பிள்ளைகளின் முன்னேற்றத்தை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் - உதவிப் பணிப்பாளர் ஏ.ஏ.ஜாபீர்
(ஏ.எல். நிப்றாஸ்)
தொழிற்பயிற்சிகளை மேற்கொள்கின்ற உங்களது பிள்ளைகளின் முன்னேற்றத்தை கண்காணிப்பதுடன் அவர்களுக்கு ஒத்துழைப்புக்களையும் வழங்குவது இன்றியமையாதது என்று இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஏ.ஏ.ஜாபீர் தெரிவித்தார்.
நிந்தவூரில் உள்ள மாவட்டத் தொழிற்பயிற்சி வளாகத்தில் கற்கைநெறிகளை தொடரும் மாணவர்களின் பெற்றோருக்கான விழிப்புணர்வூட்டல் நிகழ்வு கடந்தவாரம் இடம்பெற்றபோதே உதவிப் பணிப்பாளார் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
அம்பாறை மாவட்டத்தில் லகுஹல, பதியத்தலாவை மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகங்கள் தவிர ஏனைய அனைத்துப் பிரதேசங்களிலும் தொழிற்பயிற்சி நிலையங்கள் காணப்படுகின்றன. இவற்றில் 56 கற்கைநெறிகள் போதிக்கப்படுகின்றன. பலரது வேண்டுகோளுக்கு அமைவாக சிங்கள மொழிமூலத்திலான தகவல் தொழில்நுட்பத்தில் தேசிய டிப்ளோமா கற்கையை ஆரம்பிப்பது தொடர்பிலும் பரிசீலித்து வருகின்றோம்.
இம்மாவட்டத்தில் அதிக மாணவர்களை கொண்டுள்ள நிலையமாக சம்மாந்துறை தொ.ப.நிலையமும் இரண்டாவது இடத்தில் நிந்தவூர் வளாகமும் திகழ்கின்றன. இரண்டு தவணைக் காலத்தைக் கொண்ட ஒரு ஆண்டில் சுமார் 1600 மாணவர்களுக்கு தொழிற்யிற்சிகளை வழங்கி அவர்களை மேலதிக பயிற்சிக்காகவும், தொழிலுக்காகவும் அனுப்பி வைக்கின்றோம். அந்த வகையில் இங்கு கற்றைநெறியை தொடர்வதற்கான வாய்ப்பு உங்களது பிள்ளைகளுக்கு கிடைத்துள்ளமை முக்கியமானது. ஆயினும் உங்கள் பிள்ளை கற்கின்ற பயிற்சிநெறியின் நடைமுறைகள் தொடர்பாக பெற்றோர்களாகிய நீங்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
உங்கள் பிள்ளையின் தினப்பதிவேடு, முன்னேற்றப்பதிவேடு போன்றவற்றை பார்வையிட்டு ஒப்பமிடுதல், பிள்ளை சரியான நேரத்திற்கு நிலையத்திற்கு செல்கின்றதா என்பதை உறுதிப்படுத்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துகின்ற அதேவேளை, குறித்த பயிற்சி, தொழிலிடல் செயற்பாடு, வேலைக்களப் பயிற்சி, பயிற்சியை முடித்த பின்னரான கடனுதவிகள் குறித்தும் அறிந்து வைத்திருத்தல் அவசியமானதாகும். கற்கைநெறியை தொடரும் காலப்பகுதியில் மட்டுமன்றி அவர்கள் மேலதிக பயிற்சிக்காக அனுப்பப்படும் வேளையிலும் ஒத்துழைப்பு வழங்குவதும்; மேற்பார்வை செய்வதும் இன்றியமையாதது என்றார்.
இதன்போது பெற்றோர் தமது சந்தேகங்களை தீர்த்துக் கொண்டதுடன், வகுப்பறைகளையும் பார்வையிட்டனர்.


Post a Comment