Header Ads



14 வருடங்களுக்கு முன் புலிகள் வீழ்த்திய விமான சிதைவுகள் கண்டுபிடிப்பு


(Tm) 14 வருடங்களுக்கு முன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நம்பப்படும் 'லயன் எயார் - அன்டனோவ் 24' ரக உள்நாட்டு பயணிகள் விமானத்தின் நொருங்கிய பகுதிகளில் சில, இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டன. 

வடபகுதி கடற்பரப்பின் இரணைத்தீவுக்கு அண்மையில் கடலுக்கு அடியிலிருந்து இந்த விமானத்தின் சிதைவடைந்த பாகங்கள் சில மீட்கப்பட்டுள்ளன. 

விமானத்தின் என்ஜின், மோட்டர் மற்றும் விமானத்தின் பின்புறப் பகுதிகள் சில இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்படைக்குச் சொந்தமாக கப்பலொன்றின் உதவியுடன் இந்த விமானத்தின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

குறித்த விமானத்தின் பாகங்கள் கடலுக்கு அடியில் மிகவும் ஆழமான பிரதேசத்தில் இருப்பதால் அவற்றை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மேற்குறிப்பிட்ட சில பாகங்களை மாத்திரமே தற்போதைக்கு மீட்க முடிந்ததாகவும் கடற்படையினர் அறிவித்தனர். 

இன்று முற்பகல் 11.30 மணியளவில் குறித்த கடற்பிரதேசத்துக்குச் சென்ற பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொலிஸ் அத்தியட்சகர் அசங்க கரவிட்ட, பொலிஸ் ஊடக பேச்சாளர் புத்திக சிறிவர்தன உள்ளிட்ட பொலிஸ் மற்றும் முப்படையைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்டவர்கள் மேற்படி விமானத்தின் பாகங்களை மீட்டனர். 

 இந்த விமானத்தின் பாகங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றை கரைக்கு எடுத்துச்செல்வதற்கான நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, தொல்பொருள் அகழ்வாராய்ச்சி திணைக்கள அதிகாரிகள், நாரா நிறுவனத்தின் அதிகாரிகள், அரசாங்க பகுப்பாய்வு பிரிவு அதிகாரிகள், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய சிரேஷ்ட சட்டத்தரணிகள், அரசாங்க அளவைத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோரே மேற்படி விமானத்தில் பாகங்கள் விழுந்து கிடப்பதாகத் தெரிவிக்கப்படும் பகுதிக்கு சென்றனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட விமானத்தின் பாகங்கள் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட நீதவான் எம்.வை.மஹப்தீன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார். 

பலாலி விமான நிலையத்திலிருந்து கடந்த 1998ஆம் ஆண்டு செப்டெம்பர் 29ஆம் திகதி 48 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள் மற்றும் இரு உக்ரேனிய விமானிகளுடன் இரத்மலானைக்கு போகப் புறப்பட்ட இந்த விமானம், புறப்பட்டு 10 நிமிடங்களின் பின் ராடார் திரையிலிருந்து மறைந்துபோனது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏவுகணைத் தாக்குதலில் இந்த விமானம் வீழ்த்தப்பட்டதாக நம்பப்படுகின்றது. இருப்பினும், இதன் மர்மம் இன்னும் பூரணமாகத் துலங்காத நிலையில் மேற்படி விமானத்தின் பாகங்களை கடற்படையினர் கண்டுபிடித்துள்ளர்.

இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினருக்கு, மேற்படி விமானத்தின் பாகங்களை கரையொதுக்குமாறு நீதிமன்ற கட்டளை பிறப்பித்தது.

இதற்கமைய மேற்படி கடற்பகுதிக்கு நேற்று வெள்ளிக்கிழமை சென்ற அதிகாரிகள் அங்கு ஆய்வுகளில் ஈடுபட்ட நிலையில், இன்றைய தினம் மேற்படி விமானத்தின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.