மாத்தளையில் பாரிய மனிதப் புதைகுழி - அவசர விசாரணைக்கு கோரிக்கை
மாத்தளை மருத்துவமனைக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழியில் 150 பேரின் மண்டையோடுகள், எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை 1986 - 90 காலப்பகுதியில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளவர்களின் சடல எச்சங்களே என்று மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜேவிபி கிளர்ச்சியின் போது, கொல்லப்பட்டு புதைக்கப்பட்டவர்களின் சடலங்களே இவை என்று கருதப்படுகிறது.
இந்தநிலையில், 1987 தொடக்கம் 1990 வரையிலான காலப்பகுதியில் தமது கட்சியின் உறுப்பினர்கள் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஜேவிபி பொதுச்செயலர் ரில்வின் சில்வா கோரியுள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“ஐதேக அரசாங்கத்தின் கொலைக் குழுக்களால் இளைஞர்கள் கொல்லப்பட்டதற்கு எதிராக மகிந்த ராஜபக்ச பரப்புரை செய்திருந்தார். சூரியகந்தவில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழிக்கு பொறுப்பானவர்களைத் தண்டிக்க மக்கள் முன்னணி அரசாங்கம் அயராது பணியாற்றியது.
அந்தப் பகுதி ஐதேக அரசியல்வாதிகள் பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். அப்போது சிறிலங்கா இராணுவத்தின மாவட்ட இணைப்பதிகாரியாக இருந்த தற்போதைய பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்சவும் பதிலளிக்க வேண்டும்.
மாத்தளையில் அப்போது பணியாற்றிய அரசாங்க அதிபர், உதவி அரசாங்க அதிபர், கிராம அதிகாரிகள், மற்றும் தமது பிள்ளைகளை இழந்த பொதுமக்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.
சித்திரவதை செய்யப்பட்ட பின்னரே, கொல்லப்பட்டுள்ளனர் என்பதை சட்டமருத்துவ அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். சூரியகந்த புதைகுழி விசாரணை போன்று மாத்தளைப் புதைக்குழி குறித்தும் விசாரிக்க கோருகின்றோம்.
ஐதேக அரசுக்கு எதிராக, அப்போது ஒரு மனிதஉரிமைச் செயற்பாட்டாளர் என்ற வகையில் ஜெனிவாவில் உள்ள ஐ,நா மனிதஉரிமைகள் பேரவையில், காணாமற்போனவர்களின் படங்களை சமர்ப்பித்திருந்தார் மகிந்த ராஜபக்ச.
ஜேவிபி இது குறித்து அனைத்துலக விசாரணையைக் கோரப் போவதில்லை.இது ஒரு உள்நாட்டுப் பிரச்சினை. மாத்தளை மனிதப் புதைகுழிக்குப் பெர்றுப்பானவர்களைத் தண்டிப்பதற்கு எற்றவாறு சிறிலங்காவின் சட்டங்கள் கடுமையாகவே உள்ளன.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Post a Comment