Header Ads



ஜவாத்தின் பதிலடி..!


(முஸ்ஸப் அஹமட்)

அரசிலிருந்து மு.காங்கிரஸ் விலக வேண்டும் என்று கூறுகின்றவர்கள் கீழ்தரமான எண்ணம் கொண்டவர்கள் என - கிழக்கு மாகாணசபையின் மு.காங்கிரஸ் உறுப்பினர் தவம் - ஊடகங்களில் தெரிவித்திருந்தமை பற்றியும், தவத்தின் மேற்படி கருத்திணைக் கண்டித்து – முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜவாத் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றினை விடுத்திருந்தமை பற்றியும் வாசகர்கள் அறிவீர்கள். 

இதனையடுத்து, ஜவாத்துக்கு பதிலளிக்கும் வகையில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவம் எழுதியிருந்த மடலொன்று அண்மையில் ஊடகங்களிலே வெளியாகியிருந்து. தவத்தின் மேற்படி பதில் மடலுக்கு விளக்கமளிக்கும் வகையில் கே.எம் ஜவாத் தற்போது அறிக்கையொன்றினை விடுத்துள்ளார்.  அந்த அறிக்கையின் முழு விபரம் வருமாறு,

தம்பி தவத்தின் பதில் எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் இந்தளவுக்கு நிதானமிழந்து எழுதுவார் என்று நினைக்கவில்லை. அவரின் எழுத்தில் ஏராளமான முரண்களும், பிறழ்வுகளும் உள்ளன.  தன்னிடம் இருக்கும் அரசியல் நாகரீகத்தைப் பற்றி பேசுவதற்கு பல தசாப்தங்கள் தேவை என்றும், என்னுடைய வயது அதற்குப் போதாது என்றும் தவம் எழுதியிருந்தார். இதன் மூலம் அவருடைய மமதைதான் வெளியாகியுள்ளது. 

ஒரு சமூகத்துக்கான கட்சியொன்று அச்சமூகத்தின் உணர்வுகளுடன் கலந்திருத்தல் வேண்டும். அதன் மூலம் நம்பிக்கையை வளத்தல் வேண்டும். இதற்கு பல தசாப்தங்கள் தேவையில்லை. சூழலுடன் இணைந்து சிந்திப்பதும் செயலாற்றுவதும் இன்றைய காலத்தின் அவசரமும் அவசியமுமாகும்.

அரசியல் நாகரீகம் பற்றி நீங்கள் பேசுவது வேதனையளிக்கின்றது.

திவிநெகும சட்டம் நிறைவேறுமாயின் சிறுபான்மையினருக்கான உரிமைகளில் அரைவாசிக்கும் அதிகமானவற்றினை இழக்க நேரிடும் என்று தெரிந்து கொண்டே உங்கள் கைகள் - அந்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக உயர்ந்தமைதான் உங்கள் அரசியல் நாகரீகமா? பள்ளி உடைப்பு, பர்தாவுக்கான எதிர்ப்பு, ஹலாலுக்கான தடை, முஸ்லிம் வர்த்த நிலையங்கள் மீதான தாக்குதல்களுக்கு மௌனம் காத்ததில் உள்ள நாகரீகம் என்ன என்று கூறமுடியுமா? உங்களுடைய இவ்வாறான நாகரீகங்களைக் கற்றுக் கொள்வதற்கா எமது சமூகத்துக்கு தசாப்தங்கள் தேவை என்கிறீர்கள்?

இவை ராஜதந்திரமாகாது. இதற்குப் பெயர் இயலாமையாகும். இன்னும் வெளிப்படையாகச் சொன்னால் - நக்குண்டதில் நாவிழந்து போனதன் நிலைமைதான் இதுவாகும். நாடித்துடிப்பைப் பார்த்து காய் நகர்த்தும் நேரம் இதுவல்ல. உண்மையில் எமது மக்களை மிகவும் மட்டமாக எடைபோட்டு விட்டீர்கள். இது குழந்தைகளுக்குக் காட்டும் பூவித்தை போலானது. பலிக்காது.

