முஸ்லிம்கள் அவதானமாக இருக்கவேண்டிய காலம்..!
(சத்தார் எம். ஜாவித்)
அமைதியான ஒரு சமுகத்தை வன்முறைக்கு தூண்டி விட்டு அதன் மூலம் குளிர் காயும் விஷமிகள் தற்போது தளிர் விட்டுக் கொண்டிருக்கும் இக்காலத்தில் முஸ்லிம்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டிய காலமிதுவாகும்.
இலங்கையின் வரலாற்றில் முஸ்லிம்கள் அமைதியையும், சமாதானத்தையும் பேனிக்காத்த ஒரு சமுகமாக சிங்கள மற்றும் தமிழ் மக்களிடத்தில் இரண்டறக் கலந்து வாழ்ந்த வரலாறுகளே காணப்பட்டு வருகின்றன.
இவ்வாறானதொரு கொள்கை கொண்ட ஒரு சமுகத்தை ஏனைய சமகங்களில் இருந்து பிரித்து தமது சுய இலாபங்களுக்காக அவர்களை மற்ற மக்களுடன் தேவையற்ற விதத்தில் முட்டிமோதுவதற்கு என்றே ஒரு பிரிவினர் இன்று சமயத் தலைவர்கள், சமயத்தைப்ப பாதுகாக்கின்றவர்கள் என்று போலி வேஷத்துடன் நாட்டை சின்னா பின்னமாக்கும் செயற்பாட்டில் இறங்கியுள்ளனர்.
மேற்படிச் தீச் செயல்களை கொள்கையாகக் கொண்டு மக்களின் இயல்பு வாழ்க்கையையும், சமய நம்பிக்கைகளையும் சிர்குலைத்து வரும் நபர்களையும், குழுக்களையும் இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற ரீதியிலாவது சட்டம் கண்டு கொள்ளாதிருப்பது அமைதியை விரும்பும் மக்களிடத்தில் வேதனைகளை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் அரசியல் வரலாற்றை சற்று பின்னோக்கி பார்க்கும்போது இருந்த நிலைமைகள் தற்போதில்லை அன்று ஆட்சியில் இருந்தவர்கள் மக்கள் நலனிலும் அவர்களின் சமய நலன்களிலுமே அதிகம் ஆர்வம் கொண்டவர்களாக இருந்துள்ளனர். அதன் காரணமாக அவர்களின் ஆட்சி நேர்த்தியாக இடம்பெற்றதை வரலாற்றுச் சம்பவங்கள் மூலம் அறியக் கூடியதாகவுள்ளது. இதன் காரணமாக மக்கள் சமய ரீதியான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவில்லை என்பதனையும் கூட வரலாறுகள் காட்டி நிற்கின்றன.
ஆனால் தற்கால அரசில் முஸ்லிம்களுக்கும் அவர்களின் சமயத்திற்கும் பௌத்த தர்மத்தை சரிவரக் கற்றுக்கொள்ளாத ஆனால் பௌத்தன் என்று மார்தட்டும் ஒருசில பௌத்த பிக்குகள் செய்யும் அட்டகாசமும் அடாவடித்தனமும் இலங்கையை ஒரு ஆபத்தான நிலைமைக்கு இட்டுச் செல்வதை காட்டி நிற்கின்றது.
எந்தவொரு நாடாக இருந்தாலும் அந்த நாட்டிற்கும் அதனை வழி நடத்ததும் அரசாங்கத்திற்கும் அதன் ஆட்சியாளர்களுக்கும் எந்தவொரு குடி மகனும் நாட்டுச் சட்ட திட்டங்களுக்கு மாறான ஒரு குழுவினரால் தாக்கப்படுவதையோ அல்லது தேவையில்லாமல் வஞ்சிக்கப்படுவதற்கோ இடமளிக்க முடியாது. ஆனால் இலங்கையில் ஜனநாய விழுமியங்களுக்கு ஆப்பு வைத்து சட்டத்தை தூக்கி எறிந்து நடக்கும் அடக்குமுறைக் கலாச்சாரமே மேலோங்கி வருவதை அண்மைக்காலமாக தாராளமாக காணக் கூடியதாகவுள்ளது.
