சீனாவை சுற்றிவளைக்கும் முயற்சியில் ஜப்பான்
இந்தியாவுடன் கடற்படை ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம், சீனாவை சுற்றிவளைக்கும்
முயற்சியில் ஜப்பான் ஈடுபட்டு வருவதாக, சீனப்பத்திரிக்கையான குளோபல் டைம்ஸ்
தெரிவித்துள்ளது.
நான்கு நாட்கள் அரசுமுறை பயணமாக, பிரதமர் மன்மோகன் சிங்
ஜப்பான் சென்றுள்ளார். அங்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயுடன் இருதரப்பு உறவுகள்
குறித்த பேச்சுவார்த்தை நடத்திய மன்மோகன், அணுசக்தி ஒப்பந்தத்தை துரிதப்படுத்துவது,
இருநாட்டு கடற்படைகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது உள்ளிட்ட முக்கிய
ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். ஜப்பானின் இந்த நடவடிக்கைகளை சீனா
எரிச்சலுடன் பார்த்து வருகிறது. இதை சீனப்பத்திரிக்கைகளின் வாயிலாக அந்த நாடு
வெளிப்படுத்தியுள்ளது.
சீனாவின் பீஜிங் நகரிலிருந்து வெளிவரும் குளோபல்
டைம்ஸ் என்ற பத்திரிக்கை இன்று வெளியிட்டுள்ள தலையங்கத்தில், ஜப்பானின்
நடவடிக்கைகள் சீனாவை சுற்றி வளைக்கும் முயற்சி என கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும்
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சீனாவை சுற்றி வளைக்கும் ஜப்பானின் எண்ணம் ஒரு
மாயை. ஆசியாவில் சீனாவின் ஆதிக்கத்தை மீறி செயல்படும் அளவிற்கு ஜப்பானுக்கு வலிமை
கிடையாது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் வளர்ச்சி ஒரு மிகப்பெரிய அதிகார
வரைமுறையை கொண்டு வந்துள்ளது. சீனாவுடன் பிராந்திய ரீதியாக உறவு கொண்டுள்ள
ஜப்பானின் இந்த முயற்சி ஒரு வேதனையான விளைவுகளையே தரும். உண்மை நிலையை ஜப்பான் உணர
அதற்கு சிறிது காலம் தேவைப்படுகிறது. கிழக்காசிய நாடுகளில் சீனாவின் பொருளாதாரமும்,
அந்நாட்டின் கடல் வலிமையும் ஜப்பானை விட பெரியது. இதை ஜப்பான் ஒருநாள் புரிந்து
கொள்ளும். அந்த நாள் விரைவிலேயே வரலாம். அல்லது சிறிது நாட்கள் கழித்து வரலாம்.
ஜப்பானின் தற்போதைய நடவடிக்கைகள், தன்னை மகிழ்ச்சியான நாடு என்பதைப்போல்
காட்டிக்கொள்ள மட்டுமே. இதன் காரணமாக ஆசியாவின் வளர்ச்சி பாதிக்கப்படாது. இவ்வாறு
அந்த தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தியாவை சுற்றி
வளைக்கும் முயற்சியாக, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில்
காலூன்றியுள்ள சீனாவுக்கு, இந்தியா மற்றும் ஜப்பானின் ஒத்துழைப்பு எரிச்சலை
ஏற்படுத்தியுள்ளதையே இந்த தலையங்கம் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள்
கருதுகின்றனர். பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பான் சென்ற நான்கு நாட்களில் இரண்டாவது
முறையாக இது போன்ற தலையங்கத்தை குளோபல் டைம்ஸ் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment