முஸ்லிம் விரோத நடவடிக்கைகளும், பௌத்தர்களின் சனத்தொகை வீழ்ச்சியும் (பாகம்-3)
(கலாநிதி எம். எஸ். அனீஸ்
சிரேஷ்ட விரிவுரையாளர் -அரசியல் விஞ்ஞானத்துறை
கொழும்பு பல்கலைக்கழகம்)
இலங்கையில் சிங்கள பௌத்த மக்களின் சனத்தொகையின் இயற்கை அதிகரிப்பில் பாரியளவு தாக்கத்தை ஏற்படுத்துவதில் பல்வேறு சமூக கலாச்சார காரணிகள் பங்களிப்பு செலுத்தியுள்ளதை நாம் காணலாம். விசேடமாக 1980 களின் பின்னர் இந்த தாக்கத்தில் மிகப்பெரிய மாற்றத்தை அவதானிக்க முடிகின்றது. திறந்த பொருளாதாரக் கொள்கை, பூகோளமயமாக்கம், உள்நாட்டில் இடம்பெற்ற தொடர்ச்சியான யுத்தம், நாகரீக மோகத்துடன் கூடிய மேற்கத்தைய கலாச்சாரம் மற்றும் தனிப்பட்ட குடும்ப, பொருளாதார காரணிகள் என்பன இதன் பின்னணியில் இருக்கின்றன.
மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனை என்பன இதில் பிரதான காரணிகளாக பார்க்கப்படலாம். மதுபான பாவனை இன்று இந்த நாட்டில் பரந்த அளவில் காணப்படுகின்றது. தேரவாத பௌத்த மதத்தை அதிகமாக பின்பற்றும் சிங்கள பௌத்தர்களைக் கொண்ட இலங்கையில் இவ்வாறு மதுபாவனை இருப்பதானது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். புத்தபெருமான் தனது சீடர்களை மதுபாவனையில் இருந்து தவிர்ந்து கொள்ளுமாறு பலமுறை கூறியுள்ளதை வரலாறுகள் மூலம் நாம் காணலாம். மதுபாவனையால் ஏற்படக்கூடிய 48 விதமான பாவச்செயல்களை அவர் தனது சீடர்களுக்கு உபதேசம் செய்துள்ளார். மதுபாவனைக்கு அடிமையாக இருந்த சர்வமித்ர மற்றும் கோசல அரசர்கள் போன்றோருக்கு அவர் கூறிய அறிவுரைகள் கும்ப ஜாதகத்தில் காணப்படுகின்றன. ஆனால் சிங்கள பௌத்த நாடாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள இலங்கையில் மதுபான மற்றும் போதைப்பொருள்களின் பாவனையின் அளவைப் பார்க்கும்போது கவலைப்படாமல் இருக்கமுடியாது. இன்று இலங்கையில் ஏறத்தாள 10,454 பதிவுசெய்யப்பட்ட பௌத்த விஹாரைகள் இருக்கின்றன. 45,000-50,000 வரையிலான பௌத்த துறவிகள் இருக்கின்றார்கள். இவர்கள் அத்தனை பேரும் புத்தபெருமானின் போதனைகளை நாள்தோறும் சலிக்காமல் போதித்து வருகின்றார்கள். ஆனால் இத்தனைக்கு மத்தியிலும் இவற்றை தடுக்க முடியவில்லை என்றால் அடிப்படையில் எங்கோ தவறு விடப்பட்டிருப்பதாகவே எண்ணத்தோன்றுகிறது.