இன்று சர்வதேசம் இலங்கையை எதிர்ப்பதற்கு ஒரு காரணமாக இலங்கையில் சிறுபான்மை மக்கள் மீதும் அவர்களின் சமய விழுமியங்கள் மீதும் ஏற்படுத்தப்பட்டு வரும் தாக்க விளைவுகளைக் குறிப்பிடலாம்.
இவ்வாறு இலங்கையின் இயல்பு நிலைமைகளை குழப்பி சமயத்தைக் காப்பாற்றுகின்றோம் என்று பகிரங்கமாக மார் தட்டும் பல தீவிர செயற்பாட்டாளர்கள் வெளிப்படையாகவே திரிகின்றனர். இவர்களின் விடயத்தில் சட்டம் மௌனம் காப்பது எதிர் காலத்தில் இலங்கையின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் இடையூறாக அமைவதற்கான சமிக்கையாகவே கருதப்படுவதாக புத்தி ஜீவிகள் ஐயப்படுகின்றனர்.
சமயம் என்ற ரீதியில் எந்தவொரு சமயத்தவனாக இருந்தாலும் அவன் அவனது சமயத்தில் நம்பிக்கை கொண்டவனாக இருந்தால் அவனின் சமயம் மீது இழுக்குகள் ஏற்படுத்தப்படும்போது அவனால் சகித்துகக் கொள்ள முடியுமா?
ஆனால் இன்று இஸ்லாத்திற்கு எதிராக பொதுபல சேனா, அரசுடன் ஒட்டிக்கொண்டிருந்து குழி பறிக்கும் ஜாதிக ஹெல உறுமைய என்பவற்றுடன் இன்னும் ஒரு சில இனவாத பௌத்த செயற்பாட்டாளர்கள் செய்துவரும் அநியாயங்களும், அட்டூழியங்களும், கொடுமைகளும் எந்த மனிதனாலும் பொறுத்துக் கொள்ள முடியுமா? ஆனால் முஸ்லிம்கள் இவ்வளவும் நடந்தும் புனித மிகு இஸ்லாத்தின் கோட்டுபாடுகளை கடைப்பிடித்து எவ்வளவு பொறுமையாக இருக்கின்றனர் என்பதனை தீய இனவாத செயற்பாட்டாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
முஸ்லிம்களும் அவர்களத சகிப்புத் தன்மையை இழந்தால் இலங்கையில் அமைதியை எதிர் பார்க்க முடியுமா? எந்த விதத்திலாவது தீய விஷமிகள் முஸ்லிம்களைத் தீண்டி வன்முறைகளை தோற்றி ஒருவருக்கொருவர் சண்டை பிடிப்பதையே தமத முழு நோக்காகக் கொண்டுள்ளனர். முஸ்லிம்கள் பொறுமை இழந்திருந்தால் தம்புள்ளைப் பள்ளிவாசல் உடைக்கப்பட்டபோதே சண்டையில் ஈடுபட்டிருப்பார்கள் அல்லவா?
ஆனால் முஸ்லிம்கள் சமாதானத்தை விரும்பும் உண்மையான மார்க்கத்தை கடைப்பிடிப்பவர்கள் மார்க்க கட்டுக்கோப்புக்களுக்கு கட்டுப்பட்டவர்கள். அமைதிகாப்பவர்கள், பொறுமை காப்பவர்கள். விட்டுக்கொடுக்கும் உயரிய குணமுடையவர்கள் என்பனவற்றை கடந்தகால பல வன்முறைகளுக்கு மத்தியில் இனவாத விஷமிகளுக்கு பொறுமை பற்றி கற்றுக் கொடுத்துள்ளனர் என்பதனை இங்கு தாராளமாகவே சுட்டிக்காட்டலாம்.
முஸ்லிம்கள் வன்முறைகளை எதிர்ப்பவர்களாகவும் பொறுமை கொண்டவர்களாகவும் இலங்கையின் இறைமைக்கும், சமாதானத்திற்கும், அரசியல் சட்டங்களுக்கும், நீதிக்கும் பூரணமான மதிப்பளித்து இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு இழுக்கு ஏற்படாத வகையில் செயற்பட்டு வருபவர்கள் என்றால் அது முஸ்லிம்களையே சாரும். இவ்வாறு நன்நோக்கம் கொண்ட ஒரு சமுகத்தின் சமயத்தை காக்கவேண்டியவர்கள் யார்? அதற்கு இழுக்குகள் ஏற்படும்போது பொறுப்புக் கூறவேண்டியவர்கள் யார்? என்பது போன்ற வினாக்களுக்கு விடைகாண்பது காணல் நீராகவேயுள்ளது.
ஜனநாயக நாடு என்ற வகையில் இலங்கையில் முஸ்லிம்களின் சமயத்திற்கு பூரண பாதுகாப்பும். முஸ்லிம்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கி தேவையற்ற கைதுகளை நிறுத்தி சமயத்திற்காக குரல் கொடுத்த குரல்களை ஒடுக்காது சிறுபான்மை மக்களின் நலன்களில் அதீத அக்கறை செலுத்தி அவர்களின் பிரச்சினைகளை இனங்கண்டு கலந்துரையாடல்கள் மூலம் அனைவரும் விரும்பும் வகையில் அம்மக்களின் பிரச்சினைகளுக்கு தகுந்த தீர்வினை வழங்குவதே ஜனநாயக அரசாங்கத்தின் கடமையாகும்.
இலங்கை அரசியல் வரலாற்றில் அரசாங் ஆட்சியில் சிறுபான்மைச் சமுகங்கள் என்பவர்கள் இன்றியமைதாவர்கள். ஏனெனில் சிறுபான்மைச் சமுகங்களின் பங்களிப்பு இல்லாமல் இலங்கையின் அரசியல் ஆட்சி முறையை வழி நடத்த முடியாது.
இந்தவகையில் பார்க்கும்போது அரசாங்கம் இனவாதக் கட்சிகளைக் கொண்டு அரசை அமைக்க முடியாது. சிறுபான்மை மக்களை அரவனைத்து அவர்களுக்கான உரிமைகளையும், கௌரவத்தையும் கொடுத்து ஆட்சியின் பங்காளர்களாக உள்வாங்கும் செயற்பாடே இன்று அரசுக்குத் தேவை.
அரசாங்கம் நாட்டின் நலனில் அக்கறை கொண்டிருக்குமானால் குறுகிய மற்றும் சுயநலன்களுக்கு உட்படாது சகல சமயங்களையும் வேறுபாடின்றி ஒரே கண்ணோட்டத்தில் அனுகி இலங்கையின் ஒற்றுமைக்கும், சமாதானத்திற்குமான தூர நோக்கமுடைய என்னங் கொண்டதாக செல்வதே வெற்றிக்கான வழிமுறையாகும்.
எனவே அமைதியான ஒரு சிறுபான்மைச் சமுகத்தை நாளாந்தம் வீணான பிரச்சினைகளை தூண்டி விட்டு கூத்துப்பார்க்கும் பெரும்பான்மைக்குள் இருக்கம் இனவாதிகளின் சூற்சுமத்தில் இருந்து பாதுகாக்கவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

தொளுகயைக்கொண்டும் பொறுமையைக்கொண்டும் அல்லாஹ்விடம் பிராத்திப்போம்....!
ReplyDeleteசொத்துக்களிலும் , மானங்களிலும் கை வைத்தல் உயிர் தியாகம் செய்வோம்... இந்த உலகம் முஸ்லிம்களுக்கு சிறைச்சாலை...(அல்லாஹு அக்பர்!!!!!)