Header Ads



காத்தான்குடியில் மன்னர் அப்துல்லாஹ் பல்கலைக்கழகத்திற்கு இன்று ஒப்பந்தம்

(மர்லின் மரிக்கார்)

மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் ரிதிதென்னவில் அமைக்கப்படவிருக்கும் மன்னர் அப்துல்லாஹ் பல்கலைக்கழக கல்லூரிக்கு முதலிடவிருக்கும் சவூதிய அரேபியாவின் முன்னணி முதலீட்டாளர் அஷ்- ஷெய்க் யஹ்யா அப்துல்  அல் ராஷித் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

பன்னிரெண்டு மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டுடன் அமைக்கப் படவிருக்கும் இப்பல்கலைக்கழக கல் லூரிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று காலையில் காத்தான்குடி நகரில் கைச்சாத்திடப்படும் என்று ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் அப்துல் காதர் மஸர் மெளலானா நேற்று தெரிவித்தார்.

இப்புரிந்துணர்வு உடன்படிக்கையில் பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்வும், இளைஞர் விவகார, திறன் விருத்தி அமைச்சின் செய லாளரும், கைச்சாத்திடவுள்ளனர். இந்நிகழ்வில் அமைச்சர் டளஸ் அழகப்பெரும விஷேட அதிதியாகக் கலந்து கொள்கின்றார். அத்தோடும், தாமும் கலந்துகொள்வதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் வழிகாட்டலின் கீழ் இந்த பல்கலைக்கழக கல்லூரி ரிதிதென்னவில் ஐம்பது ஏக்கரில் அமைக்கப்படவுள்ளது. நிர்மாணப்பணிகள் யாவும் அடுத்து வரும் மூன்று வருடங்களில் நிறைவுறும்.

என்றாலும் இக்கல்லூரி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 25ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் காத்தான்குடியில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படும்.

இக்கல்லூரியில் உயர் கல்விக்காக இன, மத பேதமின்றி மாணவர்கள் சேர்க்கப்படுவர். என்றாலும் அரபு மத்ரஸாக்களில் கற்று வெளியாகும் மாணவர்களுக்கு இங்கு விஷேடமாகத் தொழில்நுட்ப கல்வி அளிக்கப்படும். அத்தோடு அரபு மொழி ஒருமொழியாகக் கற்பிக்கப்படும். இங்கு ஏனைய எல்லா பாடங்களும் கற்பிக்கப்படும். ஆனால் இதனை முஸ்லிம்கள் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.

இலங்கை முஸ்லிம் கல்வி மேம்பாட்டுக்காக ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களில் இதுவும் ஒன்று. இதனையிட்டு முஸ்லிம்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கவேண்டும் என்றார்.

சவூதிய அரேபிய முதலீட்டாளரான அஷ்ஷெய்க் யஹ்யா அப்துல் அkஸ் அல் ராஷித், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நாடு துரித அபிவிருத்தி கண்டு வருவது எமக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. அந்தவகையில் இக்கல்லூரியில் நாம் நம்பிக்கையுடன் முதலிடுகின்றோம். இந்நாட்டின் அபிவிருத்திக்கு எம்மாலான பங்களிப்புகளை நாம் நல்குவோம் என்றார்.

4 comments:

  1. கல்வியோடு தொடர்புடைய இந்த நிகழ்வில் கல்வியமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளோ, உயர்கல்வி அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளோ, மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழக செனட் சபைப் பிரதிநிதிகளோ, இலங்கைப் பல்கலைக்கழக மனியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளோ கலந்து கொள்ளாதது சிந்திக்கப்பட வேண்டிய விடயம்.

    பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கும், இளைஞர் விவகார திறன் விருத்தி அமைச்சின் செயலாளருக்கும் இடையில் கைச்சாத்திடப்படும் இந்த ஒப்பந்தம் எந்தளவுக்கு வலுவானது என்பதில் சந்தேகம் நிலவுகின்றது.

    மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தில் இடம்பெறும் இந்த சரித்திர முக்கியத்துவமிக்க நிகழ்வில் ஏன் கல்வி அமைச்சுக்களினதும், பல்கலைக்கழக நிர்வாகங்களினதும் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவில்லை? என்ற கேள்வி மக்கள் மத்தியில் நிலவுகின்றது.

    சவூதி அரேபியாவிலிருந்து வருகை தந்துள்ள அஷ்ஷெய்க் யஹ்யா அப்துல் அல் ராஷித் சவூதி அரேபியாவின் ஒரு முதலீட்டாளரே தவிர அவர் மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழகத்தின் செனட் சபை பிரதிநிதியல்ல என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    ரிதிதென்னையில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் சகாக்களால் பல ஏக்கர் காணி மாடு வளர்ப்புத் திட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்டு வருவதாக அண்மைக்காலச் செய்திகள் தெரிவிக்கின்றன.

    இந்தக் காணியில்தான் சவூதி அரேபிய முதலீட்டாளரின் 12 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியில் பல்கலைக்கழகக் கட்டிடத் தொகுதி அமையவுள்ளதா?

    அப்படியானால் ஏற்கனவே பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா காத்தான்குடி பாலமுனையில் இந்த அறபுப் பல்கலைக்கழகத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறிய 15 ஏக்கர் காணியின் நிலை என்னவானது?

