முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளைப் பற்றி பேச தயக்கம் காட்டுவது ஏன்..?
(எம்.எஸ்.சஹாப்தீன்)
நாங்கள் என்ன சொன்னாலும் மக்கள் கேட்பார்கள். தேர்தலில் வாக்களிப்பார்கள். தேர்தல் முடிந்ததும் மக்கள் எந்தக் கேள்வியும் கேட்கமாட்டார்கள். இப்படித்தான் முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம் வாக்காளர்களை எடை போட்டு வைத்துள்ளார்கள். முஸ்லிம் வாக்காளர்கள் சமூக அடிப்படையில் சிந்திப்பதில்லை. கட்சி அடிப்படையில் சிந்தித்து, அதிகமாக செலவு செய்யும் வேட்பாளர்களையே வெற்றி பெறச் செய்கினறார்கள். முஸ்லிம்களின் அரசியலை பலமிக்கதாக மாற்ற வேண்டுமாக இருந்தால் அரசியல் தலைவர்களின் அசமந்தப் போக்குகளையிட்டு மக்கள் கேள்விகளை கேட்க வேண்டும்.
முஸ்லிம்கள் தமது அரசியல் தலைமைகளிடம்; கேள்வி கேட்காத காரணத்தினால், ஊர்க்கு ஊர் மாறுபட்ட கருத்துக்களை முஸ்லிம் அரசியல்வாதிகள் சொல்லிக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாது தாம் சொல்லுவதுதான் அரசியல் தத்துவம் என்ற செறுக்கிலும் இருக்கின்றார்கள்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அதிகமான ஆசனங்களை வெற்றி கொள்வதற்கு மு.காவிற்கு எந்தவொரு ஆதாரமும் இருக்கவில்லை. பாரிய அபிவிருத்திகளைச் செய்துள்ளோம். கணிசமான தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுத்துள்ளோம். சமூகத்தின் பிரச்சினைகளுக்கு துணிச்சலுடன் குரல் எழுப்பியுள்ளோம். கட்சியின் தனித்துவத்தை பாதுகாத்து வந்துள்ளோம். தேர்தலுக்குப் பின்னர் மக்களிடம் நேரடியாக வந்து குறைகளை கேட்றிந்துள்ளோம் என்று எதனையும் முகாவினால் சொல்ல முடியாத சோக சூழுலில்தான் மு.கா கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டது.
முஸ்லிம்கள் தங்களின் மதத்தையும், அதனோடு இணைந்துள்ளவைகளுக்கும் உயிரை விடவும் கூடுதல் அந்தஸ்து வழங்குவார்கள். இதனை மிகச் சரியாக மு.கா கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பயன்படுத்திக் கொண்டது.
தம்புள்ள பள்ளிவாசல் முதல் நாட்டின் பல இடங்களிலும் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டதோடு, முஸ்லிம்களும் அச்சுறுத்தப்பட்டார்கள். மு.காவினர் இந்த சம்பவங்களை தூக்கிப் பிடித்து அரசாங்கத்திற்கு எதிராகவும், பௌத்த அமைப்புக்களுக்கு எதிராகவும் பலத்த பிரச்சாரங்களை மேற்கொண்டனர். ஒரு கட்டத்தில் காவியுடைப் பயங்கரவாதம் என்று கூறி அவஸ்தை பட்டதனையும் நாட்டு மக்கள் அறிவர்.
அத்தோடு, ரவூப் ஹக்கிம் தமது பக்கம் மக்களின் கவனத்தை திருப்பிக் கொள்வதற்காக தமது கட்சியில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரான கருத்துக்களையும் சொல்லிக் கொண்டிருந்தார். அதாவது, கட்சிக்குள் தான் ஒரு பணயக் கைதி போன்று இருப்பதாகவும் தெரிவித்துக் கொண்டார்.
