Header Ads



நிந்தவூர் தொழிற்பயிற்சி நிலையம் குறித்த ஜப்னா முஸ்லிம் இணைய செய்திக்கான பதில்

நிந்தவூர் மாவட்டத் தொழிற்பயிற்சி நிலையத்தில் விவசாய மற்றும் மீன்பிடி உபகரணங்களை திருத்துதல் தொடர்பான பயிற்சிநெறிகளை ஆரம்பிக்க வேண்டுமென 'ஜப்னா முஸ்லிம்' இணையத்தளம் வெளியிட்டிருந்த செய்திக்கு பதிலளிக்குமுகமாக தொழிற்பயிற்சி அதிகார சபையின் மாவட்ட அலுவலகம் விளக்க அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. 

மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஏ.ஏ.ஜாபீரினால் அனுப்பப்பட்டுள்ள அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

முதலில் இவ்வாறான கருத்துக்களும் ஆலோசனைகளும் எமது பயிற்சி நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்துவதற்கும் இளைஞர் யுவதிகளின் தேவையறிந்து சேவையாற்றுவதற்கும் எமக்கு உதவும் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். அந்த வகையில், உங்களது இணையத்தளத்தில் வெளியாகியிருந்த கருத்துக்களை வரவேற்கும் அதேவேளை, அது குறித்த சில விளக்கங்களை தரவேண்டுமெனவும் விரும்புகின்றேன். 

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை குறிப்பிட்ட வரையறைகள் மற்றும் நியமங்களுக்கு அமைவாகவே பயிற்சிநெறிகளை வழங்கி வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் இரு தொகுதி மாணவர்கள் உள்வாங்கப்படுவதுடன் அதற்காக முன்கூட்டிய வகுக்கப்பட்ட பயிற்சித் திட்டத்தின் பிரகாரமே கற்கைகள் நடாத்தப்படுகின்றன. அந்த வகையில் 2013ஆம் ஆண்டுக்காக தலைமை அலுவலகம் தயாரித்த பயிற்சித் திட்டத்திற்கு அமைவாகவே தற்போது பயிற்சிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

உங்களது எதிர்பார்ப்பிற்கு அமைவாக எதிர்காலத்தில் விவசாயம் மற்றும் மீன்பிடி தொழிலுடன் சம்பந்தப்பட்ட பயிற்சிநெறிகள் ஆரம்பிக்கப்படும் வாய்ப்புள்ளது என்றபோதிலும் இவ்வாண்டுக்கான பயிற்சித் திட்டத்தில் அவ்வகை கற்கைகள் உள்ளடக்கப்படவில்லை என்பதால், முழுநேர பயிற்சிநெறியாக அவற்றை ஆரம்பிக்க முடியாதுள்ளதை மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். 

அதேவேளை, கூட்டு அறுவடை இயந்திரம் (Harvester) போன்ற விவசாய உபகரணங்கள் திருத்தும் கற்கைநெறியானது சில கிலோமீற்றார் தொலைவிலுள்ள மட்டக்களப்பு, ஓந்தாச்சிமடம் தொ.ப. நிலையத்தில் கற்பிக்கப்படுகின்றது. ஆயினும், மிகக் குறைந்தளவானோரே இந்தப் பயிற்சியை தொடர்கின்றனர். இந்த அனுபவத்தை வைத்துப் பார்க்கின்றபோது நிந்தவூரில் அதேபோன்ற கற்கைநெறிகளை ஆரம்பித்தால் அதனை நீண்டகாலத்திற்கு கொண்டு செல்வதில் நடைமுறைச் சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் என அதிகார சபை கருதுகின்றது. 

எவ்வாறிருந்த போதிலும், அறுவடை இயந்திரம் அல்லது ஏனைய ஏதாவது விவசாய உபகரணம் திருத்துவதற்கான பயிற்சிநெறியை தமக்காக நடாத்துமாறு குறைந்தது 10 பேர் எழுத்துமூலம் எமக்கு விண்ணப்பித்தால், அதனை விஷேட பகுதிநேர பயிற்சிநெறியாக நடாத்துவதற்கான சாத்தியம் உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். 

அதேபோன்று, மீன்பிடி உபகரணங்கள் திருத்துவதற்காக பயிற்சிகளை நடாத்துவதற்காக எமது அமைச்சின் கீழ் 'தேசிய மீன்பிடி தொழில்நுட்பம் மற்றும் கடலோட்டு இயந்திரவியல் நிறுவகம்' எனப்படும் கடல்சார் பல்கலைக்கழகத்தின் கிளை மட்டக்களப்பில் இயங்குகின்றது. அங்கு மீன்பிடி மற்றும் கடல்சார் பயிற்சிகள் அனைத்தும் நியம முறையில் நடாத்தப்படுகின்றன. 

இவ்வாறு குறிப்பிட்ட துறைக்கென பயிற்சி அளிக்க பிரத்தியேகமாக நிறுவனம் ஒன்று இப் பகுதியில் இருக்கையில், இது தொடர்பாக முன் அனுபவமோ, மனித மற்றும் பௌதீக வளமோ இல்லாத ஒரு சூழலில் நிந்தவூர் தொ.ப. நிலையத்தில் அவ்வகை கற்கைகளை இப்போதைக்கு ஆரம்பிக்க முடியாது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம். 

அதுமாத்திரமன்றி, படகு வெளியிணைப்பு இயந்திர திருத்துனர் கற்கைநெறி கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் பொத்துவில் தொ.ப.நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டபோதும் போதிய மாணவர்கள் இல்லாத நிலையில் அக்கற்கை இடைநிறுத்தப்பட்டதையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டுகின்றேன். 

தகவல் - 
ஏ.எல். நிப்றாஸ்
ஊடக பொறுப்பதிகாரி


No comments

Powered by Blogger.