தமது தலைவர்களை காப்பாற்ற முடியாதவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்..!
இந்தியா - ராய்ப்பூர் மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் சுக்லாவை காப்பாற்ற முடியாததால், அவரது பாதுகாவலர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சட்டீஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் மாலை காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி நடத்தப்பட்டது. இதில், சட்டீஸ்கர் மாநில காங்., தலைவர் நந்தகுமார் படேல், முன்னாள் மத்திய அமைச்சர், வி.சி.சுக்லா, சட்டீஸ்கர் மாநில முன்னாள் அமைச்சரும், ஜல்வா ஜுடும் எனப்படும், நக்சலைட் எதிர்ப்பு, பழங்குடியின அமைப்பை ஏற்படுத்தியவருமான, மகேந்திர கர்மா ஆகியோரும் பங்கேற்றனர். அடர்ந்த வனப் பகுதியில், கார்கள் சென்ற போது, 250க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள், பயங்கர ஆயுதங்களுடன், அவர்களை வழி மறித்து, தாக்குதல் நடத்தினர். இதில், மகேந்திர கர்மா உள்ளிட்ட, 20 பேர், சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தனர். முன்னாள் மத்திய அமைச்சர் சுக்லா உள்ளிட்டோர், படுகாயமடைந்தனர். தாக்குதலை நடத்தி விட்டு, அடர்ந்த வனப் பகுதிக்குள், நக்சலைட்டுகள் தப்பி ஓடினர். அப்போது, மாநில காங்., தலைவர் நந்தகுமார் படேல், அவரது மகன் தினேஷ் உள்ளிட்ட மேலும் சிலரை, நக்ச லைட்டுகள், தங்களுடன் கடத்திச் சென்றனர். இந்நிலையில், நந்தகுமார் படேல், தினேஷ் உள்ளிட்ட, 10 பேரின் உடல்கள், வனப் பகுதியில், சிதறிக் கிடந்த நிலையில், நேற்று அதி காலை மீட்கப்பட்டன. இவர்கள், 10 பேரும், கொடூரமாக அடித்தும், சுட்டும் கொல்லப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், நக்சலைட்டுகள் தாக்குதலின் போது, சுக்லாவின் பாதுகாப்பு அதிகாரி பிரபுல், தனது கைத்துப்பாக்கியால் எதிர்த்தாக்குதல் நடத்தியுள்ளார். எனினும் தனது துப்பாக்கியின் தோட்டாக்கள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருவதையறிந்த அவர், சுக்லாவிடம், எனது தோட்டாக்கள் தீர்ந்து வருகின்றன. உங்களை காப்பாற்ற முடியாத நிலையில் உள்ளேன். என்னை மன்னியுங்கள் என்று கூறிவிட்டு தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதே போல் நந்தகுமார் படேலின் கார் டிரைவரும், அவரை காப்பாற்ற முடியாத நிலையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த தகவலை மகேந்திர கர்மாவின் குடும்ப நண்பர் சுரேந்திர கட்ச் தனது டுவிட்டர் வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

Post a Comment