மேற்படி நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கான ஒரு தேர்தலாக கிழக்கு மாகாண சபைத் தேர்தல் அமைந்துள்ளதென்று சூடு கிளப்பினார் ரவூப் ஹக்கிம். மு.காவிற்கு தேர்தலில் எதிh பார்த்த வெற்றி கிடைத்த போதிலும், மக்களின் எதிர் பார்ப்புக்களுக்கு மாற்றமாக பாராளுமன்ற உறுப்பினர்களின் விருப்பத்திற்கு அமைவாக முடிவுகள் எடுக்கப்பட்டதாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. ஆனால், இறுதியில் எல்லாமே நாடகமாகவே இருந்தன.
தற்போது மு.காவின் பார்வை வடமாகாணத்தின் பக்கம் திரும்பியுள்ளது. இதனால், அங்குள்ள தமிழர்களையும், முஸ்லிம்களையும் திருப்திப்படுத்துவதற்காக நாங்கள் அரசியலில் சூழ் நிலைக் கைதியாக இருப்பதாக யாழ்ப்பாணத்தில் ரவூப் ஹக்கிம் கூறியுள்ளார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது கட்சிக்குள் பணயக் கைதியாக இருப்பதாக தெரிவித்துக் கொண்ட ரவூப் ஹக்கிம் அதிலிருந்து விடுதலையாகி உள்ளாரா என்று தெரியவில்லை. ஆனால், கட்சிக்குள் தலைமைத்துவக் கட்டுப்பாடு இல்லாதுள்ளது. அதனால், அவர் இன்றும் கட்சிக்குள் பணயக் கைதியாகவே இருக்கின்றார் என்பதுதான் எமது அபிப்ராயமாகும்.
கட்சிக்குள் பணயக் கைதியாக இருந்து கொண்டு நாங்கள் அரசியலில் சூழ்நிலைக் கைதியாக இருந்து கொண்டிருக்கின்றோம். நாங்கள் தனித்துவமாக முடிவுகளை எடுக்கும் காலம் விரைவில் வருமென்றும் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.
மு.கா தனித்துவக் கட்சி என்று பறைசாற்றிக் கொண்டாலும், அக்கட்சி ரவூப் ஹக்கிமின் தலைமைத்துவத்தின் கீழ் அதன் தனித்துவத்தை இழந்து கொண்டு வருகின்றது என்பதுதான் பலரினதும் கருத்தாகும்.
ஒரு கட்சி தனக்குரிய தனித்துவத்தை இழப்பதற்கு காரணமாக அமைவது கட்சியில் உள்ளவர்களின் சுயநலப் போக்குகளினாலாகும். மு.காவில் கொள்கைபற்றாளர்களை விடவும் பதவி மீது பற்றுக் கொண்டவர்கள் அதிகரித்துக் கொண்டு வருகின்றார்கள். இதன் காரணமாகவே அக்கட்சி தமது தனித்துவத்தை இழந்து கொண்டு வருகின்றது. இதனால், முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு முன்னின்று உழைப்பதற்கு அக்கட்சியால் முடியாதுள்ளது.
இதே வேளை, மு.கா அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டுமென்று உயர்பீட உறுப்பினர்களில் ஒரு பகுதயினர் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இதனை சகித்துக் கொள்ள இயலாத கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் ஏ.எம்.தவம் 'முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிரானவர்களும், இழிவான அரசியல் எண்ணத்தைக் கொண்டவர்களுமே அரசாங்கத்திலிருந்து மு.கா. வெளியேற வேண்டும் எனக் கூறுகின்றார்கள்' எனத் தெரிவித்துள்ளார். இதனால் கொதிப்படைந்த மு.காவின் முதன்மைப் போராளுpகளுள் ஒருவரும், உயர்பீட உறுப்பினரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான கே.எம்.அப்துல் றஸ்ஸாக் (ஜவாத்) சூடான அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். இதனைத் அடுத்து தவமும் சூடாக ஒரு அறிக்கையை ஜவாத்திற்கு எதிராக வெளியிட்டார்.
