சமயங்களில் ஊடுறுவியுள்ள 'அடிப்படைவாதம்' எனும் பிணி முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டும்
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
சமயங்களில் ஊடுறுவியுள்ள 'அடிப்படைவாதம்' எனும் பிணி முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டும் -சமாதானத்திற்கான இலங்கைச் சமயங்களின் பேரவை
அண்மைகாலங்களில் இலங்கையில் நடைபெற்றுக்கொண்டு வரும் நிகழ்ச்சிகளை நோக்கும் பொழுது சில விடயங்கள் மேற்படி பேரவையின் உறுப்பினர்களாகிய எங்களுக்கு மிகவும் கவலை அளிப்பனவாய்த திகழ்கின்றன என சமாதானத்திற்கான இலங்கைச் சமயங்களின் பேரவையின் மட்டக்களப்பு கிளை அதன் பொதுச்செயலாளர் கையொப்பமிட்டு விடுக்கும் செவ்வியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கியமாக இலங்கையின் பல பகுதிகளிலும் மக்களுடைய வழிபாட்டு நிலையங்கள் சிலரால் தாக்கப்பட்டு வருவதையும் ,முஸ்லிம் மக்களுடைய மதத்துடன் தொடர்பு கொண்டுள்ள ஹலால் உணவு சம்பந்தமான அறிக்கை பற்றிப் பல எதிர்ப்புகள் சிலரால் முன்வைக்கப்படுவதும் எங்களுக்கு கவலை அளிப்பதாய் இருக்கின்றது.
இலங்கை ஒரு பல்லின,பல்மொழி,பல்சமய,பல்கலாச்சார மரபுகளைக் கொண்ட ஒரு நாடாக பல நூற்றாண்டுகள் காலமாக விளங்கின்றது.இந்நிலையானது எங்களுக்குக் கிடைத்துள்ள ஒரு பலமேயொளிய பலவீனமல்ல என்று நாங்கள் கருதுகின்றேபம் இப்படியான சூழலில் அனைவரும் இணைந்து அமைதியுடன் வாழ்வது உலக அமைதிக்கே வழிகோலவேண்டிய ஒரு நிலைப்பாடும் முன்னுதாரணமுமேயன்றி பிரிவினைகளுக்கும் ,சண்டைசச்சரவுகளுக்கும் காரணமாய் இருக்கக் கூடாது,இருக்க முடியாது என்று நாங்கள் கருதுகின்றோம்.
அப்பொழுதுதான் நாம் எல்லோரும் மனுக்குலம் என்னும் பாரிய மனித குடும்பத்தின் உறுப்பினர்கள் என்ற நிலைப்பாடும் ,அன்பு,கருணை,இரக்கம்,பரஸ்பர நம்பிக்கை என்னும் விழுமியங்களுக்கு உலகிற்கே ஓர் எடுத்துக்காட்டாகவும் விளங்க முடியும்.இப்படியான ஒரு நிலைப்பாட்டைதான் நாங்கள் விரும்புகின்றோம் இதனையே இந்நாட்டில் வேரூன்றி நிற்கின்ற பௌத்த மதம்,இந்து மதம்,இஸ்லாமிய மதம்,கிறிஸ்தவ மதம் யாவும் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று போதிக்கின்றன.
அண்மைக்காலங்களில் எல்லாச் சமயங்களிலும் 'அடிப்படைவாதம்' எனும் பிணி ஊடுறுவி மேற்கூறிய விழுமியங்களைச் சீர்குலைக்கவும் மனிதர்களை ஒற்றுமையாக வாழவிடாமல் பகைமை எனும் வித்தை நட்டு வளர்க்க முயல்வதையும் நாங்கள் அவதானித்து மனவேதனை அடைகின்றோம்.இவ்விடயம் முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டும்.நீருற்றி வளர்க்கப்படக் கூடாது என்பதை தெளிவாக எடுத்துரைக்க விரும்புகின்றோம்.
கடந்த பல தசாப்தங்களாக பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களைக் காவுகொண்ட அனுபவம் இந்நாட்டு மக்களுக்கு உண்டு.அந்த அகோர இழப்பீடுகளிலிருந்து இன்னும் நாம் முழுமையாக மன அமைதி பெற முடியாமல் தவிக்கிறோம்.இனிமேலும் இப்படியான ஒரு சூழ்நிலை இலங்கைக்கு ஏற்படக்கூடாது என்பதை நாம் வினயமாக கேட்டுக்கொள்கிறோம் என அந்த செவ்வியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment