மோடியின் ஆதிக்கம் வலுக்கிறது - அத்வானி விலகினார்
பா.ஜ.,வில் மோடிக்கு முக்கிய பொறுப்பு கொடுத்த காரணத்தினால் அதிருப்தியில் இருக்கிறாரா இல்லையா என்பது குறித்து எவ்வித தகவலும் வராமல் இருந்த இந்நேரத்தில் பா.ஜ., கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே., அத்வானி இன்று தான் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகி கொள்ள முடிவு செய்துள்ளார். இவரது ராஜினாமா கடிதத்தை கட்சி தலைவர் ராஜ்நாத்சிங்கிற்கு அனுப்பி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இவரை சமரசம் செய்ய மூத்த நிர்வாகிகள் அத்வானியை சந்திப்பர் என கூறப்படுகிறது.
கடந்த 2 நாட்களாக கோவாவில் பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மோடிக்கு தேர்தல் பிரசார குழு தலைவர் பதவி வழங்கப்பட்டது. இந்த பதவி அளித்ததில் அத்வானி அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. இதனால் அவர் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இவரது ஆதரவாளர்கள் யஸ்வந்த்சின்கா, ஜஸ்வந்த்சிங், உமாபாரதி, சத்ருகன்சின்கா ஆகியோர் யாரும் பங்கேற்கவில்லை.
கட்சி நடவடிக்கையில் அதிருப்தி :
இந்நிலையில் இன்று ராஜ்நாத்சிங் அத்வானியை சந்தித்தார். இந்நேரத்தில் அவர் தனது பார்லி., போர்டு குழு செயலர் மற்றும் தேர்தல் கமிட்டி , தேசிய செயற்குழு ஆகிய பொறுப்புகளில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். தாம் ஒரு உறுப்பினராக நீடிக்க விரும்புவதாகவும், சமீபத்தில் கட்சி எடுத்த முடிவுகள் தமக்கு ஏற்புடையதாக இல்லை என்றும் கூறியுள்ளார்.
பா.ஜ.,வில் நீண்ட காலம் பணியாற்றி ரத யாத்திரை மூலம் மக்களிடம் தனக்கென ஒரு செல்வாக்கை பெற்ற மூத்த தலைவர் அத்வானி பதவியில் இருந்து விலகி இருப்பது பா.ஜ., மத்தியில் பெரும் பலவீனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Post a Comment