Header Ads



முஸ்லிம் எதிர்ப்புகளும், முஸ்லிம் ஊடகங்களும்..!




(Rifan Hussain)

இஸ்லாம் ஒரு  இயற்கை மார்க்கம். அது நசுக்கப்பட்டபோதெல்லாம் வளர்ச்சியடைந்ததைத் தான் வரலாற்றில் காண்கிறோம். அமெரிக்காவில் இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பற்றி மிக மோசமாக மேற்கத்திய ஊடகங்களால் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் வரலாற்றில் என்றுமில்லாதவாறு அந்த நிகழ்வின் பின்னர் இஸ்லாத்தை அறிபவர்களின் தொகையும் ஏற்றுக்கொள்பவர்களின் தொகையும் அதிகரித்துச் சென்றதனை நாங்கள் கண்கூடாகக் காண்டோம்.

இன்று இலங்கையிலும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் நசுக்குவதற்கான செயற்பாடுகள் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு சில பேரினவாதிகளினால் மேற்கொள்ளப்படும் இந்த நச்சுப் பிரச்சாரம் ஹலாலில் ஆரம்பித்து பர்தா முதல் முஸ்லிம்களின் வியாபாரம் என நீண்டுகொண்டே செல்கின்றது. 

இன்று பலரும் கூறுவது போல இது வெறுமனே ஹலாலிற்கு எதிரான போராட்டமல்ல. மாற்றமாக முஸ்லிம் சமுகத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக எமது சமுகத்தின் பொருளாதாரத்தை சீர்குழைத்து ஒரு பின்தங்கிய சமுகமொன்றாக ஆக்குவதற்கு அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசிர்வாதத்துடன் மேற்கொள்ளப்படுகின்ற ஒரு சதித்திட்டமாகவும் இருக்கலாம். இதன் பின்னால் இஸ்லாத்தின் எதிரிகளான சர்வேச சத்திகளின் பங்களிப்புக்கள் இல்லாமல் இல்லை என்று கூறிவிடுவதற்கும் இல்லை.

எது எப்படியோ இப்பணியை மிகவும் கச்சிதமாக பொது பல சேனா செய்வதற்கு தற்போது தயாராகிவிட்டது. ஹலால் விடயத்தில் ஒரு முடிவும் ஏற்பட்டாகி விட்டது.  கடந்த இரண்டு முன்று மாதங்களாக எமது சமுகத்திற்கு குறிப்பாக ஹலாலிற்கு எதிராக மேற்கொண்ட பிரச்சாரம் இன்று சிங்கள முஸ்லிம் சமுகங்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன. பௌத்த சமுகத்தினர் மத்தியில் ஒரு சிறிய குழுவாக காணப்படும் இந்த இனவாதிகள் இணையத்தளங்கள், தொலைகாட்சி, வானொலி, பத்திரிகை என நவீன ஊடகங்களைப் பயன்படுத்தியே தமது விசமப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் அவர்கள் முஸ்லிம்கள் பற்றிய தப்பெண்ணங்களை பெரும்பாண்மை சமுகத்தவர் மனதில் மிகவும் இலகுவாக பதித்து விட்டனர்

இது வரை சுமார் 8 இணையத்தளங்கள் இஸ்லாத்தை கொச்சைப்படுத்தி முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக அறியப்படுகின்றது. அரச தனியார் தொலைகாட்சிகள் வானொலி போன்றவற்றில்  இந்த பேரினவாதிகள் பிரச்சாரங்கள், விவாதங்கள் என பல்வேறு முறைகளில் எமது சமுகத்தை  மிக மோசமாக சித்தரித்து பெரும்பாண்மை சமுகம் மத்தியில் பிழையான கருத்துக்களைப் பதித்து வருகின்றனர்.

ஆனால் இன்று எமது நிலை என்ன. ஜம்இய்யதுல் உலமா, இஸ்லாமிய அமைப்புக்கள், அரசியல் வாதிகள் என முஸ்லிம்களின் பக்கத்திலிருந்து இந்த சதித்திட்டங்களை முறியடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன.?

கடந்த 10.03.2013 ஆம் திகதி மாவனல்லை கிருங்கதெனிய மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசலில் ஜம்இய்யதுல் உலமாவினால் மேற்கொள்ளப்பட்ட கலந்துறையாடலொன்றில் இந்த சதித்திட்டங்களுக்கு எதிராக  ஜம்இய்யதுல் உலமா மேற்கொண்ட நடவடிக்கைகள் சம்பந்தமாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.  அவர்கள் ஜனாதிபதி மற்றும் அரசியல்வாதிகளைச் சந்தித்தது முதல் பத்திரிகையில் விளக்கங்கள் கொடுக்கப்பட்டது வரை பல விடயங்களை அதில் விளங்கப்படுத்தினர். அந்த கலந்துறையாடலில் அவர்கள் அடிக்கடி குறிப்பிட்ட அல்லது ஆதங்கப்பட்ட ஒரு விடயம் எமது கருத்துக்களை எடுத்துச் சொல்வதற்கு எமக்கு மீடியாவில் இடம் வழங்கப்படவில்லை.  எமக்கொரு மீடியா இல்லை. குறிப்பிட்டதொரு தொலைகாட்சிச் சேவையில் ஒரு கலந்துறையாடலை மேற்கொண்டு அந்நிய சகோதரர்களுக்கு விளக்கத்தை கொடுப்பதற்காக  ஜனாதிபதி மூலம் மேற்கொள்ளப்பட்ட முயற்சி கூட கைகூடவில்லை. இறுதியில் 1 மணித்தியால நிகழ்ச்சிக்கு 5 இலட்சம் ரூபாய்கள் கட்டணம் செலுத்த முன்வந்தும் ஜம்இய்யதுல் உலமாவிற்கு அதில் வாய்ப்புக் கிடைக்கவில்லை.

இன்று பெரும்பாண்மை சமுகத்தில் உள்ள அனைவருமே தொலைகாட்சி பார்க்கக் கூடியவர்கள். செய்திகளுக்காகவும் பொழுது போக்கிற்காகவும் அவர்கள்  வாழ்க்கையில் மிக முக்கிய அம்சமாக தொலைகாட்சி மாறிவிட்டது. அதிகமாணவர்கள் வானொலி கேட்கிறாhர்கள். பலர் பத்திரிகை வாசிக்கின்றார்கள். அவர்கள் மத்தியில் ஒரு செய்தியை தெரிவிக்க வேண்டுமென்றால் இந்த ஊடகங்களைப் பயன்படுத்தினால் ஒரு சில நிமிடங்களில் முழு நாட்டிற்குமே அந்தச் செய்தியை எத்தி வைக்க முடியும். இதைத்தான் பொது பல சேனா மிக கச்சிதமாக மேற்கொண்டது.

அனால் எமது சமுகத்தைப் பொருத்தவரை இந்த ஊடகங்கள் எல்லாம் ஜாஹிலியத் என்ற மனப்பாண்மை மிக நீண்டகாலமாக மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. நவீன ஊடகங்களைப் பயன்படுத்தி இஸ்லாமிய பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டுமென்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டபோதெல்லாம் அவை நபி வழிக்கு முரணானவை என்ற கருத்துக்கள் மூலம் மறுத்துறைக்கப்பட்டன.  தொலைகாட்சி பார்ப்பது ஒரு பாவம், அது ஒரு சைத்தான் பெட்டி என்ற கருத்துக்கள் தான் முஸ்லிம் சமுகத்தில் ஆண்டாண்டு காலமாக போதிக்கப்பட்டு வந்தன. இஸ்லாமிய சஞ்சிகைகள், புத்தகங்கள் ஒரு சில குறிப்பிட்ட மக்கள் மத்தியில் மாத்திரமே பயன்பாட்டில் காணப்பட்டன. பள்ளிவாசல்களில் வாசிகசாலை அமைப்பதென்பது பல இடங்களில் பெரும் சவால்களுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு நடவடிக்கையாகவே காணப்பட்டது.

இவ்வாறான ஒரு சூழலில் ஒளிக்கீற்றுக்களாக முஸ்லிம்களுக்கு ஒரு தனி ஊடகம் தேவை. அதற்காக செலவழிப்பது ஒரு இபாதத் என்று கருத்துக்கள் கடந்த பல வருடங்களாக இஸ்லாமிய அமைப்புக்களினாலும் நவீன கால உலமாக்களினாலும் முஸ்லிம் சமுகத்தின் மத்தியில் முன்வைக்கப்பட்டன. ஆனால் அவை எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகவே காணப்பட்டன.  பள்ளி கட்டுவதற்காக அளவில்லாது செலவளிக்கும் சமுகம் இந்தப் பணிக்காக ஒரு சதம் கூட செலவளிக்க முன்வரவில்லை என்பது வேதனைக்குறியது.

