இந்தியாவுக்கு கோத்தா பதிலடி..!
மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரங்களை வழங்கப் போவதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம், இந்தியாவுக்கு அறிவித்துள்ளதாக பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். “நானும் மஹிந்த ராஜபக்ஸவும் இந்திய உயர் அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்புகளின் போது, மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரங்களை வழங்குவது, தேசிய நலன்களுக்கு குறிப்பாக அரசியல் உறுதிப்பாட்டுக்கு ஆபத்தானது என்பதை எடுத்துக் கூறியுள்ளோம்.
சிறிலங்கா - இந்திய உயரமட்டக்குழுக்கள் நிலையிலான பேச்சுக்களில் எமது நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துக் கூறியுள்ளோம்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
13வது திருத்தச்சட்டத்தைத் திருத்தும் மஹிந்த ராஜபக்ஸ முடிவு தமக்கு கவலையளிப்பதாக இந்திய பிரதமர் மன்மோகன்சிங் குறிப்பிட்டுள்ளது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரங்களை வழங்குவது சிறுபான்மையினரின் நலன்களுக்கு தீங்கை ஏற்படுத்தும்.
புதுடெல்லியில் முன்னர் நடத்திய கரலந்துரையாடல் ஒன்றின் போது, மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரங்களைப் பகிர்வதற்கு ராஜபக்ச எதிர்ப்புத் தெரிவிப்பது குறித்து அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்,எம்.கே. நாராயணன், பாதுகாப்புச்செயலராக இருந்த விஜயசிங்கிடம் கேட்டார்.
இந்திய பாதுகாப்புச்செயலரும் ராஜபக்சவின் நிலைப்பாட்டுடன் இணங்கினார்.
இந்தியாவுக்கும் ஏனைய நாடுகளுக்கும் 13வது திருத்தச்சட்டத்துக்கு அப்பாற்பட்ட தீர்வை வழங்குவதாக மஹிந்த ராஜபக்ஸ வாக்குறுதி அளித்துள்ளார். அவர் அவ்வாறு கூறியதன் அர்த்தம், எல்லா சமூகங்களும் ஏற்றுக் கொள்ளத்தக்க நல்லதொரு தீர்வைத் தான். இதைவிட வேறேதும் இல்லை.
ஆனால், வாக்குறுதியை தவறாகப் புரிந்து கொண்டு 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக, மஹிந்த ராஜபக்ஸ வாக்குறுதி அளித்ததாக பரப்புரை செய்வது முட்டாள்தனமானது.
அது ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் மீது திணிக்கப்பட்டது.” என்று கூறியுள்ளார் கோத்தாபய ராஜபக்ச.
போர் முடிவுக்கு வந்த பின்னர், 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அளித்த வாக்குறுதியில் இருந்து பின்வாங்கி விட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“சிறிலங்காவுக்குப் பின்னால் இருப்பதாக வாக்குறுதி அளித்த இந்தியா, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை, ஆதரித்து வாக்களித்தது. ஜெனிவாவில் இந்தியா எம்மைக் கைவிட்டது மிகவும் மோசமானது.” என்று கூறியுள்ளார்.
“இனிமேலும் 13வது திருத்தச்சட்டத்தினால் பிரச்சினைகள் எழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால், வடக்கில் மட்டும் வன்முறைச்சூழலை உருவாக்கப் போவதில்லை., ஏனைய பகுதிகளிலும் உருவாகும்” என்றும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

Post a Comment