பௌத்த குரு தீக்குளித்தமையால் மீண்டும் பிரச்சினை தலைதூக்குமோ என்ற அச்சம் - அமீன்
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
இலங்கையில் அதிகம் முரண்பாடுகள் உள்ள சமூகமாக முஸ்லிம்கள் திகழ்கின்றனர். ஆனால் முரண்பாடுகளை எவ்வாறு கையாளுதல் என்பது தெரியாதவர்களாக உள்ளனர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவருமான என்.எம்.அமீன் தெரிவித்தார்.
ஓட்டமாவடி முஹம்மத் றிழா எழுதிய 'முரண்பாடுகளை கையாளுதல்' எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை பிற்பகல் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மஹா வித்தியாலயத்தில் கவிமணி எஸ்.நளீம் தலைமையில் நடைபெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
தற்போது இலங்கை நாட்டில் பெரும்பான்மை சமூகத்திற்கும் முஸ்லிம்களுக்குமிடையில் ஏற்பட்டுள்ள பிரதான முரண்பாட்டை களைய வேண்டும்.
இப்படியான சந்தர்ப்பங்களை எவ்வாறு கையாளுவது என நாங்கள் அவசியம் அறிந்து வைத்திருக்க வேண்டும்.எமக்கெல்லாம் முன்மாதிரியான நபி முஹம்மத் (ஸல்)அவர்களின் காலத்தில் இடம்பெற்ற ஹுதைபியா உடன்படிக்கை உலக வரலாற்றில் மிகப் பெரிய சமாதான உடன்படிக்கையாகும்.ஏனெனில் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என எழுதுமாறு சொன்ன போது குறைஷிக் காபிர்கள் எழுத முடியாது முஹம்மத் என்றுதான் எழுத வேண்டும் எனக் கூறினார்கள்.பின்பு நபியவர்கள் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்(முஹம்மத் அல்லாஹ்வின் தூதர்)என்பதை அழிக்கச் சொல்லி விட்டு முஹம்மத் இப்னு அப்தில்லாஹ்(அப்துல்லாஹ்வுடைய மகன் முஹம்மத்)என எழுதுங்கள் என்று சொன்னார்கள்.ஸஹாபாக்கள் அழிக்க முடியாது என்று கூறியும் அழிப்பதற்கு நபியவர்கள் இணக்கம் தெரிவித்தார்கள்.
இன்றைக்கு அரசியலில் இருப்பில் பல்வேறு விடயஙகளில் எமக்கு மத்தியில் முரண்பாடுகள் காணப்படுகின்றன.முரண்பாடுகளால் நிறைந்திருக்கும் நாம் அவற்றை எப்படிக் கையாள்வது? அவற்றுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது? என்பதற்கான வழிகாட்டல்களையும் அறிவுறுத்தல்களையும் பெற்றிருத்தல் அவசியம்.
இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு பல்வேறு சவால்கள் விடுக்கப்பட்டன.என்றாலும் கடந்த சில தினங்களாக அவைகள் தணிந்து சுமுகமான நிலைக்கு வந்திருந்தது.ஆனால் நேற்று தலதா மாளிகைக்கு முன் மாடு அறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பௌத்த மதகுரு தீக்குழித்தமையினால் மீண்டும் பிரச்சினை தலைதூக்குமோ என்ற அச்சம் நிலவுகின்றது.
எமக்கு ஹஜ்ஜுடைய காலம் வரும்.அதிலே உழ்ஹிய்யாக்கள் கொடுக்க வேண்டியேற்படும்.நிறைய மாடுகளை அறுக்க வேண்டியேற்படும். இப்படியான சந்தர்ப்பத்தில் எமது மார்க்கத்திற்கு எவ்வித பங்கமும் ஏற்படாதவாறு எவ்வாறு இந்தப் பிரச்சினையை கையாள்வது என்பது பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
இன்று இலங்கையில் முஸ்லிம்களின் சனத்தொகை தொடர்பில் வாந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
2052ஆகும் போது இலங்கை முஸ்லிம் நாடாக மாறிவிடும் என வாந்திகள் பரப்பப்பட்டுள்ளன.உண்மையில் முஸ்லிம்களின் சனத்தொகை அதிகரிக்கின்றது. ஆனால் பெரும்பான்மை இனத்தவரை மிஞ்சிச் செல்லும் அளவுக்கு சனத்தொகை அதிகரித்துச் செல்கிறது என்பது பொய்யான இட்டுக்கட்டாகும்.அவற்றிற்கு நவீன விஞ்ஞான முறையில் பதில்கள் அளிக்கப்பட வேண்டும்.
முரண்பாடுகளில் முஸ்லிம்களாகிய எங்களிடத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் அப்போதுதான் சிறந்த சீரிய சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment