Header Ads



பர்மாவின் கசாப்புக் கடைக்காரனுக்கு சமாதான விருது


(லதீப் பாரூக்)

மியன்மார் ஜனாதிபதி தேய்ன் சேனிற்கு சமாதான விருதொன்று வழங்கப்பட்டுள்ளமை கசாப்புக் கடைக்காரர்களுக்கும், இனச் சுத்திகரிப்பாளர்களுக்கும் மேற்குலகு செங்கம்பள வரவேற்பு வழங்குகிறது என்ற செய்தியையே உலகிற்கு வழங்குகின்றது.In Pursuit of Peace Award’ என்ற இவ்விருது, International Crisis Group (ICG)  அமைப்பினால், சமாதானத்தையும், பாதுகாப்பையும் மேம்படுத்துவதற்கு அரும்பாடுபட்டவர்களுக்கு வழங்கப்படும் விருதாகும்.

மனித உரிமைக் கண்காப்பு அமைப்பு (Human Rights Watch- WRH)  பர்மா அரசு மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்திருப்பதாக 153 பக்க அறிக்கையை வெளியிட்ட (ஏப்ரல் 22 ஆம் திகதி) அதே தினம்,  இவ்விருதும் வழங்கப்பட்டிருப்பதுதான் கவலைக்குரியது. WRH  அறிக்கையின் படி, மியன்மார் அரசாங்கத்தின் பாதுகாப்புப் படைகள், ரவுடித்தனமான வன்முறைகளில் பங்குபற்றி, மனித குலத்திற்கெதிரான குற்றங்களை இழைத்திருக்கிறார்கள்.   

கடந்த ஜூன் -  ஒக்டோபர் காலத்தில் ஆண்கள், பெண்கள், சிறார்கள் என்ற பேதமின்றி இடம்பெற்ற கொலைகள், சொத்தழிப்பு நடவடிக்கைகளில் அரசாங்கத் தரப்பின் பின்புலமும், சமூகத் தலைவர்கள், பௌத்த பிக்குகள், பொலிஸ், மற்றும் இராணுவ அதிகாரிகளின் பங்கிருப்பருப்பதை இவ்வறிக்கை உறுதிப்படுத்துகின்றது. 

கணிப்பீடுகளின் படி 800,000 குடியுரிமை இல்லாத ரோஹிங்யர்கள் மியன்மாரில் வாழ்கின்றார்கள். இவர்கள் பங்களாதேசத்தில் இருந்து சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் என, இவர்களது நடமாட்ட மற்றும் தொழில் சுதந்திரத்தையும் அரசு மட்டுப்படுத்தியுள்ளது. நாட்டில் நிலவும் மனித அவலத்திற்கும், 125,000 இற்கும் மேற்பட்ட ரோஹிங்யா முஸ்லிம்களையும், ஏனைய முஸ்லிம்களையும் வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்வதற்கும் அரசாங்கமும், உள்ளுர் அதிகார சபைகளும் வகித்திருக்கின்ற பங்கை அறிக்கை மேலும் விபரிக்கின்றது. 

ஜூனில் இடம்பெற்ற இன மோதல்களில், அரச அதிகாரிகள் பள்ளிவாயல்களை அழித்ததோடு, பாரியளவிலான கைதுகளும் இடம்பெற்றன. ஒக்டோபர், 23 இல் பல மாதங்களாக இடம்பெற்ற கூட்டங்களுங்குக்கும் இனச் சுத்திகரிப்பைத் தூண்டும் விதத்திலான அறிக்கைகளுக்கும் பிறகு, காடையர்கள் ஒன்பது நகரங்களில் முஸ்லிம் சமூகத்தவர்கள் மீது தாக்குதல் நடாத்தினர்.    
             
ஒக்டோபர் 23 ஆம் திகதி , Mrauk-U  நகருக்கு அருகில் இருக்கின்ற Yan Thei  கிராமத்தில் ஒரு நாள் முழுதும் தொடர்ந்த படுகொலைகளில்  70 ரோஹிங்யா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். தாக்குதலுக்கான எச்சரிக்கை முன்னதாகவே விடுக்கப்பட்டிருந்த நிலையில், மிகக் குறைந்தளவிலான கலகத் தடுப்புப் பொலிஸாரும், உள்ளுர் பொலிஸாரும், இராணுவ சிப்பாய்களுமே கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். தம்மைத் தற்காத்துக் கொள்வதற்காக ரோஹிங்யர்கள் ஏந்திக் கொண்டிருந்த தடி முதலான சாதாரண கருவிகளையும் பறிக்கின்ற கடமையை மட்டுமே இப்பாதுகாப்புப் படையினர் செய்தனர்.              

இவ்விதம் கொலை செய்யப்பட்டவர்களில், 28 பேர் சிறுவர்கள். 'ஆரம்பத்தில் ஒன்றும் செய்ய வேண்டாம். நாம் உங்களைப் பாதுகாப்போம் என்று படையினர் கூறினார்கள். நாம் அவர்களை நம்பினோம். ஆனால் பிறகு அவர்கள் தமது வாக்கை மீறி விட்டார்கள்' என இப்படுகொலையில் இருந்து தப்பிய 25 வயதான ஒருவர் HRW இற்குத் தெரிவித்தார்.      

ஒக்டோபர் தாக்குதலுக்கு முன்னும், பின்னும் இதற்கான குறிப்பிடத்தக்க தயாரிப்புக்கள் இடம்பெற்றுள்ளன. பிக்குகளின் அமைப்பொன்றும், ரகைன் தேசியவாத அபிவிருத்திக் கட்சியும் ரோஹிங்யர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் மிகுந்த செல்வாக்கைக் கொண்டுள்ளன. மிக வெளிப்படையாக ரோஹிங்யர்களின் இருப்பை மறுத்து, நாட்டில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்கின்ற துண்டுப் பிரசுரங்களையும், பொது அறிக்கைகளையும் இவை வெளியிட்டன. அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், பிக்குகளும் கூட இதே போன்ற அறிக்கைகளை வெளியிட்டனர். நாட்டை விட்டு ரோஹிங்யர்களை வெளியேற்றுவதே இவ்வனைத்து நடவடிக்கைகளினதும் வெளிப்படையான நோக்கமாகும்.     
          
அரகான் மாகாணத்தில் நான்கு கூட்டுப் புதை குழிகள் இருந்ததற்கான ஆதாரங்களை ர்சுறு இன் அறிக்கை வெளியிடுகின்றது. இவற்றில் மூன்று ஜூன் வன்முறைகளைத் தொடர்ந்தும், மற்றையது ஒக்டோபர் வன்முறையைத் தொடர்ந்தும் உருவானதாகும். 

ஜூன் 13 ஆம் திகதி, அரச ட்ரக் ஒன்று, முழு நிர்வாணமாகவும், அரை நிர்வாணமாகவும் இருந்த பதினெட்டு உடல்களை ரோஹிங்யா இடம்பெயர் முகாமொன்றுக்கு அருகில் வீசி எறிந்தது. ரோஹிங்யர்கள் நிரந்தரமாக வெளியேற வேண்டும் என்ற செய்தியே இதன் மூலம் வழங்கப்பட்ட்டுள்ளது.      

'இங்குதான் உடல்களை வீசினார்கள். மூன்று உடல்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்தன. சில உடல்களில் எறிகாயங்களும், வேறு சிலவற்றில் வெட்டுக் காயங்களும் இருந்தன. நெற்றியில் ஒரு துப்பாக்கிச் சூடும், நெஞ்சுப் பகுதியில் ஒரு துப்பாக்கிச் சூடும் இருந்தன' என்கிறார் நேரில் கண்ட ஒரு ரோஹிங்யர்.       

பெரும்பாலான இடம்பெயர் முஸ்லிம்கள் வாழ்கின்ற இடநெருக்கடியான முகாம்களில் அடிப்படை வசதிகள் போதியளவில் காணப்படவில்லை. சில இடங்களில் பாதுகாப்புப் படை இவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கவே செய்கிறார்கள். எனினும், இங்கெல்லாம் சந்தைகளுக்குச் செல்லவோ, தொழிலுக்குச் செல்லவோ, நிவாரணங்களைப் பெறவோ இயலாமல் கைதிகள் போன்றே வாழ்கின்றார்கள். மே மாதத்தில் மழை காலம் ஆரம்பிக்க முன்னதாக, இவர்கள் உயர்ந்த நிலப்பகுதிகளுக்கு அனுப்பப்படா விட்டால், ஆயிரக் கணக்கான ரோஹிங்யர்கள் நீர் மூலம் பரவலடைகின்ற நோய்களுக்கு இலக்காவதற்குரிய வாய்ப்புக் காணப்படுகின்றது .
   
ஆயிரக்கணக்கான ரோஹிங்யா முஸ்லிம்கள் பங்களாதேஷ், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு சென்று விட்டனர். நூற்றுக் கணக்கானவர்கள் கடலிலேயே மாண்டனர். மேலும் ஆயிரக் கணக்கானவர்கள் இவ்விதம் நாடு துறந்து சென்று விடுவார்கள் என்றே தெரிகிறது.    

1982 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டமே ரோஹிங்ய முஸ்லிம்களுக்கெதிரான தாக்குதல்களுக்கான மிக முக்கிய அடிப்படை.  இது ரோஹிங்யர்களின் குடியுரிமையை மறுத்துரைக்கின்றது. நாட்டின் எட்டு 'அங்கீகரிக்கப்பட்ட இனம்களில்' ரோஹிங்யர்கள் இடம்பெறவில்லை.  முழுக் குடியுரிமை பெறுவதற்கு தமது முன்னோர்கள் 1948 சுதந்திரத்திற்கு முன்னதாக நாட்டில் குடியேறிவர்கள் என்பதற்கான 'முழுமையான ஆதாரங்களை' அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். ரோஹிங்யர்களைப் பொறுத்தவரை, இது சிரமமானது மட்டுமன்றி, பலநேரங்களில் சாத்தியமற்றதும் கூட.   
         
குடியுரிமை சட்டத்தில் பாகுபாட்டை ஏற்படுத்துகின்ற ஏற்பாட்டை அரசாங்கம் நீக்க வேண்டும் என ர்சுறு கோரியிருக்கின்றது. இதன் மூலம் ரோஹிங்ய சிறார்களின் குடியுரிமையை உறுதிபடுத்த வேண்டும் என்றும், இல்லாத பட்சத்தில் அவர்கள் நாடற்றவர்களாகி விடுவார்கள் எனவும் அது குறிப்பிடுகின்றது. 

மியன்மார் முஸ்லிம்களின் அவநிலையைப் பற்றி சார்லீ கேம்பல் பின்வருமாறு எழுதுகிறார்: 'வன்முறை ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கவில்லை. கடந்த ஆண்டில் ஏற்பட்ட வன்முறையில், கமான் எனப்படுகின்ற மற்றொரு இனத்தைச் சேர்ந்த முஸ்லிம்களும் இலக்கு வைக்கப்பட்டார்கள். கடந்த மாதம், ரங்கூனிற்கு ஐநூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள Meiktila நகரைக் கலக அலைகள் தாக்கின. நகைக் கடையொன்றில் சாதாரணமாக ஆரம்பித்த பிரச்சினை, பிராந்தியம் முழுதும் பரவி, 43 பேர் கொல்லப்பட்டதோடு, குறைந்த பட்சம் 800 வீடுகளும், ஐந்து பள்ளிவாயல்களும் தீக்கிறையாக்கப்பட்டன. பனிரெண்டாயிரம் பேர் மிக மோசமான நிலமை கொண்ட இடம்பெயர்வு முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்'.     
    
இது தவிர வேறு பதினொரு கிராமங்களுக்கும் வன்முறை பரவியது. ரோஹிங்யா இனத்தவர்கள் எவரும் இப்பிரதேசங்களில் வாழவில்லை. பீ.பீ.சீ வெளியிட்ட அதிர்ச்சி தருகின்ற வீடியோ ஒன்றில், காடையர்கள் முஸ்லிம்களுக்குச் சொந்தமான கட்டிடங்களை உடைத்து நொருக்கும் போது, பொலிஸார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். காவி உடை தரித்த புத்த பிக்குகளும் வன்முறைகளில் பங்கு கொள்கிறார்கள். 

969 என்ற அடையாளத்தால் அடையாளப்படுத்தப்படுகின்ற தீவிர பௌத்த அமைப்பொன்றே, இவ்வன்முறைகளின் பின்னணியில் இருக்கின்றது. Wirathu  என்ற புத்த பிக்குவே இவ்வமைப்பின் முக்கிய பாத்திரம். தற்போது பௌத்த வியாபாரங்களைக் குறிப்பதற்கு 969 இன் ஸ்டிகர்கள் நாடு முழுதும் பயன்படுத்தப்படுகின்றன. பர்மாவின் உள்நாட்டு மீடியா இந்நிலமையை மாற்றுவதற்கு உருப்படியான எந்நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. தென் ஆசிய மக்களின் கருப்பு நிறத் தோற்றதைக் குறிக்கும் 'கலர்' என்ற வார்த்தையும், 'பாங்காலிகள்' என்ற சொல்லும் அடிக்கடி அச்சு ஊடகங்களில் பிரசுரமாகி, ரோஹிங்யர்கள் சட்ட ரீதியற்ற வந்தேறு குடிகள் என்பதற்கு ஒருவித அங்கீகாரத்தை வழங்கும் நிலை உருவாக்கப்பட்டது. 

முன்னாள் அரசியல் கைதியும், நோபல் பரிசை வென்றவருமான ஆன் சாங் சூகி கூட, இத்தாக்குதல்களைக் கண்டிப்பதற்கு  மறுத்துள்ளதோடு, 'சட்டத்தின் ஆட்சி' குறைவாக இருக்கின்றது என்று மட்டும் கூறி நலுவுகின்றமை கவலையளிப்பதாகும். 2015 இல் தேர்தல் இடம்பெற உள்ள நிலையில், தனது வாக்கு வங்கியை இழப்பதற்கு அவர் விரும்பவில்லை என்றே தெரிகிறது. 

இப்படுகொலைளின் சிற்பியாகத் திகழ்கின்ற, நாட்டின் ஜனாதிபதி தேய்ன் சேன் என்ற கசாப்புக் கடைக்காரனுக்கு பல ஐரோப்பிய நாடுகள் சிவப்புக் கம்பள வரவேற்பு வழங்குகின்றன. நாட்டில் 'குறிப்பிடத்தக்க மாற்றங்களை' ஏற்படுத்தியமைக்காக பிரித்தானிய வெளிநாட்டுச் செயலாளர் மியன்மார் அதிபரைப் பாராட்டி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. தேய்ன் சேனுடைய ஐரோப்பிய விஜயத்தின் போது, மியன்மாரில் நிலவுகின்ற கவலைக்கிடமான மனித உரிமை மீறல்கள் குறித்துப் போதிய கவலைகளை ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் வெளிப்படுத்தவில்லையென HRW தெரிவிக்கின்றது.  

மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர் ஸ்தானிகர் அலுவலகம் ஒன்றை நிரந்தரமாக ஸ்தாபிப்பதற்காக பர்மா வழங்கியிருந்த வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை. பர்மாவில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் உள்ளடங்களாக, கடந்த காலத் துஷ்பிரயோகங்களை மேற்கொண்டவர்களை விசாரிக்கவோ, அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தவோ பர்மிய அரசாங்கம் தவறி விட்டது. ஆனால், இத்தனைக்கு மத்தியிலும் தேய்ன் சேன் தனது நாட்டை அமெரிக்க, ஐரோப்பியக் கம்பனிகளுக்குத் திறந்து கொடுத்து விட்டதால், அவர் இன்று நல்ல  பிள்ளையாகி விட்டார்.

1 comment:

  1. europian Union and usa and Isral given Contract for Kiling Muslim in burma. so it is hapaning well and well therefor they are apriciating and giving award to him. this is the truth

    ReplyDelete

Powered by Blogger.