Header Ads



மருதமுனையிலிருந்து காத்தான்குடிக்கு..!

(எஸ்.அஷ்ரப்கான்)

மருதமுனையில் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஸாட் பதியுதீன்  நிதி ஒதுக்கீட்டில் 1 கோடி 80 இலட்சம் ரூபாய் செலவில் அமையவிருந்த நுால்களுக்கான நவீன டை பண்ணும் நிலையம் இடம் வழங்காமையினால் காத்தான்குடிக்கு மாற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கிலங்கையில் கைத்தறிக்குப் பேர்போன கிராமமாக மருதமுனைக்கிராமம் விளங்குகின்றது. ஆயினும் குறிப்பிடத்தக்க நவீன துறைக்கான முன்னேற்றம் எதுவுமில்லாமல் பாரம்பரிய முறையிலேயே இந்நெசவாலைகள் இங்கு இயங்குகின்றன. இதுவரை எந்தவொரு அம்பாரை மாவட்ட அரசியல்வாதியும் இக்கிராமத்தில் கைத்தொழிலை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த வருடம் வெள்ள அனார்த்தத்தின்போது அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீடுடன் அமைச்சர் றிஸாட் பதியுதீன் மருதமுனைக்கிராமத்திற்கு வருகை தந்திருந்தபோது மேற்படி நுால்கள் டை பண்ணும் நிலையத்தை அமைப்பதற்கான வாக்குறுதியை வழங்கியிருந்தார். அதன்படி 1கோடி 80 இலட்சம் ரூபாய் குறித்த நிலையத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதில் ஒரு கோடி ரூபாய் கட்டிடம் அமைப்பதற்கும், 80 இலட்சம் ரூபாய் உரிய
இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக்கருவிகள் வழங்குவதற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இக்கட்டிடத்தொகுதியில் ஒரே நேரத்தில் 100 கிலோகிராம் நிறைகொண்ட நுால்கைளை டை பண்ணக்கூடிய பாரிய நவீன டைபண்ணும் நிலையமும் இலங்கை ஆடை நிறுவகத்தின் நவீன பயிற்சி நிலையமும் அமையவிருந்தது.

இந்நிலையத்தை அமைப்பதற்கான காணியை ஒதுக்கீடு செய்து தருமாறு வர்த்தக் கைத்தொழில் அமைச்சு கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நௌபலை வேண்டியிருந்ததன் பேரில் நீண்ட இடைவெளிக்குப்பின் குறித்த ஒரு இடம் அடையாளப்படுத்தப்பட்டு அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டது. பின்னர்  இலங்கை ஆடை நிறுவக அதிகாரிகள் குறித்த இடத்தின் சூழலியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு குறித்த நிலையத்தை அமைப்பதற்கான சாதக அறிக்கையை சமர்ப்பித்ததைத் தொடர்ந்து கட்டிடத்தை அமைப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன

அதனைத் தொடர்ந்து குறித்த இடம் பிரச்சினைக்குரியதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் செய்த முறைப்பாட்டினைத்தொடர்ந்து  நீண்ட சர்ச்சைக்குப்பின் அவ்விடத்தை வழங்குவதில் தடைகள் இருப்பதாக பிரதேச செயலாளர் எம்.எம். நௌபல் அமைச்சுக்கு அறிவித்ததைத்தொடர்ந்து அதனை அமைப்பதற்கு உடனடி நடவடிக்கையாக மாற்று இடமும் வழங்கப்படாத நிலையில் குறித்த நிலையம் காத்தான்குடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

மருதமுனைக்கிராமத்தின் நெசவுத்துறையை முன்னேற்ற வேண்டும் என்று பேசுகின்றவர்கள் இன்று நெசவுத்துறை ஒரு முஸ்லிம் அமைச்சருடைய கைகளில் இருந்தும் அதனைப்பயன்படுத்திக் கொள்ளாமல்  இருப்பது மிகவும் துரதிஸ்டவசமானது என்பது சுட்டிக்காட்டப்படுவதுடன் அமைச்சராக முன்வந்து செய்யவந்த உதவியையும் உதறிவிடுவது இத்துறைக்கு பாரிய இழப்பாகும் என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இது தொடர்பாக பிரதேச அரசியல் பிரமுகர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், கல்முனைத்தொகுதி மக்கள் தமக்கு எதுவும் செய்யாதவர்களுக்கு வாக்களிப்பதும், வாக்குகள் எதையுமே பெறாதவர்கள் எதையாவது செய்யவந்தால் அதையும் தட்டிக்கழிப்பதும் அல்லது தடைபோடுவதும் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது என்று தெரிவித்தார். 

1 comment:

  1. மருதமுனயை பொறுத்தவரை இது ஒரு முக்கியமான விடயம். இவ்விடயம் 3 வருடமாக பொது மக்களுக்கு பகிரங்கப் படுத்தப் படாமல் ரகசியமாக பேனப்பட்டதன் பின்னணி என்ன?
    நெசவுத் தொழிலுக்காக இது வரை ஒதுக்கப் பட்ட பணத்திற்கு என்ன நடந்தது என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
    அது போன்ற ஒரு முயற்சியால் தான் இதுவும் கை நழுவிப் போனதா?

    Marzook (Sathosa)
    Maruthamunai.

    ReplyDelete

Powered by Blogger.