யாழ்ப்பாண முஸ்லிம் பிரதிநிதிகள் யாழ் அரசாங்க அதிபருடன் சந்திப்பு (படங்கள்)
யாழ்ப்பாணம் அரசாங்க அதிபர் மற்றும் யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விஷேட சந்திப்பொன்று யாழ்ப்பாணம் கச்சேரியில் (13 மார்ச் 2013)இடம்பெற்றது. இதன்போது முஸ்லிம்கள் தரப்பில் மஹஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. மஹஜரை யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் தலைவர் சகோ.நிலாம் அரசாங்க அதிபரிடம் கையளித்தார். யாழ் முஸ்லிம் சமூகத்தின் கோரிக்கைகளை சம்மேளனத்தின் உப செயலாளர் அஷ்ஷெய்க் அஸ்மின் அய்யூப் அவர்கள் விளக்கமளித்தார்.
அதன்போது இந்திய வீட்டுத்திட்டத்தில் யாழ் மாவட்ட முஸ்லிம் பயனாளிகள் தொடர்பாக யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் தொடரான ஈடுபாட்டினை செலுத்தி வருகின்றது. 2011ம் ஆண்டு ஜனவரி 11ம் நாள் யாழ் மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மீள்குடியேற்ற பதிவுகளை மேற்கொள்வதற்கான நடமாடும் சேவையின்போது 1500 யாழ் முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேற்றத்திற்கான பதிவுகளை மேற்கொண்டனர். 2012ம் ஆண்டின் ஆரம்பத்தில் யாழ் மாவட்டத்தில் மீளக்குடியேற்றத்திற்காக பதிவு செய்துகொண்ட குடும்பங்களின் மொத்த எண்ணிக்கை 2251 குடும்பங்களாகும். இவை யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வேலனை ஆகிய பிரதேச செயலகங்களில் தமது பதிவு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். இவர்களுள் காணி உரித்துடையோர் பிரதேச செயலகங்களினால் அடையாளப்படுத்தப்பட்டு 2011 மற்றும் 2012ம் ஆண்டுகளில் இந்திய வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கான பட்டியல் தாயாரிக்கப்பட்டது. அதன் பிரகாரம் யாழ்ப்பாணம் பிரதேச செயலகப்பிரிவிற்குள் 168 குடும்பங்கள் இந்திய வீட்டுத்திட்டப் பயனாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்தனர். இருப்பினும் குறித்த பயனாளிகள் தெரிவு மற்றும் இந்திய வீட்டுத்திட்ட அமுலாக்கத்தில் ஏற்பட்டிருக்கின்ற புதிய நடைமுறைகள் குறித்து யாழ் முஸ்லிம் சமூகத்தின் அவதானங்களையும் ஆலோசனைகளையும் இத்தால் முன்வைக்கின்றோம்
2012ம் ஆண்டில் அப்போதைய அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் அவர்களின் முயற்சியின் மூலம் மேற்கொள்ளப்பட்ட “யாழ் முஸ்லிம் மீள்குடியேற்ற கருத்திட்டத்தில்” யாழ் மாவட்டத்தில் 4500 முஸ்லிம் குடும்பங்கள் குடியேற்றப்பட வேண்டும் என அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. இதற்கமைய சுமார் 1393 குடும்பங்களின் வீடுகள் திருத்தியமைக்கப்படவேன்டும் என்றும் 3000 புதிய வீடுகள் நிர்மானிக்கப்படவேண்டும் என்றும் காணியில்லாதோர்க்கு காணிகளைப் பெற்றுக்கொடுக்கவேண்டும் என்றும் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.
