ஜனாஸா ஊர்வலத்தில் தற்கொலை தாக்குதல் - 29 பேர் மரணம்
சவ ஊர்வலத்தில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் இம்ரான் கான் கட்சி எம்எல்ஏ உள்பட 29 பேர் பலியாயினர்.
பாகிஸ்தானில் கடந்த மாதம் 11 ம் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெரிக் இ இன்சாப் கட்சி, கைபர் பக்துங்வா மாகாணத்தில் வெற்றி பெற்றது. இந்த பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகரான அப்துல்லா என்பவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இவரது இறுதிச் சடங்கு நேற்று நடந்தது.
சவ ஊர்வலத்தில் தெரிக் இ இன்சாப் கட்சி எம்எல்ஏ இம்ரான் கான் மெகந்த், அரசியல் கட்சியினர், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டானர். அப்போது திடீரென ஊர்வலத்தில் புகுந்த தற்கொலை படையை சேர்ந்த தீவிரவாதி ஒருவர் குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளார். இதில் இம்ரான் கான் மெகந்த் எம்எல்ஏ உள்பட 29 பேர் உடல் சிதறி பலியாயினர். 40க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். இதனால் சவ ஊர்வலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து வந்த போலீசார், காயம் அடைந்தோரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குண்டு வெடிப்பில் இறந்த எம்எல்ஏ இம்ரான் கான் மெகந்த், கைபர் பக்துங்வா மாகாணத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் இம்ரான் கான் கட்சியில் சேர்ந்தார். இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. மெகந்த் கொல்லப்பட்ட சம்பவத்தால் கைபர் பக்துங்வா மாகாணத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 3&ம் தேதி இம்ரான் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ பரீத்கான் அவ்ராக்சாய், கட்சி பணிகளை முடித்து விட்டு காரில் வீடு திரும்பியபோது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த மாதத்தில் பாகிஸ்தானில் 2 எம்எல்ஏக்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment