Header Ads



ஜெரூசலத்திலுள்ள புனிதத் தலங்களை பாதுகாக்க இணக்கம்




(Tn) ஜெரூசலத்திலுள்ள முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களின் புனித தலங்களை பாதுகாக்க கூட்டாக செயற்படுவதற்கு பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் மற்றும் ஜோர்தான் மன்னர் இரண்டாவது அப்துல்லாஹ்வுக்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது. இதன் மூலம் ஜெரூசலம் புனிதத் தலங்களை பாதுகாக்கும் ஜோர்தானின் வரலாற்று உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜோர்தான் விஜயம் மேற்கொண்டுள்ள மஹ்மூத் அப்பாஸ் அந்நாட்டு மன்னருடன் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார். இந்நிகழ்வில் பலஸ்தீன மத விவகார அமைச்சர் மஹ்மூத் அல் ஹமாஷ் மற்றும் ஜோர்தான் மதவிவகார அமைச்சரும் பங்கேற்றனர்.

ஜெரூசலத்திலுள்ள புனித அல் அக்சா பள்ளிவாசல் உட்பட அனைத்து முஸ்லிம், கிறிஸ்தவ புனிதத் தலங்களையும் பாதுகாப்பதில் கூட்டாக செயற்பட இரு தரப்பினரும் இணங்கியுள்ளனர் என பலஸ்தீன மத விவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

“வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த உடன்படிக்கையின் மூலம் ஜெரூசலத்திலுள்ள புனிதத் தலங்களை பாதுகாக்க மன்னரின் சட்ட ரீதியான உரிமையை அப்பாஸ் உறுதிசெய்துள்ளார்” என ஜோர்தான் மன்னர் மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. ஜெரூசலத்திலுள்ள அல்அக்சா பள்ளிவாசல் மக்கா, மதீனாவுக்கு பின்னர் முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத் தலமாகும். 

எனினும் இந்த பகுதி யூதர்களினதும் புனிதத் தலமாக கருதப்படுகிறது. ஹரோது மன்னரினது டெம்பில் மவுன்ட் கோயில் அமைந்திருந்ததாக யூதர்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த கோயில் கி.பி. 70 இல் ரோமானியர்களால் தகர்க்கப்ப ட்டதாக யூதர்கள் நம்புகின்றனர். இதனால் ஜெரூசலத்தில் முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்கும் இடையில் அடிக்கடி மோதல்கள் இடம்பெறுகின்றன.

“ஜெரூசலம் இன்று பாரிய சவாலை எதிர்கொண்டு வருகிறது. அங்குள்ள அரபு, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களின் அடையாளங்களை அழிக்கும் முயற்சிகள் இடம் பெற்றுவருகின்றன” என ஜோர்தான் மன்னர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெரூசலத்தில் அரபு மக்கள் பெரும் பான்மையாக வாழும் கிழக்கு பகுதியை இஸ்ரேல் 1967 மத்திய கிழக்கு யுத்தத்தின்போது ஜோர்தானிடம் இருந்து ஆக்கிரமித்து இஸ்ரேலின் ஒரு பகுதியாக இணைத்துக்கொண்டது. எனினும் இதனை சர்வதேச சமூகம் ஏற்கவில்லை. பலஸ்தீனம் கிழக்கு ஜெரூசலத்தை தனது எதிர்கால தலைநகராக நம்பிவருகிறது.

எனினும் 1994 ஆம் ஆண்டு ஜோர்தான், இஸ்ரேலுடன் செய்து கொண்ட அமைதி உடன்படிக்கையின்படி ஜெரூசலத்திலுள்ள முஸ்லிம் புனிதத்தலங்களை நிர்வகிக்கும் பொறுப்பு ஜோர்தான் மத விவகார அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது.


No comments

Powered by Blogger.