    அது தனியாருக்கு விற்கப்பட்டு விட்டதா? அல்லது பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் சகாக்களால் ஆக்கிரமிக்கப்பட்ட விட்டதா?

    பொருளாதாரச் சிக்கலில் சிக்கியுள்ள நமது நாட்டக்குள் வெளிநாட்டவரின் 12 மில்லியன் அமெரிக்க டொலர் உள்வாங்கப்டுவதை ஜனாதிபதி நிச்சயம் வரவேற்கவே செய்வார். ஆனால் கட்டிடம் யாவும் கட்டி முடிக்கப்பட்ட பின் பொது பல சேனாவின் ஆட்சேபத்தினால் அறபுப் பல்கலைக் கழகம் அமைக்க முடியாமற்போகும் பட்சத்தில் இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சின் செயலாளருடன் செய்து கொள்ளப்படும் இந்த உடன்படிக்கையிலான கட்டித்தில் நாட்டின் எல்லா இனங்களையும் சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கான தொழில் பயிற்சியையே வழங்க முடியும் என்ற நிலை வந்தால் என்ன செய்வது,?

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  2. உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

    மெளலவிமார்களுக்கான இக்கலூரியில் மெளல்விமார்களுக்கென்று உயர்கல்வியாக அப்படி என்னதான் படித்துக்கொடுப்பார்கள்?
    மத்ரஸாகலில் அடிப்படைவாதம் போதிக்கப்படுகிறது, அவைகளை மூடவேண்டும் பொது பல சேனா முழங்கும் போது ஜனாதிபதியின் ஆதரவுடன் இப்படியொரு கல்லூரியா?

    சரி அப்படித்தான் என்று வைத்துக்கொண்டாலும், மெளலவிமார்களுக்கென்று எப்பாடத்திட்டத்தை முன்வைப்பார்கள்?

    அப்துர்ரஊப் மிஸ்பாஹியின் பாடத்திட்டமா? சவூதி முதலீடு என்பதற்காகவும், ஏகத்துவ மெளல்விகள் நிறைந்து காணப்படுவதாலும் ஏகத்துவ முறை பாடத்திட்டமா? அல்லது, ஜனாதிபதியின் ஆதரவு இருப்பதனால் பொதுபல சேனாவின் ஆலோசனையின் பேரில் சம்பிரதாயக் கல்விப் பாடத்திட்டமா? என்று இந்த செய்தி வெளியான நாளிலிருந்து தலையப் பிணைந்துகொண்டுதான் இருந்தேன்.

    இப்போதுதான் புரிகிறது, சவூதிப் பணத்தைச் சொறண்டுவதற்காகவும், மெள்லவிமார்களை தன்னோடு சேர்த்துக்கொள்வதற்காகவும் மெளலவிமார்களை வம்புக்கு இழுக்கும் செய்தி என்று.
    நான் சேவை செய்கிறேன் என்று சொல்லி தன்னைப் பிரபல்யப்படுத்த ஓர் ஊடகவியளாலர் மகாநாடு வேற.

    வாசகர்கள் எப்படியோ ஆனால் என்னால் பொறுக்க முடியல்ல. இன்னுமின்னும் இந்த அரசியல்வாதிகள் நம் எல்லொரையும் முட்டாள்களாக ஆக்கப்பார்க்கிறார்கள்.

    முஸ்லிம்களுக்காக பாராளுமன்றத்தில் எழுந்து பேசுவத்ற்கு வக்கில்ல. அபிவிருத்தியாம் அபிவிருத்தி.

    ReplyDelete
  3. சவுதியில் இருந்து பன்னிரண்டு மில்லியன் யூ எஸ் டொலர் கிடைக்கிறது.ஆனால் இந்தப்பணம் உலமாக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பயன்படும் என்பது உத்தரவாதப்படுத்த முடியாது. இப்படிதான் சுனாமியால் பாதிக்கப்பட்ட ஏழை முஸ்லிம்களை காட்சிபடுத்தி பேரியல் அஷரப் சவூதியில் நிதிபெற்று 500 வீடுகளைக்கட்டினார் அவற்றை முஸ்லீம்களுக்கு கொடுக்க முநைந்த போது அதற்கு எதிராக சிஹல உரிமை வழக்குதொடர்ந்து தடை செய்தது.ஹிஸ்புல்லாவும் மிகக்கவனமாக இதனை கையாளவேண்டும் அல்லாவிடின் பிக்குமார் படிக்கும் இடமாக அது மாறும் இதுவும் மகிந்த சிந்தனை தான்.கவனம்

    ReplyDelete
  4. பெரிய மேதாவி என தன்னை நினைத்துக் கொள்ளும் புவி றஹ்மதுல்லாஹ்வே! பல்கலைக்கழக கல்லூரி முன்றாம் நிலைக் கல்வி அமைச்சின் கீழ் தான் வரும். உயர் கல்வி அமைச்சின் கீழ் வராது. இது கூட தெரியாத இவர் ஒரு பத்திரிகை ஆசிரியர். வெறுமனே அரசியல் காழ்ப்புணர்ச்சிதான் இந்த விமர்சனத்திற்கு காரணம். வேண்டாத மாமியார் கை பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம். திருந்தாத ஜென்மங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.