பொதுபல சேனாவை கண்டுகொள்ளாத அரசாங்கம், ஆஸாத் சாலியை கைது செய்தது ஏன்?
இந்நாட்டில் அண்மைக் காலமாக சில இனவாத சக்திகளினால் எழுப்பப்பட்டு வரும் இனவாத, மதவாத நடவடிக்கைகளுக்கு எதிராக மிக வெளிப்படையாகக் குரல் கொடுத்து வந்த தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் ஆஸாத் சாலியை அரசாங்கம் அநீதியான முறையில் கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிப்பதுடன், நாட்டின் சட்டத்தை அமுல்படுத்தும் விடயத்தில் அரசாங்கம் பாரபட்சமாக செயற்பட்டிருப்பதையே இக்கைது சம்பவம் நிரூபித்துள்ளது என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் ஆஸாத் சாலியை அரசாங்கம் கைது செய்திருப்பது தொடர்பாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த ஆஸாத் சாலி, அந்நாட்டு ஊடகமொன்றில் தெரிவித்ததாக வெளியாகியிருந்த கருத்துக்களின் அடிப்படையிலேயே அவரைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் தான் அவ்வாறான கருத்துக்களைத் தெரிவிக்கவில்லையென குறித்த ஊடகத்திற்கு அவரது மறுப்பைத் தெரிவித்திருந்ததை அவரது சட்டத்தரணிகள் உறுதிப்படுத்தியுள்ள நிலையிலும் அவரைக் கைது செய்திருப்பதானது, அவரை எந்த வழியிலேனும் கைது செய்யவே வேண்டும் என்ற அரசாங்கத்தின் நீண்ட நாள் வேட்கையை நன்கு புலப்படுத்துகின்றது.
மேலும் இவரின் கைது தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் 'இந்நாட்டில் இனவாதத்தைத் தூண்டி இனங்களுக்கிடையில் முரண்பாடுகளையும் குழப்பங்களையும் உருவாக்கும் வகையில் செயற்பட்டார் என்பதனாலேயே கைது அவர் செய்யப்பட்டிருக்கிறார்' எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்நாட்டில் நடந்தேறிவரும் அண்மைக்கால சம்பவங்களைப் பார்க்கின்ற எவரும் இது எவ்வளவு தூரம் அநீதியான பாரபட்சமான குற்றச்சாட்டு என்பதனை புரிந்து கொள்ள முடியும்.
இனவாதத்தையும், மதவாதத்தையும் பகிரங்கமாகவே இந்த நாட்டில் பல்வேறு நடவடிக்கைகள் மூலமாக வெளிப்படுத்தி அதனூடாக ஒரு பாரிய சமூகக் கலவரத்துக்கு வித்திட்ட பொது பல சேனா போன்ற பௌத்த தீவிரவாத அமைப்புக்களின் விஷமத்தனமான கருத்துக்களையும், வெறுக்கத்தக்க செயற்பாடுகளையும் கண்டு கொள்ளாத அரசாங்கம், அவ்வாறான இனவாத சக்திகளின் செயற்பாடுகளைக் கண்டித்து ஆஸாத் சாலி தெரிவித்த கருத்துக்களையும், இனவாதத்துக்கு எதிரான அவரது செயற்பாடுகளையும் நசுக்கும் வகையிலேயே இந்தக் கைது நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கிறது எனத் தெளிவாகத் தெரிகிறது. அந்த வகையில் இந்த நாட்டின் சட்டத்தை பாரபட்சமான முறையில் தான் விரும்பும் வகையில் அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்றே நாம் கருதுகின்றோம்.
இந்நாட்டின் இனமத ஒற்றுமை குறித்தும் சக வாழ்வு குறித்தும் அக்கறை கொண்ட பலரும் ஆஸாத் சாலி போன்றே இந்நாட்டில் நடந்தேறி வரும் இனவாத நடவடிக்கைகளையும் சட்டத்தை மீறும், வன்முறையைத் தூண்டும் முயற்சிகளையும் பகிரங்கமாகக் கண்டித்து வருகின்றனர்.
