Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம் பிரதிநிதிகள் இந்திய பாராளுமன்ற குழுவினருடன் சந்திப்பு

இந்திய பாராளுமன்ற தூதுக்குழுவினர் – யாழ் சிவில் சமூகத்தலைவர்கள் சந்திப்பு, யாழ் முஸ்லிம் பிரதிநிதியும் பங்கேற்பு

இன்று 9-4-2013 அன்று யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகத்தில் நடைபெற்ற யாழ்ப்பாணம் சிவில் சமூகத்தலைவர்களுடனான சந்திப்பில் யாழ் முஸ்லிம்கள் சார்பாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் ஸ்தாபக செயலாளர் அஷ்-ஷெய்க் அஸ்மின் அய்யூப் அவர்கள் கலந்துகொண்டார். 

இச்சந்திப்பில் யாழ்ப்பாணத்தில் நிலவும் அதீத இராணுவ பிரசன்னம், மனித உரிமைமீறல்கள், ஊடக சுதந்திரம் இன்மை, காணமல் போனோர் குறித்த விடயங்கள் முதன்மையாக ஆராயப்பட்டன, இந்நிகழ்வில் கருத்துக்களை வெளியிட்ட யாழ்ப்பாணம் சிவில் சமூகத்தலைவர்கள் பொதுவாக சிறுபான்மை சமூகத்தவர்கள் இந்த அரசாங்கத்தினால் பரவலான அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றார்கள், தமிழ் மக்களைத்தாக்கிய அரசாங்கம் இப்போது முஸ்லிம்களையும் தாக்குகின்றது. என்ற கருத்தில் கருத்துக்களை முன்வைத்தனர். 

யாழ்ப்பாணம் சிவில் சமூகம் சார்பாக விடுக்கப்பட்ட முக்கிய வேண்டுகோளானது, இந்தியா இலங்கை அபிவிருத்திப்பணிகளில் கவனம் செலுத்துவதை விடவும், இனமுரண்பாட்டுக்கான நிரந்தரத்தீர்வு குறித்து கவனம் செலுத்த வேண்டும், எங்களுக்கு இந்திய உதவித்திட்டத்தின் கீழ் வீடுகள் தேவையில்லை, அவற்றை இன்றே எடுத்துச்செல்லுங்கள் எங்களை சுந்தந்திரமடைந்த தேசியமாக அடையாளம் செய்யுங்கள் என்ற தொனிப்பொருளில் கருத்துக்களை முன்வைத்தனர்.

முஸ்லிம்கள் சார்பாக, யாழ்ப்பாண முஸ்லிம்கள் தமிழ் சிறுபான்மை உரிமைப்போராளிகள் என தம்மை அடையாளம் செய்த புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட போது இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட போது இங்கிருக்கின்ற தமிழ் தலைவர்கள் அதனை கண்டித்தார்கள், ஆனால் செயல்ரீதியாக எதுவும் செய்ய முடியாது போயிற்று, இப்போது புலிகள் இல்லாத சூழல் இருக்கின்றது, இந்த சூழலில் வடக்கில் முஸ்லிம்கள் மீள்குடியேற்றத்துக்கு தமிழர்களின் ஒத்துழைப்பு அவசியம் தேவைப்படுகின்றது. இங்கே முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மனிதாபிமான ரீதியில் நோக்கப்படுதல் வேண்டும், மனிதர்களுக்கு நன்மையளிக்கும் காரியங்கள் மேற்கொள்வது உறுதி செய்யப்படவேண்டும், இந்தியாவின் அபிவிருத்தி திட்டங்களை நாம் வரவேற்கின்றோம், என்றும் தெரிவிக்கப்பட்டது, யாழ் முஸ்லிம்களின் நிலையை தெளிவுபடுத்தும் ஆவணமும் கையளிக்கப்பட்டது



No comments

Powered by Blogger.