இந்தோனேசியாவில் முஸ்லிம்களுக்கும், பௌத்தர்களுக்கும் மோதல் - 8 பேர் மரணம்
இந்தோனேசியாவில் முஸ்லிம் மற்றும் புத்த மத பிரிவினர்களுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் 8 பேர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர்.
மியான்மரிலிருந்து அகதிகளாக வந்த நூற்றுக்கும் மேற்பட்ட ரோஹிங்யா முஸ்லிம்கள், தடுத்து நிறுத்தப்பட்டு இந்தோனேசிய கடற்கரையோர முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அங்கு சென்ற புத்த மதத்தைச் சேர்ந்த மீனவர்கள், முஸ்லிம்களுடன் விவாதம் செய்துள்ளனர்.
அப்போது மியான்மரின் மெய்க்திலா பகுதியில் கடந்த மாதம் நடைபெற்ற கலவரம் பற்றி விவாதம் எழுந்துள்ளது. புத்த மதப் பிரிவினர் மசூதிகளை இடித்தது பற்றியும் முஸ்லிம்களின் கடைகளை எரித்தது பற்றியும் காரசாரமாக விவாதித்துள்ளனர்.
ஒருவரையொருவர் குற்றம் சாட்டிய நிலையில் விவாதம், கைகலப்பாக மாறியுள்ளது.
இதில் புத்த மதப் பிரிவைச் சேர்ந்த மீனவர் ஒருவர் ரோஹிங்யா முஸ்லிம்களில் ஒருவரை கத்தியால் குத்தி, தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். அவருடைய அலறல் சப்தத்தைக் கேட்ட அவருடைய நண்பர்கள் உதவி செய்ய விரைந்துள்ளனர்.
இதையடுத்து இரு பிரிவினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அருகிலிருந்த கற்கள், கட்டைகள், நாற்காலிகள் ஆகியவற்றைக் கொண்டு ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் புத்த மதப் பிரிவைச் சேர்ந்த 8 மீனவர்கள் உயிரிழந்தனர். 15 முஸ்லிம்கள் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இரு தரப்பிலும் பலரைப் பிடித்து விசாரணை செய்து வருகிறோம் என்றனர்.

Post a Comment