ஸ்மார்ட் போன்களுக்கு மவுசு கூடுகிறது..!
உலகம் முழுவதும் புழக்கத்தில் இருக்கும் செல்போன்களில் பாதிக்கு மேல் ஸ்மார்ட்போன்கள் என்கிறது லேட்டஸ்ட் ஆய்வு.வீடியோ கேமரா, இ&மெயில், ஜிபிஎஸ் மற்றும் அவரவர் தேவைக்கு ஏற்ப ‘ஆப்’கள் (அப்ளிகேஷன்கள்) என விதவிதமான வசதிகளுடன் ஸ்மார்ட்போன்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், ஸ்மார்ட்போன் வரத்து தொடர்பான புள்ளிவிவரங்களை அமெரிக்காவின் மசாசூசட்ஸ் மாநிலம் பிரமிங்காம் நகரை தலைமையிடமாக கொண்ட சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி தொடங்கி ஏப்ரல் வரையிலான 4 மாதங்களில் உலகம் முழுவதும் 15.27 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாயின. இந்த ஆண்டின் அதே காலகட்டத்தில் அந்த எண்ணிக்கை 21.62 கோடி. இது 41.6 சதவீத வளர்ச்சி. உலகம் முழுவதும் புழக்கத்தில் இருக்கும் செல்போன்களில் பாதிக்கு மேல், அதாவது 51.6 சதவீதம் போன்கள் நவீன வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட்போன் வகையை சேர்ந்தவை. செல்போன் விற்பனையில் உலக அளவில் முதலிடத்தில் சாம்சங் இருக்கிறது. கடந்த 4 மாதங்களில் 11.50 கோடி செல்போன்களை அந்நிறுவனம் விற்றிருக்கிறது. இதில் 7.07 கோடி ஸ்மார்ட்போன் வகையை சேர்ந்தது என்கிறது அந்த ரிப்போர்ட்.
இதுபற்றி டேட்டா கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சீனியர் ஆய்வாளர் கெவின் ரெஸ்டிவோ கூறுகையில், ‘வெறுமனே போன் செய்யவும், மெசேஜ் அனுப்பவும் மட்டுமே செல்போனை பயன்படுத்திய காலம் கடந்துவிட்டது. இந்த கால இளைஞர்கள் மினி கம்ப்யூட்டரே பாக்கெட்டில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அந்த அளவுக்கு வசதிகள் இருக்கும் செல்போனை வாங்கவே ஆர்வம் காட்டுகிறார்கள்’ என்றார்.
என்விஷனரிங் என்ற மார்க்கெட் ஆய்வு நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவு இயக்குனர் ரிச்சர்ட் டோகர்டி கூறும்போது, ‘புதிது புதிதாக ஸ்மார்ட்போன்களை இளைஞர்கள் விரும்புகிறார்கள். அதற்கேற்ப நிறுவனங்களும் அதிகளவில் தயாரித்து வெளியிடுகின்றன. இதனால் மார்க்கெட்டில் அவற்றின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. பழைய மாடல் செல்போன்கள் அந்தளவு போணியாவதில்லை’ என்றார். குறைந்த விலைக்கே ஸ்மார்ட்போன்கள் தற்போது கிடைக்கின்றன. ஸ்மார்ட்போன் விற்பனை அதிகரித்திருப்பதற்கு விலை குறைவும் முக்கிய காரணம் என்கின்றனர் மார்க்கெட் ஆராய்ச்சியாளர்கள்.

Post a Comment