Header Ads



ஆஸாத் சாலி கைது - இலங்கை முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பு கண்டனம்


இலங்கையில் வாழும் முஸ்லிம் சிறுபான்மைச் சமூகமானது சமீபகாலமாக பௌத்த பேரின சமூகத்திலுள்ள இனவாத மற்றும் மதவாதக் குழுவினரால் எதிர்கொண்ட அச்சுறுத்தல் செயற்பாடுகள் தொடர்பில் அச்சமூகத்தின் உரிமைகளுக்காக வெளிப்படையாகத் துணிந்து குரல் கொடுத்து வந்த கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயரும், தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளருமான ஆஸாத் சாலி அவர்களை இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படும் அதிர்ச்சிச் செய்தியறிந்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக பிரித்தானியாவிலுள்ள இலங்கை முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பு SLMDI UK தெரிவித்துள்ளது.

இன்று அனுப்பி வைக்கப்பட்ட அவ்வமைப்பின் ஊடக அறிக்கையில் இது பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு பொது பல சேனா உள்ளிட்ட பௌத்த தீவிர இனவாத அமைப்புக்களால் ஏற்படுத்தப்பட்டு வந்துள்ள விரும்பத்தகாத செயற்பாடுகள் பற்றி எமது அமைப்பானது, ஒரு முறைக்கு இரு முறை இலங்கையின் அரசுத் தலைவர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் போன்றவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதுடன், சமூகங்களுக்கு மத்தியில் பிரிவினைகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தும் அவர்களின் செயற்பாடுகளை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறும், சமூக அமைதிக்குப் பங்கம் விளைவிப்போர் எவராயினும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும் வலியுறுத்திக் கேட்டிருந்தோம்.

எனினும் எமது கோரிக்கைகள் தொடர்பில் காத்திரமான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில், இவ்வாறான இனவாத மற்றும் மதவாத செயற்பாடுகளை மிக வெளிப்படையாகவும், வன்மையாகவும் கண்டித்து தமிழ், பௌத்த, கிறிஸ்தவ சமூகத்தின் தலைவர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு நமது தேசத்தின் ஐக்கியம், சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கம், நாட்டின் ஒருமைப்பாடு போன்றவற்றை மக்கள் மத்தியில் வலியுறுத்தி வந்த ஆஸாத் சாலி அவர்களை அரசாங்கம் கைது செய்து தடுத்து வைத்து விசாரித்து வருவதானது எமது அமைப்பினருக்கு மத்தியிலும் பலத்த விரக்தியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் ஆஸாத் சாலி அவர்கள் கைது செய்யப்பட்ட நிமிடத்திலிருந்து இந்நேரம் வரையிலும் உண்ணாமலும், பருகாமலும் இருப்பதன் காரணமாக அவரது உடல் நிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பது குறித்தும் நாம் கவலையடைகின்றோம்.

எமது நாடு சர்வதேச ரீதியில் முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் இப்பிரச்சினையானது புதிய தலைவலியாகவும், சர்வதேச ரீதியாகப் புலம் பெயர்ந்து வாழும்  இலங்கை முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் மனக்கசப்பையும் தோற்றுவித்துள்ளது என்பதையும் நாம் வெளிப்படையாகக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

இலங்கை  அரசாங்கம் தனது நாட்டின் சட்டங்களைப் பிரயோகிப்பதில் பாரபட்சமாகச் செயற்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு புலம்பெயர் முஸ்லிம்கள் மத்தியில் வேகமாகவும், ஆதாரங்களுடனும் பரவி வருவதை அரசாங்கம் பொறுப்புடன் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே, ஆஸாத் சாலி அவர்களின் கருத்துக்கள் மற்றும் அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் அதிருப்தியடைந்திருக்குமாயின் சாதாரண குற்றவியல் சட்டங்களின் அடிப்படையில் அவரை விசாரித்து அவர் தொடர்பான குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர, பயங்கரவாதச் சட்ட விதிகளை அவர் போன்ற ஜனநாயக வழியில் மக்களுக்காகவும், நாட்டு நலன்களுக்காகவும் குரல் கொடுக்கின்ற அரசியல்வாதிகள் விடயத்தில் அரசாங்கம் பிரயோகிப்பதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே, அவரது விசாரணைகளை விரைவுபடுத்தி நிறைவு செய்வதுடன், நீரிழிவு நோயாளியான அவரை விரைவாக விடுவிக்குமாறும் எமது அமைப்பு இலங்கை யின் ஜனாதிபதியையும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரையும் பணிவாய் வேண்டுகின்றது.

அதேவேளை, இக்கைது நடவடிக்கையால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர்கள், ஆதரவாளர்களுக்கும் பிரித்தானியாவிலுள்ள இலங்கை முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பின் சார்பில் ஆழ்ந்த வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளையும், அவற்றுக்கான மாற்றுத் தீர்வுகளையும் வெளிப்படையாகவே பேசி வருவதை வழமையாகக் கொண்ட ஆஸாத் சாலி அவர்களின் விடுதலைக்காக பிரித்தானியாவிலும், இலங்கையிலும் வாழுகின்ற முஸ்லிம் சமூகம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறும் நாம் கேட்டுக் கொள்கின்றோம்.

3 comments:

  1. பொதுபலசேன பற்றி யாரும் முறையீடு செய்யவில்லையென்று பொலிஸ்மா அதிபர் சொன்னாரே யாரும் இதுவரைக்கும் முறையீடு செய்யவில்லையா? ஜனாதிபதி சொல்லியிருக்கின்றாரே தகுந்த ஆதாரங்களுடன் நிரூபித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்று. இது வரைக்கும் யாரும் வாய்மூலம்தான் பேசிக்கொண்டிருக்கின்றார்களா? யாரும் எதுவிதமான செயற்பாடுகளும் செய்யவில்லையா? அரசாங்கம் சொல்வது உண்மையா பொய்யா????????

    ReplyDelete
  2. யார் சொல்ல வேண்டும் சொல்ல வந்தவரை தான் பிடித்து உள்ள வைத்து இருக்கிறது நாட்டு அரசியல்

    ReplyDelete
  3. இந்த வங்குரோத்து அரச கொள்ளைக்கூட்டத்திற்கு பொய்யைத்தவிர வேறு ஏதாவது தெரியுமா?

    ReplyDelete

Powered by Blogger.