புள்ளிவிபரங்களின் படி இன்று இந்நாட்டில் 4000 க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட மதுபான விற்பனை நிலையங்கள் உள்ளன. இதுதவிர சட்டவிரோதமாக மதுபானம் தயாரிக்கும் (கசிப்பு) மற்றும் விற்பனை செய்யும் பல நூற்றுக்கணக்கான இடங்களும் இருக்கின்றன. ஒட்டுமொத்தத்தில் முழுநாடுமே மதுபானசாலையாக மாறியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக, 2009 ஆம் ஆண்டு 41.1 மில்லியன் லீட்டர் விற்பனை செய்யப்பட்ட சாராயத்தின் அளவு 2010 ஆம் ஆண்டில் 49 மில்லியன் லீட்டராக அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. 2010 ஆம் ஆண்டை விட 2011 ஆம் ஆண்டில் 7-8 & மான அதிகரிப்பு மதுபான விற்பனையில் ஏற்பட்டுள்ளதை மேலும் புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இதனால் இந்நாட்டில் என்றுமில்லாதவாறு இன்று சமூக விரோத செயல்கள் உருவாகியுள்ளன. கொலைஇ கொள்ளைஇ கற்பழிப்பு, பாலியல் துஷ்பிரயோகம், குடும்ப பிரச்சினைகள் போன்ற பல்வேறு சமூக விரோத செயல்கள் இடம்பெறுகின்றன. தந்தை மகளை கற்பழிப்பது தொடக்கம் ஆசிரியர்கள் மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்வது வரை இந்நிகழ்வு இடம்பெறுகிறது. இந்த மதுபாவனையால் அதிகமான வீதி விபத்துகளும் இன்று இடம்பெறுகின்றன. குடிபோதையில் வாகனம் செலுத்துவோரால்தான் அதிக வீதிவிபத்துகள் இடம்பெறுவதாக போக்குவரத்துக்கு பொறுப்பான பொலிஸ் பிரிவு கூறுகின்றது. வீதி விபத்துகளினால் நான்கு மணி நேரத்திற்கு ஒருவர் வீதம் இந்த நாட்டில் உயிர்கள் காவுகொள்ளப்படுகின்றன. 100-110 விபத்துகள் நாளொன்றிற்கு பதிவாகின்றன. இதனால் நாளொன்றிற்கு 5 பேர் விகிதத்தில் வருடாந்தம் ஏறத்தாள 2000 பேர் வரை உயிர் இழக்கின்றனர்.
மறுபுறமாக அதிக மதுபாவனை காரணமாக பல்வேறு நோய்கள் உருவாகின்றன. ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியர் அனுலா விஜேசுந்தரவின் கருத்துப்படி, 'தமது பிரிவில் அனுமதிக்கப்படும் ஆண் நோயாளர்களில் அதிகமானவர்கள் மதுப்பழக்கத்துடன் தொடர்புபட்ட நோய்களினாலேயே இறப்பதாக கூறியுள்ளார். 1991 ஆம் ஆண்டு மதுபான பாவனையால் சம்பவிக்கும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 587 ஆக இருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை 1999 ஆம் ஆண்டின்போது 1319 ஆக அதிகரித்தது. மதுபாவனை என்பது இஸ்லாத்தில் கட்டாயமாக தடைசெய்யப்பட்ட (ஹறாம்) ஒன்றாகும். இதனால் பெரும்பாலான முஸ்லிம்கள் மதுபாவனையில் இருந்து தம்மை விலக்கி வாழ்கின்றனர். இதன்காரணமாக மதுபாவனையால் ஏற்படும் சகல பிரச்சினைகளில் இருந்தும் இந்த முஸ்லிம்கள் பாதுகாக்கப்படுகின்றனர்.
மதுபாவனை போன்றே போதைப்பொருள் பாவனையும் இன்று இந்த நாட்டில் பன்மடங்கு அதிகரித்துள்ளது. பல்வேறு சமூகவிரோத செயல்களுக்கு அடிப்படையாக அமையும் இந்த போதைப்பொருள் பாவனையானது இளைஞர் சமூகத்தையே சீரழிக்கும் ஒன்றாக காணப்படுகின்றது. இதனால் ஏற்படும் பிரச்சினைகள் எண்ணிலடங்காதவை என்றுகூட சொல்லலாம். ஹெரோயின், அபின், கஞ்சா போன்ற அத்தனைவிதமான போதைப்பொருட்களும் நமது நாட்டில் புழக்கத்திலும் பாவனையிலும் உள்ளன. இவைமாத்திரமன்றிஇ சிலவகையான மருந்துப்பொருட்களை கூட போதையின் நிமித்தம் இன்று நாட்டில் இளைஞர்கள் உட்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த இந்த மருந்துகளை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. பாடசாலை மாணவர்கள் தொடக்கம் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள் வரை இன்று போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது. பல குடும்பங்கள் இதனால் சீரழிந்துள்ளன. நாட்டில் பெரும்பாலான சமூகவிரோத செயல்களுக்கு இது அடிப்படையாக அமைந்துள்ளது. மதுபாவனை மற்றும் போதைப்பொருள் பாவனைகளால் ஒட்டுமொத்த சமூகமும் ஒரு நோய்வாய்ப்பட்ட சமூகமாக மாறியுள்ளது.
