'ரஹ்மான் கொலைக்கு பழிவாங்குவோம்' - அவரது தியாகத்திற்காக பெருமைப்படுகிறோம்.
வடக்கு பாகிஸ்தானின் மிரான்ஷா பகுதியில் காஷ்மா என்ற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தின. இதில், அந்த வீடு இடித்து தரைமட்டமானது.
இந்த தாக்குதலில் பாகிஸ்தான் தலிபான் இயக்கத்தின் துணைத் தலைவரான வலியுர் ரஹ்மான் உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் வலியுர் ரஹ்மான் இறந்ததை உறுதி செய்த தலிபான் இயக்கம், அவரது மரணத்தினால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
இதுதொடர்பாக தெரிக்-இ-தலிபான் இயக்க செய்தித் தொடர்பாளர் இஷானுல்லா இஷான் கூறுகையில், 'எங்கள் தலைவர் வலியுர் ரஹ்மான் மரணத்தினால் நாங்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளோம். அதேசமயம், அவரது தியாகத்திற்காக பெருமைப்படுகிறோம்.
புதிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவே முன்வந்தோம். ஆனால், விமான தாக்குதலில் அரசின் பங்களிப்பு இருப்பதாக நாங்கள் வலுவாக நம்புகிறோம். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான்தான் முழு பொறுப்பு. அமெரிக்காவுக்கு அவர்கள்தான் தகவல் அனுப்பியுள்ளனர்.
எனவே, அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம். மேலும், ரஹ்மான் கொலைக்கு பழிவாங்குவோம்' என்றார். ரஹ்மான் இறந்ததையடுத்து, பாகிஸ்தான் தலிபான் இயக்கத்தின் அடுத்த துணைத்தலைவராக கான் சயீத் என்ற சஜ்னா தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஹ்மானின் நெருங்கிய உதவியாளராக இருந்த சயீத், பழங்குடியினர் பகுதியில் பல்வேறு தீவிரவாத பயிற்சி முகாம்களை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

Post a Comment