இவ்வாறான குரல்கள் ஒலிப்பதற்கு காரணமாக அமைந்த விடயங்கள் எவையென தெட்டத் தெளிவாக தெரிந்திருந்தும் கூட அந்தக் காரணிகளை ஒழித்து இந்நாட்டில் சமூகங்களுக்கிடையிலான நல்லுறவிற்கும் நிரந்தர சமாதானத்திற்கும் அரசாங்கம் உதவியிருக்க வேண்டும். துரதிஷ்டவசமாக அவ்வாறு செய்யாமல் அத்தகைய காரணிகளை கண்டும் காணாமலும் இருந்து கொண்டும் அவற்றை மறைமுகமாகவும் நேரடியாகவும் போஷித்து ஊக்கப்படுத்தும் வகையில் நடந்து கொண்டும் வரும் அரசாங்கமானது இன்று ஆஸாத் சாலியை கைது செய்திருப்பதன் மூலம் நாட்டின் சட்டத்தை பாரபட்சமாகப் பிரயோகித்திருப்பதானது கண்டிக்கத்தக்கதாகும்.
இந்நாட்டின் சுபீட்சமான எதிர்காலம் பற்றிய அக்கறையோடு உண்மையான சமாதானத்தை நேசிக்கும் சமூகங்கள் சார்பாக எழுப்பப்படும் இவ்வாறான குரல்களை திட்டமிட்ட முறையில் சட்டத்தின் துணையுடன் அடக்கியொடுக்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் தொடர் முயற்சிகளின் மற்றுமொரு கட்டமே இதுவாகும் என்பதில் ஐயமில்லை.
உண்மையில் இந்நாட்டின் எதிர்கால நலன்களை கருத்திற் கொண்டு ஒற்றுமையான தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக குரலெழுப்பும் நிராயுதபாணிகளான அரசியற் செயற்பாட்டாளர்களை அரசாங்கம் கைது செய்வதை தவிர்த்து, சமூகவாதம், இனவாதம், மதவாதம் என்பவற்றைப் பகிரங்கமாகப் பேசியும், பொலிஸாரின் முன்பாகவே 'சீருடை அணியாத பொலிஸ்காரர்கள்' என்று தங்களைப் பிரகடனப்படுத்தி சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டவர்களாக மத வழிபாட்டுத் தலங்களையும், முஸ்லிம் வர்த்தக நிலையங்களையும் தாக்கியழிக்க முற்படும் இனவாத கடும்போக்காளர்களைக் கைது செய்வதற்கு அரசாங்கம் துணிந்திருக்க வேண்டும்.
அரசாங்கம் முஸ்லிம் வர்த்தக நிலையமொன்றை பகிரங்கமாகத் தாக்கியழிக்க முற்பட்ட இனவாத வன்முறையாளர்களை கௌரவமாகக் கைது செய்து பின்னர் கௌரவமாக சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றியது இன்று உலகறிந்த விடயமாகும். இந்த கடும்போக்குத் தீவிரவாதிகளைக் கண்டித்து ஏப்ரல் 12ல் அமைதி வழியில் மெழுகுதிரி ஏந்திப் போராட்டம் நாடாத்திய பேஸ்புக் குழு உறுப்பினர்களை அரசாங்கமும், அதன் பாதுகாப்புக் கரங்களும் விரட்டியடித்தது மட்டுமல்லாமல் அதனைத் தொடர்ந்து அவர்களை தேடித்தேடி விசாரித்து நெருக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படகிறது.
சட்டத்தைப் பிரயோகப்படுத்தும் விடயத்தில் அரசாங்கத்தின் பாரபட்சமான செயற்பாடுகளை முழு நாட்டுக்கும், உலகுக்கும் அம்பலப்படுத்துபவையாக இவ்வாறான சம்பவங்கள் அமைந்துள்ளன என்பது பெருந் துரதிஷ்டமாகும். எனவே அரசாங்கம் இவ்வாறு பாரபட்சமாக சட்டங்களைப் பிரயோகிக்கும் வழிமுறைகளைக் கைவிடுவதுடன், கைது செய்யப்பட்டுள்ள ஆஸாத் சாலியையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கேட்டுக் கொள்கின்றது.
மேலும், இந்நாட்டில் நிரந்தர சமாதானத்திற்கு அச்சுறுத்தலாக மாறிவரும் இனவாத சக்திகளை கட்டுப்படுத்தி அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இனிமேலாவது அரசாங்கம் நேர்மையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எமது இயக்கம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

Yes I agree Because bothu pala sena can talk against the muslims, can attack muslim properties,they can ask mosques need to remove and ect.. So Government no question about it.How long you can dance we will see for every thing there is an end. You all will realized on that day.
ReplyDeleteThis government doesn't have work. That's y diverting public from its un capabilities. ..
ReplyDelete