2008 ஆம் ஆண்டில் ஏறத்தாள 40,000 பேர் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் யுத்தம் முடிவடைந்த பின்னர் இதன் அளவு பல மடங்கு அதிகரித்திருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது. 1975-1979 வரையிலான காலப்பகுதியில் சராசரியாக ஒரு வருடத்திற்கு 4,000 பேர் மட்டுமே போதைப்பொருள் பாவனைக்காக கைதுசெய்யப்பட்டனர். 2010 ஆம் ஆண்டில் 29,796 பேர் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டிருந்தனர். இது முன்னைய ஆண்டை விட 59 & மான அதிகரிப்பை காட்டியது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 99 & மானவர்கள் ஆண்களாவர். ஏறத்தாள 66 & மானோர் 30 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களாவர். மேலும் 12 & மானோர் தமது 20 வயதுகளில் இருந்தனர். இந்த புள்ளிவிபரங்களின்படி, 37.5 & மான கைதுகள் கொழும்பு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. அளவுமீறிய பாதாள உலக கோஷ்டிகளின் செயற்பாடுகள்இ அதிகமான உல்லாசப்பயணிகளின் நடமாட்டம்இ சேரிப்புற வாழ்க்கை போன்ற பல்வேறு காரணிகள் இந்த அதிகரிப்புக்கு ஏதுவான காரணிகளாக அமையலாம். 2010 ஆம் ஆண்டில் மட்டும் ஏறத்தாள 142 கிலோகிராம் எடையுள்ள ஹெரோயின் கைப்பற்றப்பட்டிருந்தது. இந்த அளவானது 2009 ஆம் ஆண்டை விட 76 & அதிகமாகும். 1980 ஆம் ஆண்டில் 580 பேர் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை செய்த குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் இத்தொகை 2003 ஆம் ஆண்டில் 10,390 ஆக அதிகரித்தது. இந்தவகையான போதைபொருள் பாவனையினால் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பவர்கள் சிங்கள இளைஞர்களேயாவர். இன்று பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இச்சீர்கேட்டினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. கொழும்பு போன்ற இடங்களில் முஸ்லிம் இளைஞர்களும் இவ்வாறான பழக்கங்களுக்கு அடிமையாகியுள்ள போதிலும் அது ஒப்பீட்டு ரீதியாகப் பார்க்குமிடத்து மிகவும் குறைவானதாகும். மத, சமூக மற்றும் கலாச்சார காரணிகளினால் அவர்கள் அதிகளவில் இவற்றிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.
சிங்கள மக்களின் வருடாந்த இறப்பு வீதத்தில் மற்றுமொரு முக்கிய வகிபாகத்தை பெற்றிருக்கின்ற காரணிதான் தற்கொலைகளாகும். வருடாவருடம் பல நூற்றுக்கணக்கானோர் தற்கொலை செய்துகொள்கின்றனர். பரீட்சைப் பெறுபேறுகள், காதலில் தோல்வி, அதிக கடன்சுமை, குடும்பப் பிரச்சினை, வியாபாரத்தில் நஷ்டமடைதல், தீராத நோய், எதிர்பார்த்த உத்தியோகம் கிடைக்காமை, போதைப்பொருள் பாவனை, மற்றும் வறுமை என்று பல்வேறு காரணங்கள் இந்த தற்கொலை முடிவுகளுக்குப் பின்னணியாக இருக்கின்றன. சிலசமயங்களில் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை சார்பான அணி தோல்வியடையும் சந்தர்ப்பங்களில் தற்கொலை செய்யும் நபர்களும் இருக்கவே செய்கின்றார்கள். சிலவேளைகளில் இது நகைப்பிற்கிடமாக இருந்தாலும்கூட இதுதான் யதார்த்தமாகும். உலகின் மிகப்பெரிய நான்கு மதங்களையும் பின்பற்றும் மக்களைக்கொண்ட இந்த நாட்டில் தற்கொலை வீதம் இவ்வாறு அதிகரித்திருப்பதனைக் காண்பதானது ஆச்சரியமாகவே உள்ளது.