மேற்படி கருத்திட்டத்தின்படி நோக்கும்போது
· 1393வீடுகள் திருத்தியமைக்கப்படவேண்டும்,
· 3000 குடும்பங்களுக்கான புதிய வீடுகள் நிர்மானிக்கப்படவேண்டும்
3ம் கட்ட இந்திய வீட்டுத்திட்ட ஒத்துக்கீடுகளுக்கு அமைய யாழ் முஸ்லிம் சமூகத்தவர்கள் செறிவாக வாழ்கின்றன ஜே84, ஜே86, ஜே87 மற்றும் ஜே88 ஆகிய கிராம அலுவலகர்களின் எல்லைப் பிரதேசங்களில் 342 வீட்டுத்திட்ட ஒதுக்கீடுகள் காணப்படுகின்றன. இவை இனரீதியான பாகுபாட்டினைக் கொண்டவையல்ல. எனினும் 342 வீடுகளும் முஸ்லிம்களுக்கு வழங்கப்படுகின்றன என கருதுகோளாகக் கொண்டு நோக்கினாலும் முஸ்லிம் சமூகத்தின் தேவையில் 7.77%த்தினை மாத்திரமே நிவர்த்திப்பதாக இருக்கும். இந்த நிலையில்
இந்திய வீட்டுத்திட்டத்திற்கான விண்ணப்பங்கோரல் செயற்பாட்டில் கடுமையான போக்குகள் கடைப்பிடிக்கப்படுவதையும் அதனூடாக முஸ்லிம் சமூகத்திற்கு குறித்த அற்பமான வாய்ப்புத் தன்னும் இல்லாமல் போகும் அபாய நிலை தோன்றியிருப்பதையும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவருகின்றோம். எனவே குறித்த நடைமுறைகளில் மக்களுக்கு நன்மையேற்படும் விதத்தில் முடியுமான தளர்வுகளை ஏற்படுத்தித் தருமாறு மிகவும் முதன்மையாக கோரிக்கை விடுகின்றோம்.
அடுத்து பிரதேச செயலாளர் அவர்களின் நடவடிக்கைகள். பல வழிகளிலும் முஸ்லிம்களை குறித்த திட்டத்தில் இருந்து ஒதுக்க மேற்கொள்ளும் வகையில் அமைந்திருக்கின்றன. பிரத்தியேகமான உளவாளிகளை நியமித்து தகவல்களைத் திரட்டுதல், அநாமேதயமான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானங்களை நிறைவேற்றுதல் போன்றனவாகும். எனவே குறித்த விடயத்தில் தங்களது மேலான கவனத்தை நாம் உடனடியாக எதிர்பார்க்கின்றோம்.
எம்முடைய இரண்டாவது கோரிக்கையாக இருப்பது ஏற்கெனவே பயனாளிகளாக அடையாளப்படுத்தப்பட்ட 168 பயனாளிகளும் முழுமையாக இத்திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என்பதும். இந்திய வீட்டுத்திட்ட ஒதுக்கீட்டில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஒதுக்கீட்டுக்கு அமைவாக மேலதிக விண்ணப்பங்களும் உள்வாங்கப்படவேண்டும் என்பதுமாகும்.
2013ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட குடும்பப்பதிவுகளை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகளில் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் பதிவுகளைக் கொண்டுள்ள 2082 குடும்பங்களுள் 650 குடும்பங்கள் மாத்திரமே பதிவுகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன, ஏனையோர் இங்கே குடியிருக்கவில்லை எனக் காரணம் காட்டி பதிவுகள் புதுப்பில் நடவடிக்கையில் உள்வாங்கப்படவில்லை, இது ஒரு அடிப்படை மனித உரிமை மீறல் என நாம் கருதுகின்றோம். இத்தகைய நடவடிக்கைகள் யாழ்ப்பாணம் பிரதேச செயலகம் முஸ்லிம்கள் மீது காட்டும் பாரபட்சத்தின் அடையாளமாக அமைந்திருக்கின்றது. எனவே எமது மூன்றாவது கோரிக்கையாக இருப்பது, 2012 டிசம்பர் வரை யாழ்ப்பாணத்தில் பதிவுகளைக்கொண்டிருந்த அனைவரதும் குடும்பப் பதிவுகள் அனைத்தும் உடனடியாக புதுப்பிக்கப்பட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதாகும்
இதற்குப்பதிலளித்துப்பேசிய யாழ் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்கள்
இந்திய வீட்டுத்திட்டப் பயனாளிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்கள் ஆனால் இதுவரை இறுதியான பயனாளிகள் பட்டியல் வெளியிடப்படவில்லை, நான் விண்ணப்பங்களை கோரியுள்ளோம், முஸ்லிம் சமூகத்தவரிடமிருந்தும் விண்ணப்பங்களை எதிர்பார்க்கின்றோம். யாழ்ப்பாணத்தில் காணிகளைக்கொண்டுள்ள, யாழ்ப்பாணத்தில் வசிக்கும் எண்ணங்கொண்டுள்ள அனைவரும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும். நாம் முஸ்லிம் அல்லது தமிழர் என்ற பாகுபாட்டை ஒருபோது இந்திய வீட்டுத்திட்டத்தில் அல்லது எமது நடவடிக்கைகளின் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
மீள்குடியேற்றம் என்பது ஒரு குறிப்பிட்ட கால எல்லையினைக்கொண்ட செயற்திட்டமாகும். குறித்த கால எல்லை முடிவடைந்ததும் அதனை நாம் நிறைவு செய்துவிடுவோம், அதன் அர்த்தம் மீளக்குடியேற்றம் முடிவடைந்து விட்டது என்பதல்ல, மீள்குடியேற்றம் காலத்தால் வரையறுக்க முடியாதது. ஆனால் செயற்திட்டங்கள் உதவித்திட்டங்கள் நிறைவடைந்துவிடும். குறிப்பாக யாழ்ப்பாணம் முஸ்லிம்களுடைய விடயத்தில் அவர்கள் மீளக்குடியேற்றத்தில் உண்மையான ஆர்வத்தைக் கொண்டிருக்கின்றார்களா என்ற ஐயம் இருக்கின்றது. எனெனில் முன்னர் வழங்கப்பட்ட உதவித்திட்டங்களைப் பெற்றுக்கொண்ட பலர் இப்போது யாழ்ப்பாணத்தில் வசிக்கவில்லை என்று அறிகின்றோம் இது ஆரோக்கியமானதல்ல, மீளக்குடியேற்றம் என்பது நடபெறுவதற்கு எம்மிடம் ஒரு சில எடுகோள்கள் இருக்கின்றன, முதலில் மக்கள் வரவேண்டும் வந்த பின்னர்தான் உதவித்திட்டங்கள் கிடைக்கும். எல்லாவற்றையும் செய்துவிட்டு குடியேற்றுவது மீள்குடியேற்றமாகாது. எனவே முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தில் வந்து தற்காலிகமாக குடியிருக்க வேண்டும் அப்போது மாத்திரம்தான் எம்மால் உதவித்திட்டங்களை அமுலாக்க முடியும்
காணி உறுதிகளில் காணப்படும் சிக்கல்களை தீர்ப்பதற்கு ஒரு பொறிமுறையினை நீங்களே உருவாகிக்கொள்ளுங்கள். அரச அனுமதிப் பத்திரக்காணிகளுக்கு அவற்றின் பிரதிகளைப் பெற்றுத்தர நாம் ஏற்பாடு செய்கின்றோம். எனவும் தெரிவித்தார். இவ்வாறான தொடரான சந்திப்புகள் மக்களின் நிலைமைகளை அறியக்கூடிய சந்தர்பத்தை எமக்குத் தருகின்றன அவை வரவேற்கப்படவேண்டியவை எனவும் தெரிவித்தார்.
இதன்படி தற்போது யாழ்ப்பாணத்தில் சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்படும் இந்திய வீட்டுத்திட்ட அவசர விண்ணப்பங்கோரல் செயற்திட்டம் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என சம்மேளனத்தின் தலைவர் சகோ.நிலாம் எம்மிடம் தெரிவித்தார். சம்மேளனம் சார்பாக சம்மேளனத்தின் தலைவர் சகோ.நிலாம், சகோ.நாஸர், அஷ்-ஷெய்க் அஸ்மின் அய்யூப், சகோ ஜமால், சகோ,ஷரபுல் அனாம், சகோதரி ஷர்மிளா ஹனீபா ஆகியோர் பங்கேற்றனர்.


Post a Comment