அல்ஆலிம் பரீட்சை முடிவுகளை வெளியிடாமை மாணவர்களுக்கு செய்யும் அநீதி
(எஸ்.அஷ்ரப்கான்)
2011ம் ஆண்டுக்கான அல்ஆலிம் பரீட்சை முடிவுகளை இன்னமும் வெளியிடாமை மாணவர்களுக்கு செய்யும் அநீதியாகும் என முஸ்லிம் மக்கள் கட்சி பரீட்சை ஆணையாளருக்கும் ஜனாதிபதிக்கும் சுட்டிக்காட்டியுள்ளது.
இது பற்;றி முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீதினால் பரீட்சை ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது,
கள்எலிய அறபுக்கல்லூரி மூலம் தமது பிள்ளைகள் எழுதிய 2011ம் ஆண்டுக்குரிய அல் ஆலிம் பரீட்சையின் முடிவுகள் இன்னமும் வெளிவரவல்லை என்பதை சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர் எமது கட்சியின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர். இதன் காரணமாக மேற்படி மாணவர்கள் தமது மேற்படிப்பை தொடர, அல்லது தொழில் வாய்ப்பை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டு வருடங்களாகியும் இன்னமும் பரீட்சை முடிவுகள் வெளிவராமை மாணவர்களுக்கு செய்யப்படும் அநீதி மட்டுமன்றி உளவியல் ரீதியாகவும் அவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது.
எனவே 2011ம் ஆண்டுக்குரிய அல்ஆலிம் பரீட்சை முடிவுகளை உடனடியாக வெளியிட நடவடிக்கை எடுக்கும் படி பரீட்சை ஆணையாளரை ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது. இக்கடிதத்தின் பிரதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Post a Comment