மாத்தளையில் மீட்கப்பட்ட 150 க்கும் மேற்பட்ட உடல்கள் யாருடையது..?
இலங்கையின் மத்திய மாகாணத்தில் மாத்தளை நகரில் மனிதப் புதைகுழி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட 150க்கும் மேற்பட்ட மனித உடல்கள் , 1980களின் பிற்பகுதியில் அங்கு புதைக்கப்பட்டவையாக இருக்கலாம் என்று வல்லுநர்கள் கூறியிருக்கிறார்கள்.
இந்த காலகட்டம் என்பது இடதுசாரிக் கட்சியாகக் கருதப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சி உச்சகட்டத்தை அடைந்திருந்த சமயத்துடன் ஒத்துப்போகிறது. எனவே இந்தக் கொலைகள் அரசியல் ரீதியான கொலைகளாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகங்களுக்கு வலு சேர்ப்பது போல தோன்றுகிறது.
இந்த மனிதப் புதைகுழிகள் கடந்த நவம்பர் மாதம் கட்டுமானப்பணி தொழிலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட உடல்கள் 1940களில் ஒரு பெரியம்மை தொற்று நோய் ஏற்பட்டபோதோ அல்லது மண் சரிவிலோ இறந்தவர்களின் உடல்களாக இருக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறியிருந்தார்கள்.
மாத்தளை மனிதப் புதைகுழி சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டு, அதில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஜேவிபி கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன் கூறியுள்ளார்.
மாத்தளையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஜேவிபி கட்சியின் இராமலிங்கம் சந்திரசேகரன் கூறியுள்ளார்.மாத்தளையில் மருத்துவமனை வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதபுதைகுழி 1986 - 1990 ஆம் ஆண்டுப் பகுதியை சேர்ந்தது என்று நீதிமன்றத்துக்கு கிடைத்த அறிக்கை ஒன்று கூறியுள்ளது.
அந்தக் காலகட்டத்தில் ஜேவிபி கட்சியின் இரண்டாவது கிளர்ச்சி இலங்கையில் நடந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் அந்தப் பகுதியிலும் அந்தக் காலகட்டத்தில் பல ஜேவிபியினர் அரசாங்க படைகளால் கொலை செய்யப்பட்டதாக ஜேவிபி தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டிவந்துள்ளது.
இதனால், இந்த நீதிமன்ற அறிவிப்பு குறித்து ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ராமலிங்கம் சந்திரசேகரன் அவர்களிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன், அந்தக் காலப்பகுதியில் மாத்தளையில் இலங்கை இராணுவத்துக்கு பொறுப்பாக தற்போதைய பாதுகாப்பு துறை செயலர் கோட்டாபாய ராஜபக்ஷ அவர்கள் செயற்பட்டதாக தற்போதைய துணை அமைச்சர் ஒருவரே கூறும் நிலையில், அது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு உரியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் சந்திரசேகரன் கூறுகிறார்.

Post a Comment