கைதுசெய்ய அமெரிக்க படைவீரனை விடுவிக்கிறது தலிபான்
அரசியல் பாதைக்கு திரும்ப முடிவு செய்துள்ள தலிபான் இயக்கம், கத்தாரில் அதன் அரசியல் அலுவலகத்தைத் தொடங்கியிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் இயக்கத்துடன் அமைதி பேச்சுவார்தை நடத்த அமெரிக்கா தயாராகி வருகிறது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள அதிபர் ஹமீத் கர்சாய், அமெரிக்காவுடனான பாதுகாப்பு பேச்சுவார்த்தையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். ஆனாலும் அமெரிக்கா தனது நிலையில் உறுதியாக உள்ளது.
இந்நிலையில், கைதிகள் பரிமாற்றத்துக்கு முன்வந்துள்ள தலிபான் இயக்கம், 2009-ம் ஆண்டு தாங்கள் கைது செய்த அமெரிக்க ராணுவ வீரரை ஒப்படைக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. இதற்குப் பதிலாக குவாண்டனாமோ சிறையில் உள்ள தங்கள் இயக்கத்தின் 5 மூத்த தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தங்கள் வசம் உள்ள அமெரிக்க ராணுவ வீரர் செர்ஜீன்ட் பாவே பெர்க்டால் நல்ல உடல்நிலையுடன் இருப்பதாக தலிபான் செயதித் தொடர்பாளர் ஷகீன் சுகைல் தெரிவித்தார். கத்தாரின் தோகா நகரில் உள்ள தங்கள் அலுவலகத்தில் இருந்து இந்த செய்தியை வெளியிட்டுள்ள ஷகீன், ‘முதலில் சிறைபிடிக்கப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும். அதன்பின்னர் பரஸ்பர நம்பிக்கையை வளர்க்க விரும்புகிறோம்’ என்றார்.
அமெரிக்க வீரர் பெர்க்டால், 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதி கிழக்கு ஆப்கானிஸ்தானில் காணாமல் போனார். அவர் எங்கு சிறை வைக்கப்பட்டிருக்கிறார் என்ற விவரத்தை தலிபான் செய்தித் தொடர்பாளர் ஷகீன் தெரிவிக்கவில்லை.

Post a Comment