மு.கா அரசாங்கத்தோடு இருக்க வேண்டும் என்பதற்காக தவம் முன் வைத்துள்ள காரணங்கள் அறிவு பூர்மாக அமைந்திருக்கவில்லை. அதாவது, மு.கா. அரசாங்கத்தோடு இணைந்து இருந்தால் ஜனாதிபதியைச் சந்திக்க முடியும், அமைச்சரவையில் பேச முடியும், கட்சித் தலைவர்களைச் சந்திக்க முடியும், பொதுபலசேனாவுக்கு எதிரான சட்டத்தினை உருவாக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தோடு இருந்தால்தான் ஜனாதிபதியை சந்திக்கலாம் என்பது அரசியலில் பிழையான கருத்தாகும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் பல தடவைகள் ஜனாதிபதியைச் சந்தித்துள்ளார்கள். இவர்கள் அரசாங்கத்தில் இருக்கின்றார்களா என்று கேட்கின்றோம். மு.காவை விடவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புத்தான் ஜனாதிபதியை அதிகம் சந்தித்து பேசியுள்ளது.
மு.கா அரசாங்கத்தோடுள்ளது. கட்சியின் தலைவரும், தவிசாளரும் அமைச்சர்களாக உள்ளார்கள். இவர்கள் அமைச்சரவையில் முஸ்லிம் சமூகத்திற்காக பேசியவைகள் என்ன? முஸ்லிம்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கண்டுள்ளார்களா? ஆகக் குறைந்தது பள்ளிவாசல்களுக்கு எதிராக சட்டத்திற்கு முரணாக வீதியில் போராட்டங்களைச் செய்தவர்களை கைது செய்ய முடிந்துள்ளதா?
மேலும், பொது பல சேனவிற்கு எதிராக உருவாக்கிய சட்டம் என்ன? ஹலால் பிரச்சினை இன்னும் முடிவடையவில்லை. அதற்கு தீர்வு கிடைக்கும் வரை பொது பல சேனா ஓயப் போவதில்லை. ஹலால் தொடர்பில் நாம் முன்னெடுத்த செயற்றிட்டங்களை சில காரணங்களுக்காக தற்காலிகமாக நிதானமாக செயற்படுகிறோம் என்று பொது பல சேனவின்; நிறைவேற்று அதிகாரியான டிலந்த விதானகே தெரிவித்துள்ளார். இத்தகைய பொது பல சேனவிற்கு அரசாங்கம்தான் பக்கபலமாக இருப்பதாக எதிர்க் கட்சியினர் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அரசாங்கத்தில் உள்ள, அமைச்சரவையில் இரண்டு அமைச்சர்களை வைத்துள்ள மு.காவினால் பொது பல சேனவினை கட்டுப்படுத்த முடிந்துள்ளதா? இவற்றிக்கு மு.காவினால் பகிரங்கமாக கருத்துக்களை முன் வைக்க முடியுமா என்று கேட்கின்றோம்.
இதேவேளை, சம்மாந்துறையில் நடைபெற்ற அம்பாரை மாவட்ட வணிகத்துறை பட்டதாரிகள் சங்கத்தின் கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் உரையாற்றும் போது, இன்று சிலர் கேட்கின்றார்கள், பொதுபலசேனாவின் அட்டகாசத்தை நிறுத்த முஸ்லிம் காங்கிரஸ் என்ன செய்திருக்கிறதென்று முஸ்லிம் காங்கிரஸ் பொது பல சேனாவின் மூக்கணாம் கயிற்றை இழுத்துக்கட்டி வைத்திருக்கிறது என்று அவர்களுக்கு நான் பதில் கூறுகின்றேன். பொது பல சேனாவை பின்னின்று இயக்கியவர்கள் இன்று கண் பிதுங்கிப்போய் இருக்கின்றார்கள், அரபு நாடுகளின் ஆத்திரத்தில் அதிர்ந்து போய்க்கிடக்கின்றனர். முஸ்லிம் காங்கிரஸ் மூடிக் கொண்டிருந்தால் இந்த முழு அழுத்தமும் எப்படி வந்திருக்க முடியும்? என்றும் நான் கேட்கவிரும்புகின்றேன். எல்லாவற்றையும் ஊடகங்களில் திறந்து கொட்டுவதுதான் அரசியல் என்றால், அந்த அரசியலை முஸ்லிம் காங்கிரஸ் ஒரு போதும் செய்யாது எனத் தெரிவித்துள்ளார்.
