சிங்கள பௌத்தனாகிய நான் பள்ளிவாசல் அமைக்க இடமளிக்கமாட்டேன் - அரசாங்க எம்.பி.
(ஜப்னா முஸ்லிம் இணையத்திற்காக முஸப்பிர்)
பரகஸ்தொட்ட, ரத்தேகொட என்பது வரலாற்றுத்துவமிக்க சிங்கள பௌத்த கிராமமாகும். சிங்கள பௌத்தன் என்ற வகையில் இங்கு முஸ்லிம் பள்ளி ஒன்றை அமைக்க நான் இடமளிக்கப் போவதில்லை என பண்டாரகம ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளரும், பாரளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ஜானக பிரியந்த பண்டார தெரிவித்துள்ளார்.
பரகஸ்தொட்ட, ரத்தேகொட என்பது வரலாற்றுத்துவமிக்க சிங்கள பௌத்த கிராமமாகும். இங்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினராக நான் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சிங்கள பௌத்தன் என்ற வகையில் நான் இந்த இடத்தில் முஸ்லிம் பள்ளியொன்றை நிர்மானிப்பதற்கு இடமளிக்கப் போவதில்லை. பண்டாரகம ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதான அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஜானக பிரியந்த பண்டார கடந்த வெள்ளிக்கிழமை மில்லெனிய எனும் பிரதேசத்தில் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நாட்டில் பெயர் பெற்ற வர்த்தக நிறுவனத்திற்குச் சொந்தமான முஸ்லிம் நிறுவனம் ஒன்றினால் மில்லெனிய பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் புதிய தொழிற்சாலை வளவினுள் ஒரு கட்டிடம் முஸ்லிம் பள்ளியாக அமைக்கப்படுகின்றது. இதன் மூலம் இப்பிரதேசத்தில் முஸ்லிம் மக்களை குடியமர்ந்த திட்டமிடப்படுகின்றது. இந்நிலையானது இப்பிரதேச மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையினைத் தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இக்கருத்தினைத் தெரிவித்தார்.
இப்பிரதேசத்தில் வாழும் மக்கள் மத்தியில் இது தொடர்பில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையினை பிரதேச மக்கள் மில்லனிய பிரதேச இணைப்புக் குழுக் கூட்டத்திற்கு சமர்ப்பித்த வேளையில் இணைப்புக் குழுவின் தலைவர் என்ற வகையில் இரு தரப்பாரின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னர் அவர் இந்த விடயங்களைத் தெரிவித்தார்.
இந்த நாடு சிங்கள பௌத்தர்களின் ஒரே நாடாகும். இதனை ஆங்கிலேயர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். உடரட்ட ஒப்பந்தத்தில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பௌத்த சாசனத்தைப் பாதுகாப்போம், வளர்ப்போம் என ஆங்கிலேயர்கள் ஒத்துக் கொண்டார்கள். அவர்கள் இவ்வாறு ஒத்துக் கொண்டிருப்பது இலங்கைக்கு மாத்திரமேயாகும். 1815க் பிறகு சகல ஆவணங்களிலும் பௌத்தர்களின் உரிமைகளை ஆங்கிலேயர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
அன்று தொடக்கம் இன்று வரை இந்த நாட்டின் எல்லா அரசியலமைப்புச் சட்டங்களிலும் அந்த உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கையில் எந்த இடத்திலும் பௌத்த விகாரைகள் அமைப்பதற்கு எந்தவித தடங்களும் இல்லை. ஆனால் மாற்று மதத்தவர்களின் சமய ஸ்தளங்களை அமைப்பதாயின் அதற்காக பிரதேச செயலாளர் ஊடாக பௌத்த சாசன ஆணையாளரின் உரிய அனுமதியினைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அப்படியிருந்தால் மாத்திரமே பள்ளியோ, கோவிலோ மற்றும் சமய மடுவ்களையோ அமைக்க முடியும். அப்படி இல்லாமல் ஏதும் செய்ய முயன்றால் அதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.
இங்கு தெளிவான பிரச்சினை ஒன்றுள்ளது. இந்தக் காணி முஸ்லிம் வர்த்தகருக்குரியது. தற்போதைக்கு அத்துடன் அது நின்று கொள்ளும். பின்னர் அவர்களின் சமய விடயங்களை நிறைவேற்றிக் கொள்ள கட்டிடத்தில் ஒரு சிறிய இடத்தினை ஒதுக்கிக்கொள்ள அனுமதியுங்கள் என வேண்டுகோள் விடுப்பார்கள். அதன் பின்னர் முஸ்லிம் ஊழியர்கள் 50 பேர் வரை இருப்பின் அவர்கள் வெள்ளிக்கிழமை வெளியில் சென்று வர சிரமம் எனவே அதற்கு இடம் தாருங்கள் என வேண்டுவார்கள். முஸ்லிம் அடிப்படைவாதம் நடைமுறைப்படுத்தப்படுவது இவ்வாறேயாகும்.
முதலில் அமைப்பது தொழிற்சாலையாகும். பின்னர் உரிமையாளருக்கு சமய நடவடிக்கையினை மேற்கொள்ள எனவும், பின்னர் ஊழியர்களுக்கு எனவும் விரிவடைந்து அது பெரிய பள்ளியாகும். இதற்கு நாம் இடமளிக்கப் போவதில்லை. இங்கு தொழிற்சாலை அமைப்பதானால் இதில் ஒருபோதும் எக்காரணம் கொண்டும் பள்ளி அமைக்க மாட்டோம் என நீதிமன்றத்தில் எழுத்து மூலமான உறுதி ஒன்றை வழங்கிவிட்டு வேலையைத் தொடருங்கள்.
இது தொடர்பாக மில்லனிய உதவி பிரதேச செயலாளர் கருத்து தெரிவிக்கையில்,
குறித்த கட்டடிடத்தின் வரைபடத்தில் இங்கு கூறப்படும் கட்டிடத்திற்கு Multi Purpose Hall என குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனத்திற்கு வரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் தங்குமிட வசதி, கூட்டங்கள் நடாத்துவது மற்றும் செயலமர்வுகள் போன்ற விடயங்களுக்கே இது பயன்படுத்தப்பட உள்ளது என அவர்கள் தெரிவிக்கின்றனர். சமய ஸ்தளம் ஒன்றை அமைப்பதானால் பௌத்த விவகார அமைச்சில் உரிய அனுமதியினைப் பெற்றிருக்க வேண்டும்.
இங்கு கருத்து தெரிவித்த பண்டாரகம பிரதேச சபை உறுப்பினர் சஞ்ஜீவ குலதிலக கூறுகையில்,
இந்நாட்டில் சகல சட்டதிட்டங்களும், தடை உத்தரவுகளும் சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே உள்ளது. இன்று இந்த செயலினால் மில்லனிய பிரதேச மக்களின் எதிர்காலத்திற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதற்கான ஆரம்ப நிகழ்வே இந்த கட்டிடமாகும். இந்த இடத்தில் சமய ஸ்தளம் ஒன்று அமைக்கப்படுகின்றது என்பது தெளிவான விடயமாகும். கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது இது மிகத் தெளிவாகின்றது. இதற்கு இடமளித்து சிங்கள பௌத்தர்கள் எவராவது தவறான வழியில் சலுகைகளைப் பெற்றுக் கொள்வார்களாயின் அவர்கள் வெட்கப்பட வேண்டும்.

Post a Comment