தக்ஸிம் தஹ்ரீர் அல்ல..!
(அஷ்கர் தஸ்லீம்)
ஒரு மாதத்தை நெருங்கியுள்ள துருக்கியின் தக்ஸிம் சதுக்க ஆர்ப்பாட்டம் ஆரம்பித்த ஆரம்பத்திலேயே கடும்போக்கு மதச்சார்பின்மைவாதிகள் அதனை அரபு வசந்தத்துடனும் ஹுஸ்னி முபாரக்கை பதவியிலிருந்து வீழ்த்தி தஹ்ரீர் சதுக்கத்துடனும் ஒப்பிட்டுப் பேச ஆரம்பித்தனர்.
2010 இன் இறுதியில் ஆரம்பித்து இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் அரபு வசந்தம் வட ஆபிரிக்காவின் பல நாட்டு ஆட்சியாளர்களை வீழ்த்தி ஜனநாயக இஸ்லாமியவாதிகளை ஆட்சியில் அமர்த்தியுள்ளது. வட ஆபிரிக்காவுக்கு வெளியே யெமனிலும் இது சாத்தியப்பட்டது. சிரியாவில் மாத்திரம் போராட்டம் இன்னும் நிறைவு பெறாத நிலை தொடர்கிறது.
அராஜக அரசியல் செய்த ஆட்சியாளர்களுக்கு எதிராகவே அரபுலகில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. இந்தப் பின்னணியில் துருக்கிய ஆர்ப்பாட்டங்களை அரபு வசந்தத்துடன் ஒப்பிட்டு அதனை துருக்கி வசந்தம் என்றழைப்பது பொருத்தமற்றது என்றே கருதப்படுகின்றது.
அரபுலகில் ஜனநாயகத் தேர்தல்கள் இருக்கவில்லை. சுதந்திரமான தேர்தல்கள் நடைபெறுவது அங்கு அதிசயம் என்ற நிலையிலலேயே இருந்தன. இதுதான் அரபுலக மக்களை வீதிக்குக் கொண்டு வந்து ஆர்ப்பாட்டம் செய்யத் தூண்டிய முக்கிய காரணி. துருக்கியைப் பொருத்தவரை சுதந்திரமான ஜனநாயகத் தேர்தல் அதற்குப் புதியதல்ல. தற்போதைய பிரதமர் ரஜப் தையிப் அர்தூகான் கூட சுதந்திரமான தேர்தலுக்கூடாகவே மூன்று முறை தெரிவுசெய்யப்பட்டார்.
அர்தூகானும் அவரது கட்சியும் ஆட்சியலிருப்பதை துருக்கிய மக்கள் விரும்பாவிடின் அதனைத் தேர்தல்கள் மூலமே சொல்ல வேண்டும். முன்னைய எகிப்திலோ லிபியாவிலோ போலல்லாது துருக்கியில் அதற்கான சந்தர்ப்பம் இருக்கின்றது. எனவே,முன்னைய எகிப்தையும் லிபியாவையும் துருக்கியுடன் ஒப்பிட்டு துருக்கிய ஆர்ப்பாட்டங்களுக்கு வசந்தம் என்று பெயர் சூட்டுவது சுத்த முட்டாள்தனம்.
அடுத்தது, இந்த ஆர்ப்பாட்டம் திட்டமிட்ட அடிப்படையில் எதிர்க்கட்சிகளாலும் விளிம்பு நிலைக் குழுக்களாலும் களவாடப்பட்ட ஒன்றாகும். ஸ்தான்பூல் நகர தக்ஸிம் சதுக்கத்துக்கு அருகே அமைந்துள்ள கெஸி பூங்கா அபிவிருத்திப் பணிகளுக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டது. சூழல் பாதுகாப்பு ஆர்வளர்களால் ஆரம்பிக்கப்பட்ட இவ்வார்ப்பட்டத்தில் அர்தூகானின் ஆதரவாளர்கள் கூட கலந்து கொண்டிருந்தனர். பின்னர்தான் கடும்போக்கு மதச்சார்பின்மைவாதிகள் இந்த ஆர்ப்பாட்டத்தைக் களவாடினர்.
துருக்கியில் தற்போது நிகழ்ந்து வரும் ஆர்ப்பாட்டங்கள் துருக்கிய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகப் பதிவு செய்யப்படலாம். ஆனாலும், அதனை 'துருக்கிய வசந்தம்'என அழைப்பது அவசியமற்றது.

ஐரோப்பாவின் நோயாளி என்ற நிலையில் இருந்து ஐரோப்பாவின் ஒரேயொரு சுகதேகி என்ற அந்தஸ்துக்கு துருக்கியை கொண்டு வந்ததில் அர்துகானுக்கு பாரிய பங்குண்டு. வெளிநாட்டுக் கடன் அற்ற நாடாக துருக்கியை கொண்டுவந்த பெருமை அர்துகானையே சாரும்.
ReplyDeleteஅண்மைக் காலங்களில் இஸ்ரேலுக்கு எதிராக இவர் எடுத்த சில நடவடிக்கைகள் தான் இன்று அங்கு தோன்றியுள்ள எதிப்புகளுக்கு காரணமாய் இருக்க வேண்டும். இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள எந்த நாட்டையும் இஸ்லாம் விரோத அமெரிக்க சியோனிச சக்திகள் நிம்மதியாக இருக்க விட்டதில்லை.