பாகிஸ்தானில் நவாஸ் செரீப் ஆட்சியமைக்கும் வாய்ப்பு - இம்ரான் கானும் முன்னேற்றம்
இந்தியாவுடன் நல்லுறவுக்கு முக்கியத்துவம் அளிப்பேன் என நவாஸ் செரீப் தெரிவித்தார். பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 3-வது தடவையாக பிரதமர் பதவி ஏற்கும் நவாஸ் செரீப் தனது கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-
பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சியின் வெற்றியை பாகிஸ்தான் மக்களுக்கு சமர்பிக்கிறேன். நம்பிக்கையுடன் எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர். நான் எனது ஆட்சி காலத்தில் இந்தியாவுடன் ஆன நல்லுறவுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பேன். மேலும் இப்பிராந்தியத்தில் அமைதி மற்றும் வலிமைக்கான புதிய அத்தியாயம் படைப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கிடையே, தேர்தல் முடிவைத் தொடர்ந்து பாகிஸ்தான் முஸ்லீம் லிக் (என்) கட்சி தொண்டர்கள் நேற்று நள்ளிரவு தங்கள் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது அவர்கள் மத்தியில் நவாஸ் செரீப் பேசினார். நமது கட்சி பாராளுமன்றத்தில் தனிப்பெரும் பான்மையுடன் வெற்றி பெற வேண்டும் என பிரார்த்தனை செய்யும்படி தொண்டர்களிடம் கேட்டுக் கொண்டார்.
ஆனால், நவாஸ் செரீப்பின் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 130 இடங்களே கிடைத்துள்ளன. தனி மெஜாரிட்டிக்கு இன்னும் 7 இடங்கள் தேவைப்படுகிறது. எனவே, சுயேச்சைகள் மற்றும் ஜமீயாத் உலமா- இ-இஸ்லாம் போன்ற சிறிய கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெரிக் இ-இன்சாப் கட்சி 35 இடங்களில் முன்னணி பெற்று 2வது இடத்திலும் முன்னாள் அதிபர் ஷர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 32 இடங்களிலும் முன்னணி பெற்று 3வது இடத்திலும் உள்ளன.மற்றவை 70 இடங்களிலும் முன்னணியில் உள்ளது.பாகிஸ்தானில் ஓட்டுச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றதால் ஓட்டு எண்ணிக்கையில் காலதாமதம் ஆகிறது.இந்நிலையில் இறுதி முடிவு இன்று இரவு அல்லது நாளை தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment