Header Ads



சாய்ந்தமருதுவில் டெங்கு ஒழிப்பு குறித்து ஆராய்வு

(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் ஒழுங்கு செய்திருந்த சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாடசாலை மற்றும் திணைக்கள டெங்கு ஒழிப்பு குழு பிரதிநிதிகளுக்கான டெங்கு ஒழிப்பு குழுக்களை அமைக்கும் கலந்துரையாடலொன்று 19-06-2013 சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இடம்பெற்றது. 

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி  டாக்டர் ஸஹீலா இஸ்ஸதீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் எம்.ஏ.ஸி.ஐயுப் , பொலிஸ் உத்தியோஸ்தர் எச்.எல்.நிஜாமுதீன் , பொதுசுகாதார பரிசோதகர்களான ஏ.எம்.பாறூக் , ஜே.எம்.நிஜாமுதீன் , சாய்ந்தமருது கோட்ட சுற்றாடல் உதவி ஆணையாளர் எம்.ஐ.எம்.அஸ்ஹர் , சாய்ந்தமருது கமநல சேவை மத்திய நிலைய விவசாய போதனாசிரியர் எம்.எம்.எம்.ஜெமீல் , சாய்ந்தமருது பிரதேச செயலக சமூர்த்தி மகா சபையின் முகாமையார் ஏ.ஸி.ஏ.நஜீம் , கல்முனை மாநகரசபையின் பிரதிநிதி மற்றும் சாய்ந்தமருது கோட்டத்தைச் சேர்ந்த 9 பாடசாலைகளினதும் டெங்கு ஒழிப்பு குழுத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

சாய்ந்தமருது பிரதேசத்தில் வழமையை விட தற்போது டெங்கு நோயாளர்களின் தொகை அதிகரித்துள்ளமையினால் டெங்கு நுளம்பு பரவும் இடங்களை அடையாளம் கண்டு துரிதமாக அவற்றை இல்லாதொழிப்பதற்காக பாடசாலைகள் மற்றும் திணைக்களங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை குழுக்களை ஏற்படுத்தி ஒவ்வொரு பிரதிநிதியும் ஆகக்குறைந்தது 50 இடங்களை பார்வையிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு டெங்கு நுளம்பு பரவக்கூடிய இடங்களை வைத்திருப்போருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் இந்த கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.

டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் போது கல்முனை பொலிஸார் , பொது சுகாதார பரிசோதகர்கள் , சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் கல்முனை மாநகரசபையின் உதவிகள் எந்த வேளையிலும் கிடைக்கும் என உறுதியளிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.