'காபி கபே'க்களில் வெடிகுண்டு தாக்குதல் - 22 உதைப்பந்தாட்ட ரசிககர்கள் மரணம்
ஈராக்கில் பாக்தாத் உள்பட 2 இடங்களில் 'காபி கபே'க்களில் ஆயுததாரிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 22 கால் பந்தாட்ட ரசிகர்கள் கொல்லப்பட்டனர். ஈராக்கில் ஆயுததாரிள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். டிவியில் நேற்று இரவு ஒளிபரப்பான கால் பந்தாட்ட போட்டிகளை, பாக்தாத் நகரில் உள்ள கபேவில் ஏராளமான ரசிகர்கள் பார்த்து கொண்டிருந்தனர். அப்போது கபேவில் திடீரென ஆயுததாரிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி 10 பேர் பலியாயினர். பலர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் அப்பகுதியில் ராணுவத்தினர் விரைந்தனர். சன்னி முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாயின. இதேபோல் பாக்தாத்துக்கு தெற்கே ஜாப்லா என்ற நகரிலும் கபேவில் நேற்று ஆயுததாரிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த கபேவிலும் கால்பந்து போட்டியை பார்த்து கொண்டிருந்த ரசிகர்கள் 12 பேர் சம்பவ இடத்தில் பலியாயினர். ஈராக்கில் 2 இடங்களில் அடுத்தடுத்து நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதல்களுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

Post a Comment