அரபு நாடுகள் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினையில் தமது கவனத்தை செலுத்தியமைக்கு மு.காதான் காரணமென்று கூறுவது அறியாத மக்களிடம் செல்லுபடியாகலாம். ஆனால், முஸ்லிம் கவுன்ஸில், உலமா சபை, ஜெனிவாவில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கும் புலம் பெயர்ந்தோர் முஸ்லிம் அமைப்பு போன்றவற்றின் நடவடிக்கைகளினால் கிடைத்த பலனை மு.கா உரிமை கொண்டாடுவது ஊரார் வீட்டுக் கோழியை உம்மா பேரில் ஹத்தம் கொடுப்பதனைப் போன்றதாகும். பொது பல சேனவின் நடவடிக்கைகளைப் பற்றி முறையீடு செய்வதற்கு மு.கா எந்த அரபு நாட்டின் இலங்கைக்கான தூதுவரை நேரடியாகச் சென்று சந்தித்துள்ளதென்று பட்டியல் படுத்த முடியுமா என்று கேட்கின்றோம். பேசாது மௌனமாக இருந்து விட்டு மு.காவினை ஒரு சமூகப் பொறுப்புள்ள கட்சியாக மக்கள் மத்தியில்; காட்டுவதற்கு தவம விளைவது அவரின் தலைமைத்துவ விசுவாசத்தைக் காட்டுகின்றது. அமைச்சர் அதாவுல்லாவுடன் இருக்கும் போது அதாவுல்லாவின் அனைத்து நடவடிக்கைகளிலும் தர்மம் இருப்பதாக நிறுவினார். இன்று அதாவுல்லாவை கடுமையாக விமர்சனம் செய்கின்றார். தலைமைத்துவ விசுவாசத்தினை காட்டுவதற்காக மக்களை பிழையாக வழி நடத்தக் கூடாது. கடந்த காலத்தில் அமைச்சர் அதாவுல்லாவுடன் இணைந்து அக்கரைப்பற்றில் நோன்பு திறப்பதற்குச் சென்ற மு.காவினருக்கு தடைகளை ஏற்படுத்தி அக்கரைப்பற்று மக்களில் ஒரு குழுவினரை பிழையாக வழி நடத்திய பெருமை தவத்திற்கும் உண்டு.
இந்த அரசாங்கத்தில் தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது. மு.காவை அரசாங்கத் தரப்பினர் கவனத்தில் கொள்வதில்லை போன்ற காரணங்களினால் எதிர் வரும் 07ஆம் திகதி அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு எதிரானதொரு தீர்மானத்தை எடுக்க இருப்பதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் ரஜாப்தீன் தெரிவித்துள்ளார். இத்தகைய நிலையில்தான் மு.கா அரசாங்கத்தோடு ஒட்டிக் கொண்டிருக்கின்றது.
