Header Ads



முஸ்லிம்கள் கடைப்பிடித்த பொறுமை குறித்து சிங்கள சமூகம் பாராட்டு - கட்டாரில் அமீன்


இலங்கை முஸ்லிம்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆயுதப் போராட்டங்களாலோ வன்முறைகளாலோ வெல்ல முடியாது. நிதானமாகவும் புத்திசாதுரியம் மிக்கதாகவும் எதிர்கொள்வதன் மூலமே வெற்றி கொள்ள முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் அண்மைக் காலத்தில் கடும் போக்கு பௌத்த அமைப்புகளின் எதிர்ப்பு நடவடிக்கைகளை தணிக்க எடுத்த நடவடிக்கை என ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் அல்ஹாஜ் என்.எம். அமீன் தெரிவித்தார். 

கட்டார் பனார் மண்டபத்தில் கட்டார் ஸ்ரீலங்கா முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்திருந்த ‘இலங்கை முஸ்லிம்களும் தற்போதைய நிலவரங்களும்’ என்ற தலைப்பில் பிரதான உரையை நிகழ்த்தி, இதனைத் தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் மஜ்லிஸின் தலைவர் முஹமட் மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அல்ஹாஜ் அமீன் கூறியதாவது, 

இலங்கை முஸ்லிம்கள் கடந்த சில மாதங்களாக கடும்போக்கு பௌத்த அமைப்புக்கள் சிலவற்றின் வெறுப்புப் பிரச்சாரம் காரணமாக, ஒரு பாரிய நெருக்கடியை எதிர்நோக்கினர். இதன் காரணமாக எந்நேரத்திலும் ஏதும் நடக்கலாம் என்ற ஓர் அச்சம் முஸ்லிம்களை ஆட்கொண்டது. 

முஸ்லிம் கவுன்ஸில், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவுடன் இணைந்து இதனை எதிர்கொள்ள பல வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. முஸ்லிம் அரசியல் தலைமைத்துவமும் எமது முயற்சிகளுக்கு ஆசிர்வாதமும் ஆதரவும் வழங்கியது. முஸ்லிம்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட குற்றச் சாட்டுக்களை பெரும்பான்மைச் சமூகத்தின் அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள், மகா சங்கத்தினர் போன்றோருக்கு நாம் எடுத்து விளக்கினோம். 95 சதவீதமானோர் எமது நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டார்கள். 

ஹலால் எதிர்ப்பு, சனத்தொகை அதிகரிப்பு பற்றிய குற்றச் சாட்டு, சட்டக் கல்லூரிக்கு முஸ்லிம் மாணவர்கள் கூடுதலாக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற குற்றச்சாட்டு, முஸ்லிம்கள் மத்தியில் தீவிரவாதம் பரவுகின்றது என்ற குற்றச்சாட்டு போன்றனவற்றை கடும்போக்கு அமைப்புகள் நாளாந்தம் பேசத்தொடங்கின. ஊடகங்கள் அவற்றிற்கு மிக முக்கியத்துவம் கொடுத்தன. துரதிஷ்டவசமாக முஸ்லிம்கள் தரப்பில் ஊடகங்கள் இல்லாமையின் காரணமாக முஸ்லிம்களுக்கு தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு உடனடியாக தெளிவான பதில்களை வழங்க முடியாமல் போனது. இந்தத் தாமதம் பெரும்பான்மை மக்கள் மத்தியில் குற்றச்சாட்டுகள், நியாயமானவை என்ற ஒரு உணர்வை உருவாக்கியது. இந்தப் பின்னணியில் முஸ்லிம் கவுன்சிலும் ஜம்மியத்துல் உலமாவும் பல்வேறு அமைப்புக்களைச் சந்தித்து எமது பக்கத்தில் உள்ள நியாயங்களை தெளிவுபடுத்தின. 

பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் ஜே.வி.பி, சோஷலிச முன்னணிக் கட்சி, ஜாதிக ஹெல உறுமய உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளுடன் நடாத்திய பேச்சுவார்த்தைகளின் பயனாக முஸ்லிம்கள் பற்றிய பரப்பப்பட்டிருந்த தப்பபிப்பிராயங்களை நீக்க முடிந்தது. இவர்களும் இந்தக் கட்சிகளும் தமது சக்திக்கேற்ப முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களில் நியாயமில்லை என்பதை பல்வேறு கட்டங்களில் பல்வேறு நடவடிக்கை மூலம் நாட்டிற்குத் தெரிவித்தனர். 

முஸ்லிம்கள் கையில் ஊடகங்கள் இருந்திருந்தால் இந்தப் பிரச்சினைகளை இதற்கு முன்பே வெற்றி கொண்டிருக்கலாம். இலங்கையில் 49 வானொலிச் சேவைகளும், 17 தொலைக்காட்சிச் சேவைகளும், 18 நாளிதழ்களும் இருக்கின்றன. துரதிஷ்டவசமாக இவற்றில் ஒன்றாவது முஸ்லிம்கள் கையில் இல்லை. இந்த நிலை மாறவேண்டும். குறைந்த பட்சம் முஸ்லிம்கள் தமது கட்டுப்பாட்டில் தேசிய ரீதியில் இயங்கும் ஒரு பத்திரிகையை, ஒரு தொலைக்காட்சியை ஆரம்பித்தாகவேண்டும். முதற்கட்டமாக சிங்களத்தில் ஆங்கிலத்திலும் ஒரு வாரப்பத்திரிகை ஆரம்பிக்கவேண்டும். இது இன்றைய காலத்தின் தேவையாகும். 