அதன் விளைவு இனவாதிகளின் கருத்துக்களை முறியடிப்பதற்காக எமது கருத்துக்களை சுமந்து செல்லக் கூடிய ஒரு ஊடகம் இல்லையே என்று கைச்சேதப்பட வேண்டிய ஒரு நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளோம். 

ஊடகம் மட்டுமல்ல எத்தனை ஊடகவியலாளர்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம்? தொலைகாட்சியில் ஒரு கலந்துறையாடலுக்கு அழைக்கப்பட்டால் எமது கருத்துக்களை அழகாக சிங்கள மொழியில் முன்வைக்கக் கூடிய எத்தனை மனிதர்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம். ஆயிரம் வருடங்களுக்கு மேல் இந்நாட்டில் வாழ்கின்றோம் என்று கூறும் முஸ்லிம் சமுகம் 70 வீதத்திற்கு மேல் உள்ள சிங்கள மக்களுக்கு எமது கருத்துக்களை எடுத்துரைப்பதற்காக எத்தனை சிங்கள மொழியில் பாண்டித்தியம் பெற்றவர்களை உருவாக்கியுள்ளோம். எத்தனை சிங்கள மொழியிலான வெளியீடுகளை மேற்கொண்டுள்ளோம்?

நவீன தொடர்பு ஊடகங்களின் சக்தியை இன்னும் எமது சமுகம் உணர்ந்து கொள்ளவில்லை. சுமார் 40 வருடங்களாக இரும்புப்பிடிக்குள் சர்வதிகார ஆட்சி நடத்திவந்த எகிப்தின் ஹூஸ்னி முபாரக் ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்ட புரட்சியை வழிநடத்திச் செல்வதில் அல்ஜஸீரா மற்றும் பேஸ்புக் போன்ற ஊடகங்களின்  பங்களிப்புக்களை உலகமே கண்டு வியந்தது. ஒரு சிறிய விடயத்தை ஊதிப்பெருப்பிப்பதிலும் ஒரு பெரிய விடயத்தை சிறியதாக காட்டி மறைப்பதிலும் ஊடகத்தின் சக்தி மகத்தானது. அதைத்தான் இன்று ஹலால் விடயத்திலும் பெரும்பாண்மை மக்கள் மத்தியில் அவை செய்து கொண்டிருக்கின்றன.

ஒரு குழவினரைஅல்லது ஒரு சமுகத்தை மூலைச்சலவை செய்வதற்கு ஒரு டெலிடிராமா அல்லது விஸ்வருபம் போன்றதொரு திரைப்படம் தாராளமாகப் போதும். இன்று இந்தப் பணியைத்தான் ஹொலிவூட் மற்றும் பொலிவூட் திரைப்படங்கள் கச்சிதமாக செய்து கொண்டிருக்கின்றன. இந்தப் படங்களை பார்க்க முடியாதவாறு பிற சமுகங்களை எம்மால் தடுக்க முடியுமா? 

எமது எதிரிகள் ரொக்கட்டில் பிரயானம் செய்கின்ற போது நாங்கள் அவர்களுடன் ஒட்டகத்தில் போட்டி போடப் போகின்றோமா? இன்று திரைப்படங்கள் என்பன பொழுது போக்கு சாதனமாக மாறிவிட்ட நிலையில் மக்கள் மத்தியில் பிரிக்க முடியாத ஒன்றாக அமைந்து விட்ட நிலையில் இஸ்லாத்தையும் அதன் தாத்பரியங்களையும் பிற சமுகங்கள் மத்தியில் பரப்புவதற்கும் இஸ்லாத்திற்கு எதிரான திரைப்படங்களுக்கு மறுப்பளிப்பதற்கும் ஏன் நாம் இந்தத் துறைகளிலும் கவனம் செலுத்தக் கூடாது. 
பொது பல சேனா போன்ற இனவாதிகளின் நடவடிக்கைகள் இன்று முஸ்லிம் சமுகத்தில் ஒரு சிந்தனா ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. பல பிரிவுகளாக பிரிந்திருந்த சமுகத்தை ஜம்இயத்துல் உலமாவின் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றிணைத்துள்ளது. முஸ்லிம் சமுகம் தற்பொழுது யதார்த்தமாக சிந்திக்கத் தொடங்கியுள்ளது. 