2002 இல் நிர்க்கதியான முஸ்லிம் சமூகத்துக்கு குரல் கொடுக்க யாரும் இல்லாதபோது, ஒலுவில் பிரகடனத்தை தனி மனித சாதனையாக நீங்கள் சாதித்துக்துக் காட்டியதாக எழுதி, எமது தலைவர்களை குப்பையில் வீசி இருக்கின்றீர்கள். ஒலுவில் பிரகடனம் என்பதும் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராக நீங்கள் செய்த சதிகளில் ஒன்றாகும். மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் தலைமையிலான குழுவினர் - புலிகளின் தலைவர் வே. பிரபாகரனை சந்தித்த நாளில்தான் நீங்கள் ஒலுவில் பிரகடனத்தை திட்டமிட்டுச் செய்தீர்கள். அந்தச் சந்திப்பினை கொச்சைப்படுத்தவும், குழப்பவும், நீங்கள் செய்த சதியாக அது பேசப்பட்டது. ஒலுவில் பிகரனத்துக்காக வசூலித்த பணத்துக்கு இன்னும் கணக்குக் காட்டப்படவில்லை என்று கூறப்படுவது வேறு கதையாகும்.

இப்படியான கணக்குப் பட்டியல்களுக்குள் உங்களைப் புரட்டிக் கொட்டினால் பத்திரிகைகளின் முழுப் பக்கங்களும் போதாமல் போகலாம். 

உதாரணத்துக்கு ஒன்றை மட்டும் சொல்கிறேன். அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக நீங்கள் இருந்த போது, பிரதேச சபைக்குத் சொந்தமான 02 உழவு இயந்திரங்களையும், அவற்றுக்கான 02 பெட்டிகளையும் ஜனூன் என்ற பெயரைக் கொண்ட உங்கள் பினாமி ஒருவருக்கு வெறும் 21 ஆயிரம் ரூபாவுக்கு விற்ற உங்களின் சாதனையை யாரும் முறியடிக்க முடியாது. இரும்புப் பாரமாக பார்த்தாலும் சுமார் 15 ஆயிரம் கிலோகிராம் எடை தேறும். அதை 60 ஆயிரம் ரூபாவுக்கு விற்றிருக்கலாம்.

நிச்சயமாக எந்தவிதமான காழ்ப்புணர்வும் உங்கள் மீது எனக்கு இல்லை. அப்படியிருந்திருந்தால், மாகாணசபை தேர்தல் மேடையில் உங்களை அபுசுபியான் என்று யாரோ விழித்தபோது, உமர் (ரழி)க்கு ஒப்பிட்டுப் பேசியிருக்க மாட்டேன்.  உங்களின் சிந்தனைகளை கிணற்றுக்குள்ளிருந்து வெளிக் கொண்டுவர வேண்டும் என்பதே எனது முயற்சியாகும். 

எமது கட்சியின் மூத்த போராளியும் செயலாளருமான எம்.ரி. ஹசனலி ஊடகங்களில் தெரிவித்திருப்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? இந்த அரசாங்கத்திலிருந்து மு.காங்கிரசை வெளியேறும்படி எமது மக்கள் கூறுகின்றார்கள் என்பதை செயலாளர் நாயகம் பல தடவைகள் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கின்றார். மக்கள் கூறுவதில் தவறொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், அவ்வாறு கூறும் மக்களின் சிந்தனையைக் கீழ்தரமானது என்றும், இழிவான அரசியல் சிந்தனை என்றும் நீங்கள் கூறியிருப்பது கவலையளிக்கிறது. 

மு.காங்கிரசுக்கு வாக்களித்த மக்கள் இழிவானவர்கள் அல்லர். மு.காங்கிரஸ் எனும் கட்சி எவ்வாறு செயற்பட வேண்டும் என்று கூறுவதற்கான முதல் உரிமை கொண்டவர்கள் அந்த மக்கள்தான். அக்கரைப்பற்று மக்களால் நீங்கள் தூக்கியெறியப்பட்டதையடுத்து, மு.காங்கிரசுக்குள் புதியவராக வந்தீர்கள். அப்போது, தனது ஊர் பிரதிநிதிகள் தோற்றாலும் பரவாயில்லை - நீங்கள் வெற்றிபெற வேண்டும் என வாக்குப் பிச்சையிட்ட மு.காங்கிரஸ் போராளிகளின் சிந்தனைகள் 'கீழ்தரமானவை' என்று நீங்கள் கொச்சைப்படுத்திப் பேசியிருப்பது நன்றிகெட்டதனமாகும். 

