சமாதானம் மேலோங்க முயற்சி செய்வோம்..!
(A.J.M. மக்தூம் - இஹ்ஸானி)
முஸ்லிம்கள் பொருளாதாரம், கல்வி, அரசியல் மற்றும் முடியுமான எல்லா வழிகளிலும் பலம் மிக்கவர்களாக இருக்க வேண்டும், இதற்காக முயற்சிக்கவும் வேண்டும். அப்போது தான் அத்துமீறி வருவோர், அநீதி, அக்கிரமங்களில் ஈடுபடுவோர் கதி கலங்கி அடங்கி போவர் மேலும் உலகெங்கும் சமாதானம் நிலை பெற முடியும் என்பதும் இஸ்லாத்தின் போதனைகளில் உள்ளதாகும்.
இதனையே பின்வரும் அல் குர்ஆனின் வசனங்கள் தெளிவு படுத்துகின்றன:
وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ وَآخَرِينَ مِن دُونِهِمْ لَا تَعْلَمُونَهُمُ اللَّهُ يَعْلَمُهُمْ ۚ وَمَاتُنفِقُوا مِن شَيْءٍ فِي سَبِيلِ اللَّهِ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنتُمْ لَا تُظْلَمُونَ
அவர் (நிராகரிப்பவர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையானக் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்); அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான்; அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்; (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது. 8:60
وَإِن جَنَحُوا لِلسَّلْمِ فَاجْنَحْ لَهَا وَتَوَكَّلْ عَلَى اللَّهِ ۚ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ
அவர்கள் சமாதானத்தின் பக்கம் சாய்ந்து (இணங்கி) வந்தால், நீங்களும் அதன் பக்கம் சாய்வீராக! அல்லாஹ்வின் மீதே உறுதியான நம்பிக்கை வைப்பீராக - நிச்சயமாக அவன் (எல்லாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான். 8:61
وَإِن يُرِيدُوا أَن يَخْدَعُوكَ فَإِنَّ حَسْبَكَ اللَّهُ ۚ هُوَ الَّذِي أَيَّدَكَ بِنَصْرِهِ وَبِالْمُؤْمِنِينَ
அவர்கள் உம்மை ஏமாற்ற எண்ணினால் - நிச்சயமாக அல்லாஹ் உமக்குப் போதுமானவன் - அவன் தான் உம்மைத் தன் உதவியைக் கொண்டும், முஃமின்களைக் கொண்டும் பலப்படுத்தினான். 8:62
இங்கே கூறப்பட்டுள்ள (குவ்வஹ்) பலம் என்ற வார்த்தை பொதுவானதாகும். அது ஈமானிய பலம், ஒற்றுமையின் மூலம் ஏற்படும் பலம், பொருளாதார பலம், ஊடக பலம் என எல்லா வகையான பலத்தையும் குறிக்கும். அவ்வாறே கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப அது வித்தியாசப் படும் வாய்ப்புமுள்ளது.
குதிரைகள் என்று இங்கு குறிப்பிடப்பட காரணம் இந்த வசனம் இறங்கும் போது இருந்த சமூகத்தின் நிலைமையை கருத்திற் கொண்டேயாகும். அக்காலத்தில் குதிரை வாகனம் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப் பட்டு வந்தமை கவனத்திற் கொள்ளத் தக்கதாகும்.
இப்படியான வலிமைகளைப் பெறுவதற்கான நோக்கம் அநியாயம், அக்கிரமங்களில் ஈடுபடுவதற்கோ அல்லது தீவிர வாத செயல்களில் ஈடுபடுவதற்கோ இல்லை. மாற்றமாக அக்கிரமக் காரர்கள் இதன் மூலம் அச்சம் கொண்டு அதில் இருந்து தவிர்ந்து கொள்ள முற்படுவர். அதனால் சமாதானத்தையும், இனங்களுக்கிடையிலான சக வாழ்வையும், ஐக்கியத்தையும் கட்டி எழுப்ப முடியுமாகும் என்பதனையே இத்திரு வசனங்கள் தெளிவு படுத்துகின்றன.
இறைவனின் கட்டளைகளுக்கு முழுமையாக கட்டுப் பட்டு இறைத் தூதரின் வழிமுறைகளை முழுமையாக நமது வாழ்வில் எடுத்து நடக்கும் அதே நேரத்தில் சண்டை சச்சரவுகள், பிரிவு, வேற்றுமை என்பன எம்மை முழுமையாக பலகீனப் படுத்தி குழப்பத்தில் தள்ளிவிடும் என்பதையும் புரிந்து கொண்டு செயலாற்றுவது அவசியமாகும்.
وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ ۖ وَاصْبِرُوا ۚ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ
இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் முரண் பட்டுக் கொள்ளாதீர்கள் கொள்ளாதீர்கள்; (அவ்வாறு முரண் பட்டுக் கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான். 8:46
எதிர் காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் நிலை எவ்வாறு அமையும் என்பதை இறைத் தூதர் (ஸல்) அவர்கள் தெளிவு படித்தியுள்ளார்கள். அது நாம் இருக்கும் இந்த சூழ் நிலை போன்றதையே குறிக்கும் என கருதுகிறேன். அந்த செய்தி பின்வருமாறு,,
"விருந்துக்கு அழைக்கப் பட்டவர்கள் உணவு பரிமாறப்பட்டவுடன் (அதனை உண்டு முடித்திட) ஒன்று சேர்வது போன்று ஒரு காலத்தில் இஸ்லாத்தின் எதிரிகள் உங்களை அழித்தொழித்திட ஒன்று திரள்வார்கள்". என இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய போது, "நாம் அப்போது குறைவானவர்களாக இருப்போமா?" என ஒரு நபித் தோழர் வினா எழுப்பினார். அதற்கு அவர்கள்: "அந்த நேரத்தில் நீங்கள் அதிகமாகவே இருப்பீர்கள். எனினும் வேகமான நீர் ஓட்டத்தின் விளைவால் ஏற்படும் நுரையைப் போன்று பலம் அற்றவர்களாக இருப்பீர்கள். மேலும் எதிரிகளுக்கு உங்கள் மீது இருந்த அச்ச உணர்வை இறைவன் நீக்கி இருப்பான், உங்களை "வஹ்ன்" ஆட்கொண்டிருக்கும்". என்று கூறிய போது ஒருவர்: "வஹ்ன்" என்றால் என்ன? இறைத் தூதரே! என்று வினவினார். அப்போது, "அதுதான் உலக ஆசையும், மரணத்தின் மீதுள்ள வெறுப்பும்" என பதிலளித்தார்கள்.
இங்கே இறைத் தூதர் (ஸல்) அவர்கள் நமது பலகீனத்துக்கான இரண்டு காரணிகளை எடுத்துக் கூறியுள்ளார்கள். அவற்றை தூர எரிந்து விட்டு நம்மைப் பலப் படுத்திக் கொள்ள முனைய வேண்டும்.
ஒற்றுமை என்பது முஸ்லிம்களின் பலமான ஆயுதம், அதன் மூலம் அவர்கள் நிறையவே சாதித்திருக்கிறார்கள் என்பதை விளங்கிக் கொண்ட தீய சக்திகள் ஒரு கட்டத்தில் முஸ்லிம் தலைமைகளுக்குள் விரிசலை உண்டு பண்ணி, முஸ்லிம்களைப் பிளவு படுத்தி பலமிழக்கச் செய்வதில் வெற்றியும் கண்டனர்.
எனினும் அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா முஸ்லிம்களை ஒற்றுமைப் படுத்த மேற்கொண்ட ராஜதந்திர தந்திர நகர்வுகள் இதற்கு பேரிடியாகவே அமைந்தது. அனைத்து தரப்பினர்களையும் உள்வாங்கி ஒற்றுமையாக முஸ்லிம் சமூகத்தின் வெற்றிக்காக ஒரே அணியாக செயல் பட ஜமிய்யதுல் உலமா மேற்கொண்டு வரும் திட்டம் பெரும் வரவேற்பையும், வெற்றியையும் அடைந்துள்ளதை அந்த பேரினவாத சக்திகள் நன்றாகவே அறிந்து வைத்துள்ளன.
எனவேதான் அவர்களின் பார்வை இப்போது உலமா சபையை நோக்கி சென்றுள்ளது. அவர்களை சின்னாப் பின்னப் படுத்துவதன் மூலம் முஸ்லிம் சமூகத்தை மீண்டும் செயற் திறனற்ற சமூகமாக இருக்க செய்ய முடியும் என்ற குறிக்கோளுடனேயே அந்த பேரினவாத சக்திகள் செயற்பட்டு வருகின்றன. இந்த வலையில் நாமும் சிக்கி விடாது அவதானமாக செயற் பட்டு மேலும் ஜமிய்யதுல் உலமாவைப் பலப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.
