மே தினத்தில் உரிமை கேட்டு வீதிக்கு வந்த பெண்கள் (படங்கள்)
(இ. அம்மார்)
உலக தொழிலாளர் தினத்தை நினைவு கூருவோம்!
பெண்கள் தொழிலாளர்களின் உரிமையை பாதுகாப்போம்!
பெருந்தோட்ட, புலம்பெயர், வர்த்தக வலய தொழிலாளர்களின் உரிமைகளை உறுதி செய் என்ற கோசத்துடன் பெண்கள் ஒத்துழைப்பு முன்னணியின் மே தின நிகழ்வு இன்று கட்டுநாயக்க வர்த்தக வலய நுழைவாயலில் நடைபெற்றது. இந்த அமைப்பின் தலைவி பத்மினி வீரசூரிய மற்றும் செயலாளர் பி. லோகோஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
1886ம் ஆண்டு அமெரிக்காவின் சிக்காகோ நகரத்தில் 8 மணி வேலை நேரத்தை வலியுறுத்தி தொழிலாளர்கள் நடாத்திய போராட்டத்தின் பயனாக உலகத் தொழிலாளர்கள் பெற்றுக் கொண்ட வெற்றியை நினைவு கூர்வதற்காக மே 1ஆம் திகதி நாம் வீதியில் இறங்குகின்றோம்.
இத்தினத்தில் 8 மணி வேலை நேரத்தை வென்றெடுப்பதற்காக உயிர்களை தியாகம் செய்த தோழர்களை நினைவுப்படுத்துவதுடன், உரிமைகளை நிலை நிறுத்திக் கொள்வதற்கும் பறிக்கப்படும் உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்கும் சங்கற்பம் செய்து கொள்கின்றோம்.
தொடர்ந்து பதவியிலமர்ந்திருந்த அரசுகள் தொழிலாளர் உரிமைகளை பாதுகாப்பதற்கான எந்த விதமான செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை. மாறாக, அவர்களின் உரிமைகளை பறித்து அவர்களின் உழைப்பைச் சுரண்டி, குறைந்த வேதனத்துடன் அவர்களை தலைகுனிந்தவர்களாக வைத்திருக்கவே முயற்சி செய்தன.
இன்று சுதந்திர வர்த்தக வலயத்திலும், பெருந்தோட்டத்துறையிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் குறைந்த சம்பளத்திற்கு தமது உழைப்பை விற்பவர்கள் இந்நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டிய இளம் தலைமுறையினரை உலகிற்கு கொண்டுவர வேண்டியது இளம் தொழிலாள பெண்களே. அவர்களின் சேவை உரிய முறையில் மதிக்கப்படுவதில்லை. அவர்களக்குரிய கௌரவம் வழங்கப்படுவதில்லை. அத்துடன் அவர்களின் தொழிலுக்கேற்ற ஊதியம் வழங்கப்படுவதில்லை என்பதுடன் கூடும் சுதந்திரம் அறவே அற்றவர்களாக இருக்கின்றார்கள்.
வரலாறு காணாதவகையில் வாழ்ககை செலவு உயர்ந்து கொண்டே செல்கின்றது. பொருட்களின் விலை உயர்வினால் நீர், மின் கட்டணங்களின் உயர்வுப் போன்ற பிரச்சினைகளினால் சரமத்திற்கு உள்ளாகியுள்ள தொழிலாளர்கள் தனியார்துறை தொழிலாளர்களின் சம்பளம் ரூ. 15,000 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்று கோருகையில் 2013ம் ஆண்டில் தொழில் தருனர்கள் மோசடியான தந்திரோபாயமாக ரூ. 500, 1000, 1500 என்ற அளவிற்கே சம்பள உயர்வை அளித்து அவர்களை ஏமாற்றியுள்ளார்கள். இன்று நிலவும் வாழ்க்கைப் போராட்டத்துடன் சுரண்டப்படும் உழைப்பை ஒப்பிட்டு பார்க்கையில் தொழிலாளர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள உயர்வை உயர்வாக மதிக்க முடியாதவர்களாக இருக்கின்றார்கள் என்பது தெளிவு.
வேலைத்தளங்களிலும், குடும்பத்திலும், சமையலறையிலும் வாழ்க்கைப் போரில் வேதனையை அனுபவிக்கும் பெருந்தோட்டத்துறை, புலம்பெயர், மற்றும் வர்த்தக வலயங்களில் பணிபுரியும் பெண்கள் இம்முறை பெண்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஐக்கிய நிகழ்ச்சி நிரலின் கீழ் மே தினத்தை நினைவு கூற முன் வந்துள்ளமை வரலாற்று நிகழ்வாகும்.
தனித்தனியான போராட்டங்களின் வாயிலாக இதுவரை பெற்றுக் கொள்ள முடியாதுள்ள உரிமைகளை வென்றெடுப்பதற்காக பெண்கள் ஒத்துழைப்பு தொழிற்சங்கப்பதாகையின் கீழ்,
பெண் உழைப்பின் உரிமையை பாதுகாப்போம்!
பெருந்தோட்ட, புலம்பெயர், சுதந்திர வர்த்தக வலய உழைப்பாளர்களின் உரிமைகளை உறுதி செய்!
என்ற சுலோகங்களுடன் கட்டுநாயக்கவில் கூடினார்கள்.


Post a Comment