Header Ads



இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிக்கும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிக்கும் வகையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் சில திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (18.06.13) நிறைவேற்றப்பட்டுள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் வடமாகாணசபைத் தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், 1983ஆம் ஆண்டு மே முதலாம் திகதிக்கும் 2009 மே 18ஆம் திகதிக்கும் இடையில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்கு வாய்ப்பளிக்கும் சட்டத்தைக் கொண்டுவர அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

வேறு எந்த இடத்திலும் வாக்காளர்களாகப் பதிவு செய்யாதவர்களுக்கே இந்த வாய்ப்பு வழங்கப்பட உள்ளதுடன் அதற்கான சட்டமூலமும் நீதியமைச்சரினால் நாடாளுமன்றத்தில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இடம்பெயர்ந்து வேறு மாவட்டங்களில் வாழ்வோர் சொந்த மாவட்டங்களில் வாக்காளராக பதிவு செய்வதற்கு தற்போது சட்டத்தில் இடமில்லை.

இந்த திருத்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் 1983 மே முதலாம் திகதிக்கும் 2009 மே 18ஆம் திகதிக்கும் இடையில் இடம்பெயர்ந்த 15,000 பொதுமக்கள் வடக்கில் தம்மை வாக்காளராகப் பதிவு செய்ய வழி பிறக்கும் என்று அந்த சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

Powered by Blogger.