கல்முனை மாநகர மேயரே இது உங்களின் பார்வைக்கு..!
(ஏ.எல். ஜுனைதீன்)
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை ( ஜீ.எம்.எம்.எஸ் ) வீதியின் ஒரு பகுதி தேசிய நீர் விநியோக வடிகாலமைப்புச் சபையின் குடி நீர் குழாய் திருத்த வேலைகளுக்காக கொத்தி உடைக்கப்பட்டு திருத்த வேலைகள் முடிவடைந்த பின்னரும் இப்பாதை மீண்டும் திருத்தப்படாமல் மாதக் கணக்கில் குன்றும் குழியுமாக அபாயகரமான நிலையில் அப்படியே விடப்பட்டிருப்பது குறித்து மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பொது மக்கள் ஒன்றுகூடி புகார் கடிதம் எழுதி அதில் அனைவரும் ஒப்பங்கள் இட்டு உரிய அதிகாரிகளுக்கு வழங்கியும் இது வரை இது குறித்து எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதாக இல்லை எனவும் பிரதேச மக்களால் விசனமும் தெரிவிக்கப்படுகின்றது.
.
மேற்படி இவ்வீதி ஒரு சில மாதங்களுக்கு முன்னர்தான் புதிதாக கொங்கிறிட் வீதியாக மாற்றப்பட்டது. இவ்வீதியின் ஒரு பகுதியில் தேசிய நீர் விநியோக வடிகாலமைப்புச் சபைக்குச் சொந்தமான குடி நீர் குழாய் உடைந்து நீர் வெளியேறியதையடுத்து திருத்தத்திற்காக சுமார் 20 சதுர அடியளவில் இக்கொங்கிறிட் பாதை கொத்தப்பட்டது. இப்படிக் கொத்தப்பட்ட கொங்கிறிட் வீதியே குடி நீர் குழாய் திருத்தம் செய்யப்பட்ட பின்னரும் வீதி எதுவித திருத்தங்களும் செய்யப்படாமல் கடல் மண், முண்டுக் கற்கள் இட்ட நிலையில் குன்றும் குழியுமாக அப்படியே விடப்பட்டிருக்கின்றது. இப்பாதையில் இரவு நேரங்களில் போக்கு வரத்துச் செய்பவர்கள் அபாயகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கொத்தப்பட்டு போக்குவரத்திற்கு அபாயகரமான நிலையில் விடப்பட்டுள்ள இவ் வீதியை திருத்துவது யார்? பாதையைக் கொத்திய தேசிய நீர் விநியோக வடிகாலமைப்புச் சபையா? அல்லது கல்முனை மாநகர சபையா? இவ்வாறு மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். கல்முனை மாநகர மேயர் மற்றும் இப்பிரதேசத்தைச் சேர்ந்த மாநகர சபை உறுப்பினர்கள் கொத்தப்பட்ட இப்பாதையை உடன் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றார்கள்.

ஆமாம் செய்யவில்லையென்றால் சொல்லிச்செய்யவேண்டியது நமது கடமையல்லவா?
ReplyDelete