இளைஞர் பாராளுமன்ற தேர்தல் - காத்தான்குடியில் இருமுனைப் போட்டி
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நாடளாவிய ரீதியில் நடாத்தப்படும் ஸ்ரீலங்கா யூத் பாராளுமன்ற தேர்தலில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் இருமுனைப் போட்டி இடம்பெறவுள்ளதாக காத்தான்குடி பிரதேச இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.றம்சி தெரிவித்தார்.
எதிர்வரும் மே மாதம் 04ம் திகதி நடைபெறவுள்ள குறித்த இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கு காத்தான்குடியிலிருந்து காத்தான்குடி மஸ்ஜிதுல் குபா இளைஞர் கழக தலைவர் முகம்மட் மஸுத் சுஜாத் அஹமட், ஐமர்ஸ் கழகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவர் முகம்மட் முஸ்தபா முஹம்மட் றுஹைல் ஆகிய இருவரும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதாகவும் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 12.00மணியுடன் வேட்புமனுத்தாக்கள் செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவு பெற்றுள்ளதால் இதுவரையில் வேட்புமனுத் தாக்கல் செய்த குறித்த இருவருக்கும் இருமுனைப் போட்டி இடம்பெறவுள்ளதாக காத்தான்குடி பிரதேச இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.றம்சி மேலும் தெரிவித்தார்.
இதற்கான வேட்புமனுக்கள நேற்றும் இன்றும் காத்தான்குடி உதவிபிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில்,புதிய உதவிபிரதேச செயலாளர் ஏ.சீ.அஹமட் அப்கரி ஆகியோரிடம் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் எதிர்வரும் 4ம் திகதி நாடளாவிய ரீதியில் நடாத்தப்படவுள்ள இந்த இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் மொத்தமாக 412உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் அவற்றில் பிரதேச செயலகப் பிரிவுகள் ஊடாக 332பேர் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் ஏனைய ஆசனங்கள் ஆதிவாசிகள்,அங்கவீனர்கள்,மாவட்டங்கள் ரீதியாக பல்வேறு சேவைகளை ஆற்றியவர்களில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தலா ஒருவர்,செனட் சபை என பலருக்கும் வழங்கப்படவுள்ளதாக காத்தான்குடி பிரதேச இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரி எம்.றம்சி மேலும் தெரிவித்தார்.
எதிர்வரும் 04ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் ஸ்ரீலங்கா யூத் பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment