'யாழ்ப்பாண முஸ்லிம் பிரதேசத்தை பாதுகாக்கின்ற மகத்தான பொறுப்பு' - அஷ்ஷெய்க் அஸ்மின்
யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் விஷேட பிரதிநிதிகள் கூட்டம் இன்று (25-05-2013) யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி வளாகத்தில் சம்மேளனத்தின் தலைவர் சகோ.நிலாம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தினை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய சம்மேளனத்தின் ஸ்த்தாபக செயலாளர் அஷ்-ஷெய்க் அஸ்மின் அய்யூப் (நளீமி) தனது உரையில்,
“ 2010ம் ஆண்டு யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் உருவாக்கப்பட்டபோது யாழ்ப்பாணம் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் சமூக விவகாரங்களில் பல்வேறு அமைப்புகள் இயக்கத்தில் இருந்தன, அவற்றை ஒருங்கிணைக்கும் அமைப்பாக சம்மேளனம் உருவாக்கப்பட்டது. இப்போது பல அமைப்புகள் பெயரளவில் இருக்கும் அமைப்புகளாகவே உள்ளன. அவை செயலிழந்துபோய்விட்டன, இது ஆரோக்கியமான நிலை அல்ல.
எல்லா அமைப்புகளும் இயங்குகின்ற அமைப்புகளாக இருக்க வேண்டும், சம்மேளனம் தனது பிரதான பணியாக எடுத்துக்கொண்ட “முஸ்லிம் மீள்குடியேற்றம்” என்னும் நிகழ்ச்சித்திட்டத்தில் போதிய அடைவுகளை அது எட்டவில்லை என்றுதான் கூறவேண்டும். சம்மேளனம் உருவாக்கப்பட்டபோது 2251 குடும்பங்களை நாம் மீளக்குடியேற்றத்திற்காக பதிவு செய்தோம். அதில் 650 குடும்பங்கள் மாத்திரமே இங்கே நிரந்தரமாக வசிக்கின்றார்கள், ஏனையவர்கள் இங்கே குடியேறவில்லை. அதற்கான காரணமாக வீடில்லாப் பிரச்சினையினையும் காணியில்லாப் பிரச்சினையினையும் நாம் அடையாளப்படுத்தினோம்.
இந்நிலையில் இந்திய வீட்டுத்திட்டத்திற்காக விண்ணப்பிக்கும்படி நாம் மக்களை அழைத்தோம் 337 விண்ணப்பங்கள் மாத்திரமே இந்திய வீட்டுத்திட்டத்திற்காக எம்மை வந்து சேர்ந்தன. இது எமக்கு ஒரு எச்சரிக்கையாக அமைகின்றது. மிகச் செற்பமானவர்களே மீள்குடியேற்றத்தில் நம்பிக்கை கொண்டுள்ளார்கள், அதிகமானவர்கள் மீள்குடியேற்றத்தில் நம்பிக்கையற்றிருக்கின்றார்கள் என்ற உண்மையை அது உணர்த்துகின்றது.
இந்நிலை தொடருமாக இருந்தால் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் பிரதேசத்தை பாதுகாக்கின்ற மகத்தான பொறுப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுவிடும். எமது பள்ளிவாயல்கள் அந்நிய மதஸ்தலங்களாக மாறுவதை எம்மால் தவிர்க்க முடியாது. அத்துடன் சம்மேளனம் தனது வேலைத்திட்டங்களை மீள்பரிசீலிக்க வேண்டும். தவறுகின்ற பட்சத்தில் நாம் மிக மோசமான விளைவுகளை எதிர்நோக்க வேண்டி வரும். மக்களிடம் மீளவும் குடியேறுவதற்காக இங்கே வாருங்கள் என நாம் அழைக்கின்றபோது. அவர்கள் மிகத்தெளிவாக ஒரு பதிலை முன்வைக்கின்றார்கள் “ எமது வீடுகள் யுத்தத்தால் அழிவுறவில்லை, அவற்றை புலிகள் இடித்து நாசம் செய்யவில்லை, அவற்றை கள்வர்களே உடைத்தார்கள், நாசம் செய்தார்கள், இன்றும் அவர்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கின்றார்கள், பதவிகளை தம்வசம் வைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். இவர்கள் இருக்கின்ற நிலையில் அவர்களது முகத்தில் முழித்துக்கொண்டு நாம் எப்படி மீண்டும் யாழ்ப்பாணத்தில் குடியேற முடியும் என்று அவர்கள் கேட்கின்றார்கள்” இதற்கு நாம் என்ன பதில் சொல்லப்போகின்றோம்..??