மு.காங்கிரஸ் ஆரம்பித்த போது நீங்கள் 13 வயது சிறுவன். உங்கள் மாமா அன்சாரின் வீட்டுக்கு நாங்கள் வந்தபோது தேநீர் கொண்டு தந்த அரைக்கால் சட்டைப் பையனாக இருந்தீர்கள். பிறகு உயர்தரப் படிப்பைத் தொடர முடியாமல் ஜப்பான் சென்றீர்கள். பின்னர் நாடு திரும்பி பல்கலைக்கழகத்தில் இணைந்து கொண்டீர்கள். அதற்காகச் சமர்ப்பித்த ஆவணங்களின் உண்மைத் தன்மை குறித்து இன்னும் கேள்விகள் இருக்கின்றன. இது 2000 ஆம் ஆண்டு நடந்த நிகழ்ந்ததாகும். இதற்குள் சேகு இஸ்ஸதீனுடன் இணைந்து மு.காங்கிரசுக்காக நீங்கள் உழைத்ததாகக் கூறுவது கனவில் மட்டுமே நிகழ்ந்திருக்கச் சாத்தியமான கதையாகும். சேகு இஸ்ஸதீன் 1992 ஆம் ஆண்டிலேயே மு.கா.வை விட்டும் சென்று விட்டார் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

என்ன செய்வது எங்கள் மக்களின் தலைவிதி – உங்கள் தத்துவங்களையெல்லாம் கேட்கவேண்டிக் கிடக்கிறது. அம்மி மிதக்கிறது – அரச இலை மூழ்கிறது. சமூகத்தின் உணர்வுகளுடன் கலத்தலும், மக்களுக்கு ஆறுதல் சொல்வதுமே சிறந்த நாகரீகம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். தேர்தலில் நான்கு பேர் மேலோங்கியமைக்காக ஏனைய அத்தனை பேரும் நிராகரிக்கப்பட்டவர்கள் என்று அர்த்தமாகாது. நிராகரித்தல் என்பதற்கு உதாரணம் அக்கரைப்பற்று மாநகரசபைத் தேர்தலில் உங்களுக்கு நேர்ந்த கதியாகும். 

மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவற்றினை கட்சியின் உயர்பீடக் கூட்டங்களில் நான் உரத்த குரலில் வெளிப்படுத்துவதை – கட்சித் தலைமைக்குச் செய்யும் துரோகம் என்று எழுதியிருக்கின்றீர்கள். கட்சியைப் பற்றி அறிந்த ஒருவன் உச்சபீடக் கூட்டத்தில்தான் சுதந்திரமாகப் பேசுவான். உண்மையில் அதுதான் கட்சிக்கு ஆரோக்கியமானதாகும். ஆனால், நீங்களோ உச்சபீடக் கூட்டங்களுக்கு வருவதுமில்லை, வந்தாலும் பேசுவதுமில்லை. சிலவேளை, கூட்டத்தின் இடையில் காணாமல் போய்விடுவீர்கள். என்னால் இப்படியெல்லாம் முடியாது. 

ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரவிக்க வேண்டும் என்று கட்சிக்குள் நான் கூறியதாக எழுதியிருந்தீர்கள். உண்மைதான். மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதுதான் அரசியல் புத்திசாலித்தனமாக அப்போது இருந்தது. வெற்றிபெறக் கூடிய மஹிந்தவுடன் எழுத்து மூலமான உடன்படிக்கை ஒன்றினைச் செய்து கொண்டு அவருக்கு மு.கா. ஆதரவு வழங்க வேண்டும் என்பது எனது கருத்தாக இருந்தது. 

ஆனால், மு.கா. தலைவர் அதை ஏற்கவில்லை. ஒரு பலமான எதிர்கட்சியை உருவாக்க வேண்டும் என்றார். அதற்காக சரத் பொன்சேகாவை ஆதரிக்க வேண்டும் என்றார். சரி, மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்று விட்டால் என்ன செய்வது என்று கேட்டேன். 'ராஜபக்ஷ சரணம்' என்று போய் சேர்ந்து கொள்வதுதான் என்றார். இறுதியில், அதுவே ஆனது. எந்தவித ஒப்பந்தமும் இல்லாமல் ராஜபக்ஷவிடம் நாம் செல்லாக் காசாகப் போய் சேர்ந்து கொண்டோம். 

அதுபோலவே, 'சுடவேண்டும்' என்கிற வன்முறையான வார்த்தைகளை உயர்பீடக் கூட்டங்களில் நான் பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். மறைந்த மாமனிதர் அஷ்ரப் அவர்கள் ஒரு கட்டத்தில் மு.காங்கிரசின் தலைவர்களை வைத்துக் கொண்டு இவ்வாறு கூறினார். 'நாங்கள் சமூகத்தின் உணர்வுகளுடன் கலக்காமல், எமது சுயநலத்துக்காக நாம் திசை திரும்புவோமானால் எமது இளைஞர்கள் துப்பாக்கி ஏந்துவார்கள். அவர்களின் குறி எம்மை நோக்கியோ திரும்பும்' என்றார். 
ஆனாலும், தலைவர் அஷ்ரப் கூறிய அந்தக் காலம் வந்து விடக்கூடாது என்று நான் பிரார்திக்கின்றேன். 

பயம், பீதியில் தவிக்கும் நமது மக்களை - மக்கள் பிரதிநிதிகள் சந்திக் வேண்டும் என்றேன். இது துரோகமா? ஓவ்வொரு பிரதேசத்திலுமுள்ள மு.காங்கிரசின் தவிசாளர்கள், மாகாணசபை உறுப்பினர்களின் தலைமையில் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றேன். இது துரோகமா? முதுகில் குத்துவதற்கு எனக்குத் தெரியாது. ஏறிவந்த ஏணியை உதைத்து விட்டுப் பழக்கமில்லை. அமானிதமாக மக்கள் தந்த பதவிகளை நான் பிழையாகப் பயன்படுத்தியதில்லை. 

அதுபோலவே, எனக்கு உல்லாச விடுதிகள் பற்றியும் தெரியாது. கடந்த மாகாணசபைத் தேர்தல் காலத்தின்போது ஹெல உறுமய செயலாளருடன் சேர்ந்து மு.காங்கிரசை அழிப்பதற்கான திட்டத்தினை ஏதோவொரு உல்லாச விடுதியில் நான் தீட்டியதாக எழுதியுள்ளீர்கள். புரட்டிப் பேசுவதிலும், கட்டுக்கதைகளை உருவாக்கி விடுவதிலும் நீங்கள் வல்லவர் என்று உங்கள் ஊர் மக்கள் கூறுவதை உண்மைப்படுத்தியுள்ளீர்கள். உல்லாச விடுதியில் நான் சதித் திட்டம் தீட்டும் போது, அருகில் நின்று விளக்குப் பிடித்தவர் போல் நீங்கள் எழுதியிருப்பதைப் படித்தபோது வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை.

ஆதாரபூர்வமாகப் பேசவும், சிந்திக்கவும் முயற்சி செய்யுங்கள். நீங்கள் நிதானமிழந்துள்ளீர்கள். பழமொழிகள் தவறுகின்றன, உல்லாச விடுதிகள் வருகின்றன. நிதானமிழப்பது உங்களுக்குப் புதியதொரு விடயமல்ல. நிதானமிழப்பதற்காகவே உல்லாச விடுதிகளுக்குச் செல்கின்றவர்களிடம் - வாதிடுவது பல சமயங்களில் பிரயோசமற்றுப் போய் விடுகிறது.

அடுத்து நீங்கள் என்மீது சுமத்தியிருந்த தங்கக் கதை குறித்தும் நான் விளக்கமளித்தே ஆக வேண்டும். அந்தக் கதை உண்மைதான். நான் கொண்டு வந்த நகைகளை சுங்கத் திணைக்களம் பறித்து வைத்தது. தங்கத்தை மீட்க நீதிமன்றம் சென்றேன். 100 வீத தீர்வையினைச் செலுத்தி எனது நகைகளை நான் மீட்டுக் கொண்டேன். இது எந்த விதத்தில் குற்றம் என்கிறீர்கள்? நபரொருவர் 500 ரூபாவுக்கு மேற்பட்ட தண்டப் பணம் செலுத்தியிருந்தால் அல்லது குற்றத்துக்கான மறியலை அனுபவித்திருந்தால் - அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது கூடவா உங்களுக்குத் தெரியாது. 

தமிழ் கட்சிகளைப் பாருங்கள். ஜெனீவா சென்றனர். திரும்பி வந்ததும் அவர்களுக்குச் சிறைக்கூடம்தான் என்று பேசப்பட்டது. அவர்கள் தயங்கவில்லை. தங்கள் மீது புரியப்படும் அநீதியினை எதிர்ப்பதற்கான காலத்தை அவர்கள் கொண்டிருக்கவில்லை. நிமிர்ந்து நின்றனர். ஒலுவில் பிரகடனத்தின் போது உங்களிடம் இருந்ததாக நீங்கள் கூறும் துணிவை எங்கே தொலைத்தீர்கள். 

அரசுடன் இணைந்திருந்தலுக்கு - நீங்கள் தெரிவித்திருக்கும் விளக்கத்துக்கும், என்னுடைய விளக்கத்துக்கும் இடையே ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. 

இந்த அரசினை ஓர் இனவாத அரசாகவும், கொடூரமான அரசாகவும், பெரும்பான்மை வாதப் போர்க்குணமுள்ள அரசாகவும், தருணம் பார்த்திருந்து கவிழ்க்கப்பட வேண்டிய அரசாகவும் உங்களுடைய கூற்றில் ஏற்றுக் கொண்டுள்ளீர்கள். அப்படியான ஓர் அரசுக்குள்ளே இருந்து கொண்டு நீங்கள் சாதிக்க நினைப்பது – ஜனாதிபதியைச் சந்திப்பது, கட்சித் தலைவர்களைச் சந்திப்பது, அமைச்சரவைக் கூட்டங்களில் பங்குபற்றுவது என, அரசியல் பெறுமானங்கள் குறைந்த விடயங்களாகும். 

அதேவேளை, இந்த அரசு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் கொண்ட அரசு எனக்கூறி, அச்சப்பட்டு ஒதுங்கியும் போய் விடுகிறீர்கள். இப்படியான ஓர் அரசினை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது எனவும் சொல்கின்றீர்கள். சுருக்கமாகக் கூறினால், இந்த ஆட்சி கவிழ்க்கப்பட வேண்டியது என்று நீங்களே கூறிவிட்டு, அரசிலிருந்து வெளியேறுவது ஆபத்தானது என்கிறீர்கள்.

இந்த முரண்பட்ட எண்ணங்கள் - நீங்கள் வளர்ந்து வந்த சரணாகதி அரசியற் பாசறையில் உங்களுக்குக் கிடைத்த பாதிப்புகளாக இருக்கலாம். நான் வளர்ந்து வந்த போராட்ட அரசியல் பாதையில் பெற்றுக் கொண்ட அனுபவங்கள் வேறானவை. 

அரசுக்கான ஆதரவு என்பது நிபந்தனையுடையதாக இருக்க வேண்டும். நிபந்தனையற்ற ஆதரவாக இருக்குமானால் - அரசுக்கும் நமக்கும் பரஸ்பரஸ்பர நல்லெண்ணத்தில் அது அமைய வேண்டும். அரசு மீதான நல்லலெண்ணமும் இன்றி, நிபந்தனையுமின்றி அரசுடன் இணைந்திருப்பதில் அர்த்தமில்லை என்பதைத்தான் நான் மீளவும் கூறிவைக்க விரும்புகிறேன். 

5 comments:

  1. மற்றவர்களை போல "பேச வேண்டிய இடத்தில பேச வேண்டும்" என்பது இதுதானோ ?

    எப்படி போனாலும், பொதுவாக சிறந்த நகைச்சுவை நடிகர்கள் நம் கிழக்கு அரசியல்வாதிகள் தான்.

    ReplyDelete
  2. என்னதான் சொன்னாலும் இந்த அரசு முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிரான அரசு என்பதில் இரண்டு கருத்திற்கு இடமேயில்லை. எனவே முஸ்லிம்களின் வாக்குகள் மூலம் பா.ம.சென்ற யாரும் இந்த அரசுக்கு சார்பாக இருக்கக் கூடாது. எனவே இந்த அரசை விட்டு விலகுவதுதான் சரியான முடிவு. ஆனால் அரசின் சுகபோக வாழ்க்கைக்கு அடிமைப்பட்ட றஊப் ஹக்கீம் விலகமாட்டார்.

    ReplyDelete
  3. செருப்பை காலுக்குத்தான் போடலாம்,
    தலைக்கு போடுவது தொப்பி அதற்கு பெயர் செருப்பல்ல..

    குப்பையில கிடந்தாலும் அது மாணிக்கம்தான் அது அழுக்காக இருந்தாலும் மதிக்கக்கூடியதுதான்.

    ReplyDelete
  4. muslim kaankirasu oru kadchi. vera velai illama rendu peru sanda.

    Muthalaavathu ungalukkellaam vaakalichcha makkala sollanum.

    Naddula muslimkalukku ulla pirachchinai sampanthamaaha ivankalukku entha kavalaiyum illa.

    Neenkallam suththa waste.

    Thirunthunka.........

    ReplyDelete
  5. தம்பி தவம், உங்களது பதில் அதிரடி அறிக்கையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்..!!!

    ReplyDelete

Powered by Blogger.