தற்கொலை செய்துகொள்ளும் நபர்களின் எண்ணிக்கையினை விகிதத்தின் அடிப்படையில் பார்க்கும்போது இலங்கை உலக நாடுகளின் பட்டியலில் 11 ஆவது இடத்தில் இருக்கின்றது. 10 வது இடத்தில் ஜப்பான் காணப்படுகிறது. ஏறத்தாள 4,000 பேர் வருடமொன்றிற்கு இலங்கையில் தற்கொலை செய்கின்றனர். நாளொன்றிற்கு சராசரியாக 11 பேர் தற்கொலை செய்கின்றனர். இவர்களில் அதிகமானவர்கள் 15-44 வயதுகளுக்கு இடைப்பட்ட பிரிவினராவர்- அதாவது சனத்தொகைப் பெருக்கத்திற்கு அதிக பங்களிப்பு செய்யக்கூடிய வயதுப் பிரிவினராவர். ஏற்கனவே குறிப்பிட்ட மதுபாவனை, போதைப்பொருள்பாவனை போன்றே தற்கொலை செய்துகொள்வதும் இஸ்லாத்தில் கட்டாயமாக தடைசெய்யப்பட்ட ஒரு விடயமாகும். இதனால் முஸ்லிம்கள் தற்கொலை செய்துகொள்வது மிக மிக அரிதாகும்.
இவைதவிர, சனத்தொகையில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கான மற்றோர் காரணியே இன்று அதிகளவில் நகர்ப்புற சிங்கள யுவதிகளிடையே பரவியுள்ள மேற்கத்தைய கலாச்சாரமும் அதன் மீதான மோகமும் ஆகும். இந்நிலைமையானது அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் தீர்மானத்திலும், எண்ணிக்கையிலும் பாரிய குறைவுத்தன்மையை ஏற்படுத்தியுள்ளது என்பது வெளிப்படை. இந்த நிலைமையின் கட்டுமீறிய தொடர்ச்சியான அதிகரிப்பு நிலையான சனத்தொகை மட்டத்தைத் தக்கவைப்பதற்கு பாரிய தடையாக உள்ளது.
இந்த அடிப்படையில் மேற்கூறிய அனைத்து அரசியல் பொருளாதார சமூக மற்றும் கலாச்சார காரணிகளினூடும் நோக்குகின்றவிடத்து சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் சனத்தொகை அதிகரிப்பு மற்றும் வீழ்ச்சி தொடர்பான எண்ணப்பாடுகளும் அதற்கான காரணங்களின் பின்புலங்களும் விளங்கிக்கொள்வதற்கு இயலுமானதாக உள்ளது. எனினும் இந்த யதார்த்தமான நிலைமைகளினைப் புரிந்துகொண்டு முன்னிறுத்தப்படாத செயற்பாடுகளே தற்போதைய நிலைமைக்கான தீர்வுகளாக முன்வைக்கப்படும் நிலைமையானது அர்த்தபுஷ்டியுடன்கூடிய முன்னேற்பாடுகளின் வலுவற்ற தன்மையினையே வெளிக்காட்டிநிற்கின்ற அதேசமயம், பிரச்சினையின் அடிப்படை யதார்த்தத்திற்கும் அதற்கான தீர்வை முன்னிறுத்திய செயற்திறனுடன்கூடிய செயற்பாடுகளிற்குமான பாரிய இடைவெளியினை மிகத்தெளிவாகப் பிரதிபலித்து நிற்கின்றது. இதற்கான மிகப் பொருத்தமான அண்மைய உதாரணத்தை இங்கு குறிப்பிடுவது சாலச்சிறந்தது. அதாவது சிங்கள பௌத்த மக்களின் சனத்தொகையை அதிகரிக்கும் நோக்குடன் ஒரு பௌத்த அமைப்பானது 5 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்பவர்களுக்கு ஒரு ஊக்குவிப்பு தொகையாக ரூபா. 