யாழ்ப்பாணத்தில் ஒரு பயங்கரமான சூழல் இருப்பதாக காட்டப்படுகின்றது, அசிட் அடிக்கின்றார்கள், வெட்டு, கொத்து, கொலை, கொள்ளை என பஞ்சமா பாதகங்கள் நடக்கின்றதே இந்நிலையில் சமூகத்தலைவர்கள் என்ன கை கட்டிப்பார்த்துக்கொண்டிருக்கின்றார்களா என்றும் மக்கள் கேட்கின்றார்கள்.
இங்குதான் நாம் ஒரு தெளிவான செய்தியை சொல்லக் கடமைப் பட்டிருக்கின்றேன். எமது சமூகத்தை இஸ்லாமிய சிந்தனை ரீதியாக வழிகாட்டுவதில் நாம் தவறியிருக்கின்றோம். ஜாஹிலிய்யத் என்னும் நஜீஸ் எம்மை ஆழ முயற்சிக்கின்றது. அந்த ஜாஹிலிய்யத் போதை வஸ்துப்பாவனையாளர்களைக் கூட தலைமைத்துவத்தில் அமர்த்தியிருக்கிறது. அந்த ஜாஹிலிய்யத் எமக்குள் முரண்பாட்டை ஏற்படுத்துகின்றது. அந்த ஜாஹிலிய்யத் எமக்குள் பிரிவினையினையும் குரோதத்தையும் ஏற்படுத்துகின்றது.
எனவே அன்புள்ள சகோதரர்களே கண்ணியமானவர்களே அந்த ஜாஹிலிய்யத் என்னும் நஜீஸை நாம் சுத்தம் செய்ய வேண்டும், நாம் சுத்தம் செய்யத்தவறினால் எமது சந்ததிகள் பூர்விகம் இழ்ந்தவர்களாக ஆக்கப்படுவார்கள், எமது முஸ்லிம் பிரதேசம் இல்லாமல் அழிந்துவிடும். எனவே எமது மண்ணைக் காப்பதற்கு நாம் ஒன்றுபட்டு செயற்படுவோம். என்று தெரிவித்தார்
சம்மேளனத்தின் தலைவர் தெரிவு இடம்பெறுவதற்கு இருந்த வேளையில் சம்மேளனத்தின் நிர்வாகிகள் அனைவரும் தமது பொறுப்புகளில் இருந்து விலகிக்கொள்தல் என்று அறிவிக்கப்பட்டது. (மேற்படி தீர்மானம் எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தல் நிலைமைகளையும் அணுசரித்து மேற்கொள்ளப்பட்டது) அதற்கமைய அடுத்து வரும் முஹர்ரம் வரையிலான ஆறுமாத காலத்திற்கான நிர்வாகிகளாக பின்வருவோர் சபையினரால் தெரிவு செய்யப்பட்டனர்
சகோ. ஜமால் மொஹிதீன் (தலைவர்)
சகோ. சுவர்கஹான் (செயலாளர்)
சகோ.ஏ.எல்.சுப்ஹான் (பொருளாளர்)
சகோ. மீரா லெப்பை லாபிர் (உப செயலாளர்)
சகோ. முஹம்மது ஹஸ்ஸான் (உப தலைவர்)

Post a Comment