மு.காவினை பிளவுபடுத்துவதற்கு அரசாங்கத்தினர் முயற்சிகளை எடுத்துக் கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. இதற்கு மு.காவில் உள்ள சிலர் துணையாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்தகையவர்களை கண்காணிப்பதற்கு ரவூப் ஹக்கிம் சிலரை நியமித்துள்ளதாகவும் ஊர்ஜிதமற்ற தகவல்கள் கூறுகின்றன. அரசாங்கத்தில் அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற காரணத்திற்காக அரசாங்கத்தின் கூலிகளாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால், மு.காவின் அரசியல் பலத்தை பலவீனப்படுத்தி, கட்சியையும் உடைத்துவிடுவதற்கான செயற்பாடுகளில் அரசாங்கத்தில் உள்ள சிலர் முயற்சிகளை எடுத்துக் கொண்டு வருகி;ன்றார்கள். அந்த திட்டத்தின் பிரகாரம் மு.காவின் கோரிக்கைகளை கணக்கில் எடுக்காது இருத்தல், அபிவிருத்தி வேலைகளை மு.காவின் மூலம் மேற்கொள்வதனை தவிர்த்துக் கொள்ளல் போன்றவைகளை நடைமுறைப்படுத்திக் கொண்டு வருகின்றார்கள்.
இப்புறக்கணிப்புக்களையிட்டு மு.காவின் செயலாளர் கடுமையான தொனியில் அறிக்கைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றார். அதே வேளை. ரவூப் ஹக்கிம் இடையிடையே சூட்டை கிளப்பிக் கொண்டிருக்கையில், கட்சியின் ஆதரவாளர்கள் அரசாங்கத்தை விட்டுவிலக வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறு அரசாங்கத்தில் உள்ள மு.கா முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் என்று அக்கட்சியின் ஆதரவாளர்கள் எண்ணிக் கொண்டிருப்பார்களாயின் அவர்களின் அறியாமை என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. மு.காவினா முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கு தயக்கம் காட்டிக் கொண்டு, சமூகத்திற்காக நாங்கள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்று மக்களிடம் கருத்துக்களை விதைக்க முற்படுவார்களாயின் மு.காவினர் தங்களுக்கு தாங்களே குழிபறித்துக் கொள்கின்றார்கள்.

முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு ஒரு பலனும்செய்யாது அதை நம்பி இருப்பீர்களானால் அதை கண்டிப்பாக நீங்கள் மன்வேதனையுடனான ஒரு தோல்வியாகவே ஏற்றுக்கொள்ளும் நிலைமைக்கும் தள்ளப்படுவீர் ஆகவே இனிமேல் முஸ்லிம்காங்கிரஸை நம்பி ஏமாறவேண்டாம்? முஸ்லிம் காங்கிரஸ் இல் உள்ளவர்களின் பலரின் பேச்சைப்பாருங்கள் ஏதாவது பொருளுள்ளதுபோல தெரிகின்றதா? அல்லது திடகாத்திரமானதாக இருக்கின்றதா?
ReplyDeleteஅத்தின சோனக அமைச்சர்மாரும் பட்டம் பதவி சொகுசு இதுக்காகத்தான் அரசியலுக்கு வாறான். சமூகத்தில் உள்ள அக்கரைலோ அல்லது மக்களுக்கு சேவை செய்யோணும் என்பதற்காகவோ அரசியல் செய்வது இல்லை. இந்த மாதிரி துட்டுக்கு அலையற சோனகிரிதான் மகிந்தைக்கு வேனும், அத்தின பேரும் மகிந்த போடுற எலும்ப நக்கிட்டு அவன்ட காலையே சுத்திட்டு வராங்க. எங்கட சமூகத்திற்கும் இவங்கள விட்டா வேற தெரிவு கெடையாது அதனால அவங்களுக்குதான் வோட் பண்றாங்க.
ReplyDeleteதப்பி தவறி ஆசாத் சாலி மாதிரி யாராவது முஸ்லிம்களுக்காக பேசப்போன தூக்கி ஜெயில்ல போடுவான்.
அதனால நம்ம காக்கா மாரும் கிடைத்ததை நக்கிவிட்டு தங்களது விசுவாசத்தை காட்டுவதற்காக நன்றாக வாலை ஆட்டிக்கொண்டு வாக்களித்த மக்களை ஏமாற்றிக்கொண்டு காலத்தை ஒட்டுகின்றார்கள்.