அதிகாரிகளுக்கோர் அறிவுரை..!
(A.J.M.மக்தூம்)
உமர் இப்னு அப்தில் அஸீஸ் (ரஹ்) அப்பாஸிய சாம்ராஜ்யத்தின் கலீபாக்களில் ஒருவர் ஆவார். சிதைந்து போன இஸ்லாமிய அரசியலை சீர் செய்து மீண்டும் நீதி, நியாயங்களை கட்டி எழுப்பிய நேர்மை மிகுந்த ஆட்சியாளராக திகழ்ந்தமையினால் ஐந்தாம் கலீஃபா என இவரை வரலாற்று ஆசிரியர்கள் அறிமுகம் செய்கின்றனர். அரச குடும்பத்தில் பிறந்த இவர் ராஜ போகத்தில் மூழ்கி இருந்திருப்பது இயல்பானதே. இவ்வாறான நிலையிலும் ஆட்சிக்கு வந்த பின் அனைத்து குடிமகனுக்குமுரிய உரிமைகளை முழுமையாக வழங்கி நேர்மையான ஆட்சிக்கு எடுத்துக் காட்டாக விளங்கினார் என்பது நினைவு கூறத் தக்கதாகும். இவர் ஆட்சி பீடம் ஏறிய போது அக்காலத்தில் இருந்த மாபெரும் அறிஞராகிய ஹஸன் அல் பஸரி (ரஹ்) அவரிடம் நேர்மையான ஆட்சித் தலைவரின் பண்புகளை வினவி அனுப்புகின்றார். அதற்கு அவர் பதிலாக எழுதி அனுப்பிய வரலாற்று புகழ் மிக்க அக்கடிதம் அனைத்து அதிகாரிகளும் கடைப்பிடித்தொழுக பொருத்தமான அரசியலமைப்பாக திகழ்கிறது என்றால் மிகையல்ல. அக்கடிதத்தின் தமிழ் வடிவம் பின்வருமாறு அமைந்துள்ளது,
முஃமீன்களின் தலைவரே! தெரிந்து கொள்ளுங்கள்:
நேர்மையான ஆட்சித் தலைவர் நெறித் தவறிச் செல்வோர் அனைவரையும் நெறிப் படுத்துவார், அநீதி இளைப்போரை நேர்மையானவர்களாக மாற்றுவார், தவரிளைப்போரை சீர் செய்வார், வலுவிழந்தோரை வலுப்படுத்துவார், அநீதிக்குள்ளானோருக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பார்.
முஃமீன்களின் தலைவரே!
நேர்மையான ஆட்சித் தலைவர் தனது ஒட்டகங்களின் மீது பாசமும், கவனமும் உள்ள ஒரு மேய்ப்பாளனைப் போன்றவர்; அவைகள் மேய்ந்து திரிவதற்காக பாதுகாப்பான சிறந்த மேயும் தளத்தை தேடிக் கொடுப்பார், மேலும் அவைகளை அழிவில் இருந்தும் வேட்டை மிருகங்களின் தாக்குதலில் இருந்தும் பாதுகாப்பார்.
முஃமீன்களின் தலைவரே!
நேர்மையான ஆட்சித் தலைவர் தனது குழந்தைகளின் மீது கருணையுள்ள தந்தையைப் போன்றவர்; அவர்களின் சிறு பிராயம் முதல் பெரியவர்களாக வரும்வரை அவர்களுக்காக உழைப்பார், கல்வி ஞானத்தைப் புகட்டுவார், மேலும் இவரின் வாழ் நாளில் அவர்களுக்காக சம்பாதிப்பது போன்றே அவரின் மரணத்தின் பின்பும் அவர்கள் (பிறரிடம் கையேந்தாமல் இருக்க) முடியுமானவற்றை சேமித்தும் வைப்பார்.
முஃமீன்களின் தலைவரே!
நேர்மையான ஆட்சித் தலைவர் தனது குழந்தைகளின் மீது அன்புள்ளம் கொண்ட தாயைப் போன்றவர்; அந்த தாய் அவர்களை வெகு சிரமத்துடன் சுமந்து, வெகு சிரமத்துடனேயே பெற்றெடுத்தாள், பிறகு பாலூட்டி தாலாட்டி வளர்த்தெடுக்கிறாள், குழந்தை விழித்திருந்தால் இவளும் விழித்திருக்கின்றாள், குழந்தை உறங்கும் போதே தாயாலும் உறங்க முடிகிறது, குழந்தையின் அழுகுரலை கேட்டால் விரைந்து சென்று பாலூட்டுகிறாள், அது அழுகையை நிறுத்திக் கொண்டதும் இவளும் நிறுத்திக் கொள்கின்றாள், குழந்தை ஆரோக்கியமாக இருந்தால் தாயும் சந்தோஷமாக இருப்பாள், அது நோயுற்றால் தாயும் சஞ்சலப் படுவாள்.
முஃமீன்களின் தலைவரே!
நேர்மையான ஆட்சித் தலைவர் அனாதைகள் மற்றும் ஏழை எளியோரின் பொறுப்பாளரும், அவர்களின் உடைமைகளின் பாதுகாவலரும் போன்றாவார்; அவர்கள் சிறு பிராயத்தில் இருக்கும் போது அவர்களை பராமரிப்பதற்காக அவர்களின் சொத்துக்களில் சிலதை பயன்படுத்துவார், அவர்கள் பெரிய வயதை அடைந்ததும் அவற்றை அவர்களிடம் ஒப்படைத்து விடுவார்.
முஃமீன்களின் தலைவரே!
நேர்மையான ஆட்சித் தலைவர் உடல் உறுப்புக்களுக்கு மத்தியில் உள்ளத்தைப் போன்றவர்; அந்த உள்ளம் சீராக இருந்தால் அனைத்து உடல் உறுப்புக்களும் சீராக இருக்கும், அது சீர் கெட்டுவிட்டால் அனைத்து உறுப்புக்களும் சீர் கெட்டுவிடும்.
முஃமீன்களின் தலைவரே!
நேர்மையான ஆட்சித் தலைவர் துன்பத்தில் அல்லலுறுவோரின் பக்கம் விரைவார், அவர் அல்லாஹ்வுக்கும், அடியார்களுக்கும் மத்தியில் நிற்பார், அவனது வார்த்தைகளை கேட்பதோடு அவர்களுக்கும் கேட்க செய்வார், அல்லாஹ்வின் வல்லமைகளை காண்பதோடு அவர்களுக்கும் காணச் செய்வார், அல்லாஹ்வுக்கு வழிப்படுவதோடு மக்களையும் அதன்பால் இட்டுச் செல்வார்.
முஃமீன்களின் தலைவரே!
நேர்மையான ஆட்சித் தலைவர் தனது எஜமான் அவர்மீது கொண்டுள்ள பிரத்தியேக நம்பிக்கையினால் தனது சொத்துக்களையும், குடும்பத்தையும் பாதுகாக்கும் பொறுப்பை ஒப்படைத்துள்ள அடிமையை போன்றவர், அந்த எஜமானனின் சொத்துக்களை சீரழித்து அவரது குடும்பத்தை சின்னாபின்னமாக்கிய அடிமையாக நீர் மாறிவிடாதீர்!
முஃமீன்களின் தலைவரே! தெரிந்து கொள்ளுங்கள்,
தீச் செயல்கள் மற்றும் குற்றச் செயல்களை தடுக்கவே இறைவன் தண்டனைகளை விதியாக்கி உள்ளான். அந்த தண்டனைகளை நிறைவேற்றப் பொறுப்பாக உள்ள ஆட்சித் தலைவரே குற்றங்களில் ஈடுபட்டால் நிலைமை என்னவாகும்?! மனித உயிர்களை பாதுகாக்கவே இறைவன் கொலைக்கு கொலை என்ற தண்டனை முறையை விதியாக்கி இருக்கின்றான், மனித உயிர்களை பாதுகாக்கப் பொறுப்பாக உள்ள ஆட்சித் தலைவரே கொலைக் குற்றங்களை அரங்கேற்றினால் நிலைமை என்னவாகும்?!
முஃமீன்களின் தலைவரே!
மரணத்தையும் அதன் பின்னுள்ள நிகழ்வுகளையும் மறந்து விடாதீர்! மரணத்தின் பின் உமக்கு எந்த கூட்டமோ, உதவியாளர்களோ இருக்க மாட்டார்கள். எனவே, மரணத்தின் பின்னுள்ள வாழ்வுக்காக உம்மைத் தயார் படுத்திக் கொள்வீராக.
முஃமீன்களின் தலைவரே! தெரிந்து கொள்ளுங்கள்,
நீர் வாழும் இந்த (ராஜபோக) இருப்பிடம் அல்லாத வேறொரு இருப்பிடம் உமக்காக உள்ளது. அதிலே நீர் அதிக காலம் இருக்க வேண்டி வரும். அந்த தனிமைப் படுத்தப் பட்ட புதை குழியில் உம்மை தட்டந்தனிய விட்டுவிட்டு உமது அன்பர்களெல்லாம் பிரிந்து சென்றுவிடுவார்கள். எனவே தன் சகோதரனை விட்டும், தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்; தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும் மனிதன் விரண்டு ஓடும் அந்த மறுமை நாளுக்காக உம்முடன் துணையாக வரும் நல்லறங்களை தயார் படுத்திக் கொள்வீராக.
முஃமீன்களின் தலைவரே!
மண்ணறைகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்பட்டு மேலும், இதயங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் அந்த சந்தர்ப்பத்தை கொஞ்சம் நினைவு கூர்வீராக, அதன் போது இரகசியங்கள் எல்லாம் அம்பலப் படுத்தப் பட்டு விடும். எமது பதிவேடோ சிறியதோ, பெரியதோ எதனையும் விட்டு வைக்காது அனைத்தையுமல்லவா பதிந்து வைத்திருக்கும்!
ஆசைகளை துண்டித்து விடும் நிர்ணயிக்கப் பட்ட அந்த மரணம் வரை அந்த நாளைக்கு தயார் படுத்திக் கொள்ள உமக்கு தாரளமாக இப்பொழுது நேரம் உள்ளது. (எனவே அதனை வீணடித்து விடாதீர்!)
மேலும் மடைமை காலத் தீர்ப்புக்களை மக்களின் மீது நிலை நாட்டாதீர், அவர்கள் மீது அநியாயக்காரர்களின் வழிமுறையை கடைப் பிடிக்காது இருப்பீராக, அப்பாவிகளின் மீது அத்துமீருவோரை நியமிக்காதீர், ஏனெனில் அவர்கள் எந்த முஃமினின் மீதும் வரம்பு மீறும் விஷயத்தில் உறவையும் உடன்படிக்கையையும் பொருட்படுத்த மாட்டார்கள், அதனால் அவர்கள் உமது குற்ற சுமைக்கு மேல் இன்னுமின்னும் சுமைகளையும், குற்றங்களையும் சுமக்கும் நிலைக்கு உம்மைத் தள்ளி விடுவார்கள். இப்பொழுது உள்ள உமது மகத்துவத்தை எண்ணி ஏமாந்து விடாதீர், நாளை உமது நிலை என்னவாகும் என்பதை சற்று சிந்திப்பீராக, நீர் மரணத்தின் பிடியில் சிறை வைக்கப் பட்டுள்ளதை மறந்து விடாதீர். நாளை மறுமையில் வானவர்கள், ரசூல் மார்கள் உட்பட அனைவரும் இறைவனின் சன்னிதானத்தின் முன் நிற்க வேண்டும். அதன் போது அனைவரும் நித்திய ஜீவனாகிய இறைவனுக்கே கட்டுப் பட்டு இருப்பார்கள்.
முஃமீன்களின் தலைவரே!
நான் இக்கடிதத்தில் எனக்கு முன்னிருந்த புத்தி ஜீவிகள் கூறிச் சென்ற அறிவுறைகளின் அளவுக்கு சிறந்ததை முன்வைக்காத போதும், தனது அன்பரின் ஆரோக்கியத்திற்காக நல்ல மருந்துகளை எடுத்துக் கூறிய ஓர் நண்பரின் நிலையில் எனது இந்த கடிதத்தை எடுத்து நோக்குவீராக.
அல்லாஹ்வின் சாந்தியும், அருளும், பரகத்தும் உங்கள் மீது கிட்டட்டுமாக...
(நிஹாயதுல் இரப் பீ புனூனில் அதப்)

Please make sure to reach this letter's Sinhala translation copies to our H.E. President, Defence Secretary and BBS officials. Because Allah loves fair rulers. Thank you.
ReplyDelete