கடந்த நெருக்கடி காலத்தில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கை முஸ்லிம்கள் ஆற்றிய பணி பாராட்டுக்குரியது. புலம்பெயர்ந்த தமிழர்கள் போன்று முஸ்லிம்களுக்கு செயற்பட முடியாது என்பதை உணர்ந்து செயற்பட்டார்கள். புலம் பெயர்ந்து வாழும் முஸ்லிம்கள் தாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இலங்கையில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருக்கும் 95 சதவீதத்துக்கு மேற்பட்ட பௌத்தர்களது நல்லெண்ணத்தை பாதிக்காத வகையில் செயற்படுவது அவசியமாகும். ஜனநாயக ரீதியில் தம்மோடு  வாழும் சிங் கள சகோதரர்களூடாக தமது நிலையைத் தெளிவு படுத்தி அவர்களது ஆதரவையும் திரட்டி இவ்வாறான வெறுப்பு நடவடிக்கைகளுக்கு பதிலளிப்பதுதான் முக்கியமானதாகும். 

கட்டாரில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் இந்த விடயத்தில் முன்மாதிரி காட்டியது பாராட்டுக்குரியது. இலங்கை முஸ்லிம்கள் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக சிங்கள மக்களோடும் தமிழ் மக்களோடும் வாழ்ந்து வருகிறார்கள். சிறு சிறு பிரச்சினைகள் வந்தாலும் நாம் இதுவரை காலமும் ஒற்றுமையாகவே வாழ்ந்து வருகின்றோம். இந்த ஒற்றுமையைத் தொடர்ந்து பேணி வாழ வழி செய்வதே இன்று என்முன் எழுந்துள்ள பெரிய சவாலாகும். இந்த சவாலை எதிர்கொள்வதற்கு முஸ்லிம்கள் ஐக்கியமாகச் செயற்படுவது அவசியமாகும். பிளவு பட்டால்  தோல்வி எமக்கு, ஆகவே இங்கும் எங்கும் நாம் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும். 

முஸ்லிம் சமூகத்தை இவ்வாறான ஒரு இக்கட்டான நிலையை எதிர்நோக்க உருவாகிய காரணங்கள் என்ன என்பதை சமூகம் மீளாய்வு செய்து பார்க்கவேண்டியது அவசியமாகும். எமது சமூகம் விட்ட தவறுகள் என்ன? நாம் தேசிய நீரோட்டத்தில் முழுமையாகப் பங்குகொள்ளவில்லையா என்பது பற்றி முஸ்லிம் புத்திஜீவிகள் ஆராய வேண்டும். எமது நடை உடை பாவனைகளில் ஏதும் தவறு இருக்கின்றதா என்று நாம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும். 

அண்மைக்கால முஸ்லிம் எதிர்ப்புச் செயற்பாடுகளின் போது இலங்கை முஸ்லிம்கள் கடைப்பிடித்த அமைதி மற்றும் பொறுமை குறித்து பெரும்பான்மை சமூகத்தவர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். நாம் சந்தித்த மகாநாயக்க தேரர்கள்  மற்றும் அரசியல் முக்கியஸ்தர்கள் இதுகுறித்து தமது திருப்தியைத் தெரிவித்தனர். பொதுவாக முஸ்லிம்கள் கடந்த காலங்களில் உணர்ச்சி வசப்பட்டு செயற்பட்ட போதும் ஆனால், இன்று இந்தப் பிரச்சினைகளில் முஸ்லிம்கள் மிகப் பொறுமையுடன் செயற்பட்டார்கள். முஸ்லிம்களை இந்த நிலைக்கு கொண்டு வருவதில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா ஆற்றிய பங்களிப்பு பாராட்டுக்குரியது. 

முஸ்லிம் கவுன்சில் இந்த விடயங்களை எதிர்கொள்வதில் சமூகத்துக்கு நிதானமான தலைமைத்துவத்தை வழங்க வேண்டும். தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல் விவகாரம் வெசா க் தினத்திற்கு முன் ஒரு பெரும் பிரச்சினையை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை உருவாக்கியிருந்தது. சில அமைப்புகள் இங்குள்ள பள்ளிவாசலை ஆயிரக்கணக்கானோரை ஏற்றிச் சென்று அழித்துவிடுவதாக எச்சரித்திருந்தன. நிதானப் போக்குடைய பௌத்த பிக்குகள் முன்னிலையில் பாதுகாப்புச் செயலாளர் தலைமையில் நடந்த கூட்டங்களில் இப்பிரச்சினையை சுமுகமாக தீர்த்துக் கொள்ள இணக்கம் கண்டோம். இன்னுமொரு அயோத்தியாக மாறி இரு இனங்களுக்குமிடையே சதா நிலவும் ஒரு கசப்புணர்வாக இது மாறக் கூடாது என்பதில் முஸ்லிம் கவுன்சில் உறுதியாக செயற்பட்டது. இதன் காரணமாக பள்ளிவாசலைப் பாதுகாத்து இப்பிரச்சினைக்கு சுமுகமான தீர்வொன்றைக் காண முடிந்துள்ளது. 

கலாநிதி மஷிஹுத்தீன் இனாமுல்லா, முஸ்லிம் கவுன்சில் செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹ்மான் ஆகியோரும் உரையாற்றினர். பெரும்தொகையான இலங்கையர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு கேள்விகளை எழுப்பி விளக்கங்களைப் பெற்றுக் கொண்டனர். 

No comments

Powered by Blogger.