நாம் முஸ்லிம்கள் என்ற வகையில் சமாதானத்தையும், ஐக்கியத்தையும் விரும்ப வேண்டும். வன்முறைகள், குழப்பங்களுக்கு எதிராக செயற்பட வேண்டும். இஸ்லாத்தின் வெற்றிக்கென சட்ட விரோத செயல்கள் எதனையும் மேற்கொள்ளவும் கூடாது. அதே நேரத்தில் அடுத்தவர் மூலம் அநீதம் செய்யப் படுவதை அனுமதிக்கவோ அல்லது தன்மானத்தை பிறரிடம் இழந்த கோழைகளாகவோ இருக்கவும் முடியாது.
இனவாதிகள் எந்த அச்சமுமின்றி இப்படியாக பகிரங்கமாக இனவாத கோஷங்களை எழுப்புகின்றனர்; அவ்வப்போது சில தாக்குதல்களிலும் ஈடுபடுகின்றனர். ஏன் எங்களை யாரும் திருப்பி தாக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையிலா? அப்படி இருக்கவே முடியாது! மாற்றமாக அவர்கள் கக்கும் துவேஷ வார்த்தைகள் முஸ்லிம்களில் யாராவது ஒருவர் தம்மை தாக்க வேண்டும் என்றும், அப்போது தான் அதனை காரணம் காட்டி அவர்களை அழிக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர்கள் திட்டமிட்டுள்ளதை உணர்த்துகிறது.
அப்படி என்றால் அவர்களுக்கு எதிரான பதில் தாக்குதல்களை முறியடிக்கும் வல்லமை அவர்களிடம் நிச்சயம் இருக்க வேண்டும். அல்லது நாம் பாதுகாக்கப் படுவோம் என்ற உறுதி இருக்க வேண்டும். மேலும் முஸ்லிம் சமூகத்தை இல்லாதொழிப்பதற்கான பலமும் அவர்களிடம் இருக்கிறது என்ற நம்பிக்கையும் இருக்க வேண்டும்.
இதற்கான பலத்தையும், வளத்தையும் எங்கிருந்து அவர்கள் பெறுகிறார்கள்? இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரத்திற்காக நிறையவே செலவும் செய்கிறார்கள்; இவ்வளவு பெரும் தொகை பணத்தை எங்கிருந்து பெறுகிறார்கள்?
இவர்களின் திடீர் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ளும் திறன் முஸ்லிம் சமூகத்திடம் இருக்கிறதா? முஸ்லிம் அரசியல் வாதிகளை மற்றும் அரசாங்கத்தை மாத்திரம் நம்பியிருக்கலாமா?
இவற்றையெல்லாம் சிந்தித்து செயற்பட்டு நமக்கெதிரான சவால்களை முறியடிக்க எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாக. ஆமீன்

அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஇச் சகோதரரின் ஆக்கம் பார்வையிடும் மக்களுக்கு ஓர் கூக்கம்!
இவர் சொன்னது போல் நம் மக்கள் எங்கே?
முஸ்லீங்கள் என்றாலே பிஸ்னஸ் மென் (Business Men).
இங்கே இல்லை!!!
(Technology) தொழில் நுட்பதுறையில்
(Science) விஞ்ஞானம்/அறிவியல் துறையில்
(Aeronautics)ஆகாய விமான கலையில்
(Police/Forces)இத் துறையில.
எத்தனை முஸ்லீம் Scientists நம் மத்தியில்?
எத்தனை முஸ்லீம் Doctor கள் புதிய சாதனைகள் படைத்து நமது நாட்டுக்கு பெறுமை தேடி தந்தது?
எத்தனை முஸ்லீம் சகோதரர்கள் தொழில் நுட்பத்தில் சாதனை படைத்தவர்கள்?
குறைந்தபட்ச்சம், விலையாட்டிலாவது சாதனைகள்? எதிலுமில்லை.
முற்றுமுலுதாக, இல்லை என்று சொல்ல முடியாது. நம்மத்தியிலும் இருக்கரார்கள். அதிகமான (MP)s மந்திரிகள், மிகவும் அதிகமான செல்வந்தர்கள், மௌலவிகள், ஆசிரிய ஆசிரயர்கள், குறைந்தலவு டாக்டர்கள், வக்கீல்கள், பொறியியல் வல்லுநர்கள், மற்றும் சிலர்.
நாம் சிறு வயதில் மார்க்கத்தை கொஞ்ஞம் கற்றுக்கொள்கிறோம், பெறு வயதில் வியாபாரத்தை அதிகம் கற்றுக்கொள்கிறோம், முதியவரானதும் பள்ளிக்குள்ளே சென்று அமல் தேட கற்றுக்கொள்கிறோம். இது தான் நமது முஸ்லீங்களின் பெறும் சாதனை. எனவே இவைகளையும் கொஞ்ஞசம் மாற்றியமைக்க நம்மக்கள் முன்வரவேண்டும்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக ஆமீன்!