்டிகளில் போடும் அளவுக்கு நமது செய்ற்பாடுகள் அமைந்து விட்டன.

ஒரு பேரீத்தம் பழத்தைக் கூட வாங்க முடியாத நிலையில் எத்தனை ஏழைகள் அங்கலாய்க்கும் போது, நாம் நட்சத்திர ஹோட்டல்களில் யாருக்காக இப்தார் வைபவங்களை ஏற்பாடு செய்கின்றோம் என்பதை சிந்தித்து பாருங்கள். இம்முறையாவது இந்த வீண் விரயங்களை முற்றிலும் தவிர்க்கும் வழிவகைகளைக் கண்டறிய வேண்டும்.

தலைநகரிலும் அதற்கு வெளியிலும் உள்ள பள்ளிவாசல்களுக்கு வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகைக்கு சென்று திரும்பும் போது எத்தனை பேர் கையேந்தி நிற்கின்றார்கள். தலைநகரிலுள்ள பள்ளிவாசல்களிலிருந்து வெளியேறும் போது நூற்றுக் கணக்கான நம் சகோதார சகோதரிகள் அங்கு கையேந்தி நிற்கும் காட்சிகளை நம்மவர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனையைத் தருகின்றது. இவர்களின் பிரச்சினைகளைக் கேட்க இந்த பள்ளிவாசல் நிருவாகிகள் முன்வந்தார்களா?

பள்ளிவாசல்கள் நிர்மாணிக்கப்பட வேண்டும். அவை அலங்கரிக்கப்பட வேண்டும். காலத்தின் தேவைக்கேற்ப பல மாடிகளைக் கொண்ட கட்டிடங்களாக நிர்மாணிக்கப்படலாம். அவற்றில் வித்தியாசமான மின் விளக்குகளால் அலங்கரிக்கலாம். பல வர்ணங்களை பூசி நவீன தொழில் நுட்ப கருவிகளைப் பொருத்தி அங்கு வருகை தரும் மக்களுக்கு மட்டுமன்றி, ஏன்,  கடல் கடந்த நாடுகளில் வாழ்வோருக்கும் ஒளிபரப்புகின்றார்கள். ஆனால், பள்ளிவாசல்களுக்கு  வெளியே கையேந்தி நிற்கும் இவர்கள் எங்கிருந்து வந்தவர்கள், இவர்கள் ஏன் கையேந்துகின்றார்கள்? இவர்களின் நிலைமை என்னவென ஏறிட்டு பார்க்காத நமது சமூகத் தலைவர்கள், வசதி படைத்த தனவந்தர்கள், பள்ளிவாசல் நிருவாகிகள் தவறிவிடுகின்றனர்.

அங்கு யாசகம் கேட்டு வருபவர்களுள் எத்தனை இளம் சகோதரிகள் இருக்கின்றார்கள் என்பதை நோக்குவதற்கு இவர்கள் தவறி விட்டார்கள். இந்த  இளம் சகோதரிகள் வறுமையின் காரணமாக தவறான வழியில் சென்றால், இதற்கான பொறுப்பை நம் சமூகத் தலைவர்கள் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

பள்ளிசால்களுக்கு பழிங்குக் கற்களை பதிக்கின்றார்கள். அதற்கு மேல் காப்பட் விரிப்புக்களை விரிக்கின்றார்கள். அதற்கு மேல் பல அலங்கார விரிப்புக்களையும் விரிக்கின்றார்கள். இவை எதற்காக செய்யப்படுகின்றது என்பது புரியவில்லை. வறுமை, நிராகரிப்புக்கு இட்டுச் செல்வது என்பது நபி மொழி. இந்த வறிய மக்களின் துயர் துடைக்க சமூகத்தில் வசதி படைத்தவர்கள் இல்லாமல் இல்லை. வீண் விரயத்தைத் தவிர்த்து ஆடம்பரங்களைக் குறைத்து சமூகத்தில் கீழ் மட்டத்தில் உள்ளவர்களின வாழ்க்கையில் ஒளியூட்ட எதிர்வரும் ரமழான் மாதத்த்pலாவது நமது அரசியல்வாதிகள், சமூகத் தலைவர்கள், வசதி படைத்த தனவந்தர்கள் முற்படுவார்களா?

இப்தார் என்ற போர்வையில் செய்யப்படும் வீண் விரயத்தைத் தவிர்ப்போம். தேவையானவர்களை இனங்கண்டு உதவுவோம். 100 ரூபா, ஆயிரம் ரூபா நோட்டுக்களை மாற்றி கையேந்தி வருபவர்களுக்கு பெருமைக்காக பங்கிடுவதிலிருந்து தவிர்ந்து கொள்வோம்.

வசதியில்லாமல் வாழ்க்கையைக் கொண்டு நடத்த முடியாது விட்டாலும், வாய் திறக்க கூச்சப்படும் அநேக சகோதரர்கள் நம் மத்தியில் உள்ளார்கள் என்பதை உணராமல் இருக்கின்றார்கள். கடந்த காலங்களில் நாம் விட்ட பல தவறுகள் காரணமாக எம்மீது சுமத்தப்படும் குற்றச் சாட்டுக்களுக்கு பதில் கூற முடியாமல் பதுங்கிக் கொண்டிருகின்றோம்.

இந்நிலையில் தொடராக நாம் விடும் தவறுகளை உணர்ந்து செயற்படாமல் எமது வாய்களுக்கு பூட்டுப் போட்டவர்களாக இருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையை அவதானிக்கின்றோம்.

2 comments:

  1. நோன்பு எவ்வாறு மார்க்க கடமையோ அவ்வாறே நோன்பு திறப்பதும் மார்க்க கடமை என்பதை செல்லித் தெரியவேண்டியதில்லை. ஆனால் பல இடங்களில் நிகளும் “இப்தார்“ நிகழ்வைப் பார்க்கும்போது இது ஒரு இஸ்லாமிய நிகழ்வுதானா என எண்ணத்தோன்றுகிறது. ஆடம்பரம், அரசியல், பெருமை, பகட்டு, படாடோபம் போன்ற இன்னோரன்ன பின்னணிகளை கொண்டவைவையாக இப்போதய இந்நிகழ்வைப் பார்க்க முடிகிறது. கட்டுரையில் சொல்லப்பட்ட விடயங்கள் “எருமை மாட்டின் முதுகில் பெய்த இன்னுமொரு மழை“யாக இருந்து விடாமல் இஸ்லாம் சொல்லிய வரையறைக்குள் இருந்து இனிவரும் “இப்தார்“களையாவது நிறைவேற்றி அல்லாஹ்வின் அன்பையும், அருளையும் பெற்றுக்கொள்வோமாக.

    ReplyDelete
  2. masha allah... very usefull articel. Maskoor

    ReplyDelete

Powered by Blogger.