இன்று இனவாதிகள், தங்கள் சமுகம் மத்தியில், முஸ்லிம்களுடன் வியாபார தொடர்புகளை வைத்துக்கொள்ள கூடாது, அவர்களது பெண்களை முஸ்லிம்கள் மத்தியில் வேலைக்கு அனுப்பக்கூடாது, முஸ்லிம்களுக்கு காணி விற்கக் கூடாது, முஸ்லிம்களின் உற்பத்திப் பொருட்களை வாங்கக் கூடாது என பிரச்சாரம் செய்கின்ற போது நாங்கள் என்ன சொல்கின்றோம். பிற சமுகத்தவர்களுடன் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள், எமது நிகழ்ச்சிகளிற்கு அவர்களையும் அழையுங்கள், அவர்களில் வறியவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யுங்கள், அவர்களுடன் கொடுக்கல் வாங்கல்களை நேர்மையாக மேற்கொள்;ளுங்கள், இரத்ததானம் செய்யுங்கள் என நல்ல பண்புகளை முன்பை விட அதிகமாக போதிக்கின்றோம். இன்று அந்நிய சகோதரர்களுடன் பழகும் போது கூட இஸ்லாத்திற்கு கெட்ட பெயர் ஏற்படக்கூடாது என்று மிகவும் கவனமாக நடக்கின்றோம்.

கடந்த காலங்களில் எவ்விதக் குறிக்கோளும் நோக்கமுமின்றி பல பிரிவுகளாக பிரிந்து வாழ்ந்த சமுகம் இன்று சிந்தனா ரீதியில் ஒரு மாற்றத்தை உள்வாங்கி தமது இயக்க வேறுபாடுகளை மறந்து ஒரே தலைமைத்துவத்தின் கீழ் ஒன்று பட்டது மட்டுமல்ல ஆக்கபூர்மாக சிந்திக்கவும் காய் நகர்த்தவும் தொடங்கியுள்ளது. இதற்காகவாவது நாங்கள் இந்த இனவாதிகளுக்கு நன்றி செல்லக் கடமைப்பட்டுள்ளோம். 

எமக்கென ஒரு ஊடகம் தேவை என்பதனை இந்த சவால்களை சந்தித்த பின்னர் தான் எமது உலமாக்கள் கூட உணரத்தொடங்கியுள்ளனர். இன்று ஜம்இயதுல் உலமா பல மாவட்டங்களில் கலந்துறையாடல்களை ஏற்படுத்தி தற்போதுள்ள பிரச்சினைகள் சம்பந்தமாகவும் அதற்காக அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் சம்பந்தமாவும் விளக்கங்களை முஸ்லிம்களுக்கு வழங்கி வருகின்றனர். ஏனென்றால் இன்று முஸ்லிம்கள் மத்தியிலேயே கொழுந்து விட்டெரியும் இப்பிரச்சினைகளுக்கு மத்தியில் ஜம்இய்யதுல் உலமா என்ன செய்கின்றது என்ற கேள்வியும் அதிருப்;தியும் காணப்படுவதாகவும் அவர்கள் மேற்கொண்ட விடயங்கள் பற்றிய தெளிவு சாதாரண முஸ்லிம்களை சென்றடைவதில்லை என்பதனாலும் இந்த ஏற்பாடுகளை ஜம்இய்யதுல் உலமா மேற்கொண்டுள்ளதாக கூறினர். இவ்வாறான நிகழ்ச்சிகளை பல மாவட்டங்களிலும் நடத்துவதென்றால் அதற்கு பல வாரங்கள் தேவைப்படும். பல ஆயிரங்கள் செலவாகும். பல மனித வளங்கள் அவசியமாகும். ஆனால் எமக்கென ஒரு ஊடகம் இருந்திருந்தால் ஒரு சில மணித்தியாலங்களில் முழு முஸ்லிம் சமுகத்திற்கும் இந்தச் செய்தியை எத்தி வைத்திருக்கலாம். நேரத்தையும் பணத்தையும் சேமித்து மேலும் பயனுள்ள வேலைகளைச் செய்திருக்கலாம்.

எதிரிகளின் பலத்தையும் பலவீனத்தையும் அறியாது மோதுவது தற்கொலைக்குச் சமன். இன்று அவர்கள் எமக்கெதிராக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி செயற்படும் போது நாம் இன்னும் ஒட்டக யுகத்தில் வாழந்து கொண்டிருப்பது எம்மை நாமே அழித்துக் கொள்வதற்கு சமனாகும். எனவே, எமக்கென ஊடகங்களை அமைத்துக் கொள்ளும் முயற்ச்சியில் உடனடியாக நாங்கள் இறங்க வேண்டும். எமக்கான ஊடகவியலாளர்களை உருவாக்க வேண்டும். இருக்கின்ற ஊடகங்களை, ஊடகவியலாளர்களை வளர்த்தெடுப்பதற்கு சமுகம் முன்வர வேண்டும். இதற்காக செலவளிப்பதற்கு தனவந்தர்கள் முன் வர வேண்டும். உலமாக்கள் இதன் தேவையை குத்பாக்களிலும் ஏனைய நிகழ்ச்சிகளிலும் வழியுறுத்த வேண்டும். எமது சமுகத்தில் நடக்கின்ற ஒவ்வோர் நிகழ்ச்சியும் ஆவணப்படுத்தப்படல் வேண்டும். மக்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். ஒவ்வோர் பள்ளிவாசலிலும் ஒரு வாசிகசாலை அமைக்கப்படல் வேண்டும். வானொலி தொலைகாட்சி கலைஞர்கள் உருவாக்குவதற்கான செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும். இணையப்பாவனையை பயனுள்ள விதத்தில் பயன்படுத்துவதற்காக இளைஞர்கள் வழிகாட்டப் படல் வேண்டும். எழுதக் கூடியவர்கள் எழுத வேண்டும், எழுத்தாற்றலை விருத்தி செய்ய வேண்டும். உரையாற்றக் கூடியவர்கள் உரையாற்ற வேண்டும். நிகழ்ச்சிகளை தயாரிக்கக்கூடியவர்கள் அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறானதோர் ஊடகப் புரட்சியை எமது சமுகத்தில் உடனடியாக நாம் ஏற்படுத்த வேண்டும். 

எனவே எமக்கோர் ஊடகம் இல்லை என்று இனியும் காலம் தாழ்த்தாமல்  ஜம்இய்யதுல் உலமா, இயக்கங்கள், புத்தி ஜீவிகள் , தனவந்தர்கள் என அனைவரும் இணைந்து இதற்கான செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இப்பணி இன்று ஆரம்பித்து நாளை பூர்த்தி செய்யக் கூடியதல்ல. பல மாதங்கள் பல வருடங்கள் இதற்காக நாம் உழைக்க வேண்டி இருக்கும். இனவாதிகளின் செயற்பாடுகளைப் பார்க்கும் போது எதிர்காலம் இதைவிட கடினமானதாக இருக்கும். அதற்கு நாம் இப்போதே தயாராக வேண்டும். 

ஒட்டகத்தை கட்டிவைப்போம். அதன் பின்னர் துஆச் செய்வோம், தொழுகையில் குனூத் ஓதுவோம். அல்லாஹ்விடம் இறைஞ்சுவோம். நோன்பு நோற்போம். அப்பொழுது அல்லாஹ்வின் உதவி நிச்சயம் எமக்கு கிடைக்கும். இன்ஷா அல்லாஹ்.


4 comments:

  1. Alhamdulillah, it is a good initiative, may allah give us all the success. we shall prepare rom right now.

    ReplyDelete
  2. FOR THIS GOAL MHM ASHRAFF IS A RIGHT PERSON BUT NOW ALL ARE GOVERNMENT LEAF LET DOG

    ReplyDelete
  3. இஸ்ரேலில் வளர்ப்பு நாய்களுக்கென தனி 'டிவி' சேனல்?

    ReplyDelete
  4. ALLAH WILL HELP US LETS GO AHEAD WITHOUT FURTHER DELAY

    ReplyDelete

Powered by Blogger.