Header Ads



ஊடகவியலாளர்கள் மிக அவதானமாக சமூக ஊடகங்களை பயன்படுத்த வேண்டும் - அமீன்

(எஸ்.அஷ்ரப்கான்)

ஊடகவியலாளர்கள் மிக அவதானமாக சமூக ஊடகங்களை பயன்படுத்த முன்வரவேண்டும். எமது சமூகத்தில் பாரிய தாக்கங்களை இது ஏற்படுத்தி விடலாம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள சமூக ஊடங்களில் பணிபுரியும் ஊடகவியலாளர்களுக்கான சமூக ஊடகங்களின் ஒழுக்கம் எனும் தலைப்பிலான இரண்டு நாள் செயலமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே என்.எம்.அமீன் மேற்கண்டவாறு கூறினார்.

இலங்கையிலுள்ள ஐக்கிய அமெரிக்கா தூதுவராலயத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற இச்செயலமர்வில் அவர் தொடர்ந்தும் உரையாற்றும்போது,

முன்பிருந்த தாமதங்கள் இன்று செய்தி வெளிப்படுத்தலில் இல்லை. நொடிப்பொழுதிலே கைத்தொலைபேசி ஊடாக உடனுக்குடன் நாம் உலகின் மூலை முடுக்குகளிலிருந்து செய்திகளை பெற்றுக்கொள்ள முடிகிறது. இன்று உலகத்தில் சமூக ஊடகங்கள் அதிக தாக்கம் செலுத்தி வருகின்றன. அரபு புரட்சியில் சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகளவு காணப்பட்டதை நாம் நன்கு அறிவோம்.

நாட்டில் அண்மைக்காலமாக மிகப்பலமான தாக்கத்தை இந்த சமூக ஊடகங்கள் செய்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக கிழக்கு மாகாணத்திலேதான் இந்நிலைமை இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த ஊடகங்களை சிறப்பாக, அவதானமாக பயன்படுத்துவதன் மூலம்தான் நாம் தமிழ் பேசும் சமூகங்களுக்கு வரும் ஆபத்துக்களை தடுக்க முடியும்.

நமது பிராந்தியத்திலுள்ள இளம் ஊடகவியலாளர்களை சமூக ஊடகம் தொடர்பில் தெளிவான அறிவை பெற்றுக் கொள்ளும் வகையிலும் அவற்றை ஒழுக்கமுள்ள ஊடகமாக பயன்படுத்துவதற்கும் வழிகாட்ட வேண்டிய பொறுப்பு இருக்கின்றது. அந்த அடிப்படையில்தான் நாம் இவ்வாறான செயலமர்வுகளை செய்து வருகிறோம். எனவே இதனுாடாக பூரண பயனை பங்குபற்றுனர்களான ஊடகவியலாளர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த செயலமர்வில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 35 தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்கள் பங்கு பற்றினர்.

இதன் ஆரம்ப நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயலாளர்
எம்.ஏ.எம்.நிலாம், உப தலைவர்களான மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா, றசீத் எம்.ஹபீழ், உப செயலாளர் எம்.பி.எம்.பைறூஸ் பொருளாளர் எம்.பாயிஸ் மற்றும் பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் றொசான் கப்ரியல் உட்பட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினர்களும்  கலந்து கொண்டனர்.

1 comment:

  1. இத்தகைய விழிப்புணர்வு செயட்பட்டறைகள் நமது சமுகதிட்ற்கு மிகவும் அவசியம்.ஹில்ர் நபியின் கப்பலில் தண்ணீர் குடிக்க ஓட்டை போட்டதுபோல மடையர்கள் நாம் நல்லது செய்கிறோம் என நினைத்து கப்பலையேகவிழ்த்து விடுவார்கள் அவதானம் மிகவும் அவசியம்

    ReplyDelete

Powered by Blogger.