25,000 தருவதாக அறிவித்து அதன் முதற்கட்டமாக தெரிவுசெய்யப்பட்ட 25 குடும்பங்களுக்கு அந்த தொகையை வழங்கியது. இந்நிகழ்வானது குறித்த அடிப்படைப் பிரச்சினையுடனும் அதன் பின்னணியிலுள்ள உண்மையான காரணிகளுடனும் எவ்விதத்திலும் பொருந்திப்போகாத அதேகணம் அசுர வேகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துச்செல்லும் வாழ்கைச்செலவுக்கு எவ்விதம் ஈடுகட்டிநிற்கும் தொகை என்பது அனைவராலும் தெளிவாக ஊகித்து விளங்கிக்கொள்ள முடியும். இவ் ஏற்பாடானது அடிப்படையில் குறித்த சனத்தொகை வீழ்ச்சிக்கான காரணங்களை தமக்குள்ளேயே வைத்துக்கொண்டு அதற்கான நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னிறுத்தாது தொடர்பற்ற மாற்று வழிகளைக் கையாளும் பக்குவமற்ற செயல்முறையினையே வெளிக்காட்டி நிற்கின்றது.
இந்த பின்புலங்களினின்று நோக்குகின்றவிடத்து எந்தவொரு வளமிக்க சமூகத்தின் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் மேலே விபரித்த அனைத்து காரணங்களின் நிமித்தம் பாதிக்கப்படுவதோ பலவீனப்படுத்தப்படுவதோ இன, மத, மொழி மற்றும் கலாச்சாரங்களைக் கடந்த நிலையில் என்றுமே அனுமதிக்கப்படமுடியாதவை. உண்மையான சமூக அக்கறை என்பது சமூகத்தில் புரையோடிப்போயுள்ள பிரச்சினைகளை சரியான முறையில் இனங்கண்டு அதற்கேற்ற உரிய தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதில் தங்கியுள்ளதே தவிர, மற்றவர்களை குறை கூறுவதிலோ, அதற்கு எதிராக செயல்படுவதிலோ தங்கியில்லை. பிரச்சினையின் பாரதூரமான நிலைமை அதிவேகமாகப் பயணிக்கின்ற இச்சமயம் அதற்கான தீர்வை நோக்கிய செயற்பாடுகள் அதன் வேகத்தையோ அது ஏற்படுத்தும் அழிவினையோ கட்டுப்படுத்தி முடிவிற்குக் கொண்டுவரும் நடவடிக்கையாக அமையாது முற்றிலும் மாற்றமான முறையினதாகவே உள்ளது. காலத்தின் தேவைக்கு அப்பாற்பட்ட தீர்மானங்களை முன்னெடுப்பதும் மார்தட்டிக்கொள்வதும் குறைந்துவரும் சனத்தொகையை அதிகரிப்பதற்கு எவ்விதத்திலும் துணைபோகாது. மாறாக இந்த வீழ்ச்சிக்கு ஏதுவாக அமையும் காரணிகளின் வீச்சிற்கு எவ்விதத்திலும் ஈடுகொடுக்க இயலாது பராமுகமாகப் பயணிக்க மட்டுமே இயன்றன. எனவே சரியான தீர்வுகள் தக்க தருணத்தில் முன்மொழியப்பட்டு செயற்படுத்தப்படுவதே பிரச்சினைகளிலிருந்து மீண்டெழுந்து நிலையான வளமிக்க சமூக எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப உதவும் என்பது தெளிவு. இது ஓர் சமூக அக்கறை மட்டுமன்றி, ஓர் தேசிய நலன் சார்ந்த கரிசனை என்பதும் இப்பால் நோக்கற்குரியது.

Post a Comment